"ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினது புகழ் பேச வேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்க வேண்டும் உனை மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்"
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்"
-ஆசான் அருளாளர் வள்ளலார்-
மனித நேய மாண்பாளர் வள்ளலார்
“அருட்பெருஞ் ஜோதி; அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங் கருணை; அருட்பெருஞ் ஜோதி”
உலகமெல்லாம் உய்ய இந்த மகத்தான மா மந்திரத்தை அருளிய மகான் வள்ளாலார் இராமலிங்க அடிகள். எல்லா நிலைகளையும் கடந்து நிற்கின்ற அவதாரபுருடர் தான் அடிகளார்! எளிமையான வாழ்க்கையையே அவர் வாழ்ந்தார்! அன்பர்களும், அடியார்களும் படும் துன்பங்கள் கண்டும் துயரங்கள் கண்டும் பலவாறு மனம் வருந்திய வள்ளலார். அது கண்டு உள்ளம் இரங்கிப் பாடியிருக்கிறார்!
”வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உறக்கண்டுளந்துடித்தேன் ஈடின்மானிகளாய் ஏழைகளாய் நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்”
என்று மனம் உருகுகிறார். அது மட்டுமா! வெறும் இரக்கப்படுவதோடு நின்று விடவில்லை அவர்.
“வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட
மரபினில்யான்ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்த
ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ
இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ
மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு
மகன்அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ
கோழைஉல குயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
கொடுத்தருள்நின் அருள்ஒளியைக் கொடுத்தருள்இப் பொழுதே!
-என்று இறைவனிடம் அவர்களின் துயர் தீர்ப்பதற்கு தமக்கு அருள் ஒளியை ற்றலைத் தருமாறும் இறைஞ்சுகிறார்! தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த அந்த வள்ளலின் வாழ்வே ஒரு தவம் தான் என்றால் அதில் மிகையில்லை அல்லவா?.
பிற உயிர்களையும் தம் உயிர் போல் பாவிக்கும் கருணை உள்ளம் கொண்டவராக வள்ளலார் விளங்கினார்.
எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விழைந்த தாலோ!
-என்று பிறர் உயிர்களையும் தம் உயிர் போல் போற்றி வாழும் மனிதர்களின் அடிமை ஏவல் புரிந்திடவும் தனக்குச் சம்மதம் என்று கூறுகிறார்.
வள்ளலார் வெறும் ஆன்மிகவாதியோ, அருளாளரோ மட்டுமல்ல; மிகச் சிறந்த சமூகச் சீர்த்திருத்தவாதியாகவும், சிந்தனைப்புரட்சியாளராகவும் விளங்கினார். “கலையுரைத்த கற்பனையே கலையெனக் கொண்டாடும் கண் மூடி வழக்கமெல்லாம் மண் மூடிப் போக” என்று அவர் அறச்சீற்றத்தோடு உரைத்திருப்பதிலிருந்தே அவரது உளப்பாங்கை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
“ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்”
- என்று, ‘வேண்டும், வேண்டும்’ என்று இறைவனைத் தொழும் பாடலாகப் பாடியதிலிருந்து அவரது நேர்மறைச் சிந்தனை பற்றி நாம் அறிந்து கொள்ள இயலுகிறது.
சைவ சமயம் சமூகத்தின் மூடப்பழக்கங்களால் தொய்வுற்றிருந்த காலத்தில் தோன்றியவர் வள்ளலார். காலம் காலமாகப் புரையோடிப் போயிருந்த சமூக மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்து அவர் குரல் எழுப்பினார். தமது பாடல்கள், உரைநடைகள், சொற்பொழிவுகள் மூலமும் அவற்றை மிகக் கடுமையாகச் சாடினார். திருவள்ளுவருக்குப் பின் வந்த காலத்தில் சித்தர்கள் தங்கள் பாடல் மூலம் சமூகப் புரட்சி செய்தனர். சிவவாக்கியர், பட்டினத்தார் போன்றோர் தங்கள் பாடல்கள் மூலம் சமூக மூட நம்பிக்கைகளை, சடங்குகளைச் சாடினர். அவர்களுக்குப் பின் வந்த மரபில் பொதுவுடைமை பேசும் முதல் குரலாக ஒலித்தது வள்ளலாரின் குரலே! பிற்காலத்தில் சமூகச் சீர்திருத்தத்திற்காகப் பாடுபட்ட பாரதி, பாரதிதாசன், பெரியார் போன்றோருக்கும் காந்தியடிகளுக்கும் முன்னோடியாக விளங்கியது இராமலிங்க அடிகளார் தான் என்றால் அது மிகையில்லை.
”சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
தியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகல்லவே!”
- என்று சாதி சமய வேறுபாடுகளை மிகத் தீவிரமாகக் கண்டித்து அறிவுறுத்தி இருக்கிறார்.
”இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டு..
என்று போலிச் சமயங்களையும் தத்துவக் குப்பைகளையும் சாடும் வள்ளலார், போலி ஆகமங்களையும், சாத்திரங்களையும் மிகக் கடுமையாக
”வேதாக மங்களென்று வீண்வாதம் டுகின்றீர்
வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்
சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
என்ன பயனோ இவை?”
என்று எதிர்த்துரைத்திருக்கிறார்.
சமத்துவம் சகோதரத்துவத்தையும் வலியுறுத்திய வள்ளலார், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என ஜாதி வேறுபாடுகளை மிகக் கடுமையாக எதிர்த்தார். “ஆண்டவன் முன் அனைவரும் சமமே, உயர்வு தாழ்விலாது அனைவரும் இறைவனை வணங்கலாம்” என்ற ன்ம நேய ஒருமைப்பாடே அவர் தம் கொள்கையாகும்.
எப்பொழுதும் இறைவனைப் பற்றிய நினைவோடு தனித்திருக்க வேண்டும். அவனை அடைய வேண்டுமென்ற மெய்ஞானப் பசியோடு இருக்க வேண்டும். எப்பொழுதும் புலன்களின் இச்சைகளுக்குப் பலியாகாமல் விழித்திருக்க வேண்டும் என்பதை எவ்வளவு அழகாக ‘தனித்திரு! விழித்திரு! பசித்திரு!’ என்ற அற்புதமான தத்துவத்தில் விளக்கியுள்ளார்!
“ஒருவர் பிறருடைய துன்பத்தைக் கண்டு இரங்கி அதனைப் போக்க முற்பட வேண்டும். உரத்துப் பேசுதல், கையை வீசி வேகமாக நடத்தல், கடுஞ் சொல் கூறுதல், சண்டையிடுதல், பொய் வழக்குப் போடுதல் இவை கூடவே கூடாது. பூமி அதிர நடக்கக் கூடாது.” - என்றெல்லாம் அவர் கூறிய அறிவுரைகள் என்றும் எண்ணி மகிழத் தக்கவை.
“மனம், வாக்கு, காயம் என மூன்றினாலும் ஒருவன் தூயவனாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் நலத்திற்காக மட்டுமே பிரார்த்தனை செய்தல் கூடாது. மாறாக அனைத்து உலக உயிர்களுக்ககவும், அவற்றின் நலத்திற்காகவும் பிரார்த்தனை செய்தல் வேண்டும். அந்தப் பொதுப் பிரார்த்தனையிலேயே அனைத்து நன்மைகளும் அடங்கி இருக்கின்றது என்பதை உணர வேண்டும்.” - என்று அவர் கூறியுள்ள அறிவுரைகள் என்றும் நாம் பின்பற்றத் தக்கவையாகும். அவரது தத்துவங்களையும், அறிவுரைகளையும் சரியாகப் பின்பற்றுவது நம் ஆன்ம உயர்விற்கும், வாழ்க்கை வளத்திற்கும் வழிவகுக்கும் என்பதே உண்மை.
நன்றி:
Vallalar.org