Saturday, February 10, 2018

கொட்டைக்கரந்தை.

"கொட்டைக் கரந்தைதனைக் கூசாம லுண்டவர்க்கு
வெட்டை தனியுமதி மேகம்போந்- திட்டச்
சொறிசிரங்கு வன்கரப்பான் றேற்றாது நாளும்
மறிமலமுந் தானிறங்கு மால்"



கொட்டைக்கரந்தை உடலை பலப்படுத்தும்; குளிர்ச்சியுண்டாக்கும்; வாதத்தைக் குணமாக்கும், மலமிளக்கும். இலை, பூக்கள், உடலை பலப்படுத்தும்; குடல் புண்களை ஆற்றும். விதை, வேர், பசியைத் தூண்டும்; குடல் புழுக்களைக் கொல்லும்.
கொட்டைக்கரந்தை முழுத்தாவரம் கைப்புச் சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது. இது பற்களுள்ள, நறுமணம் கொண்ட இலைகளை மாற்றடுக்கில் அடர்த்தியாகக் கொண்ட சிறு செடி வகைத் தாவரம். சிறு பந்து போன்ற, உருண்டையான, சிவப்பும், பச்சையும் கலந்த பூங்கொத்தினை நுனியில் கொண்டது.
இது தென்னிந்தியாவிற்கே உரிய மூலிகை. தோட்டங்களிலும், வயல் நிலங்களில் அறுவடைக்குப் பின்னர் இயல்பாக வளர்கின்றது. இதிலிருந்து மருத்துவத்திற்குப் பயனாகும் ஒருவித எண்ணெய் பெறப்படுகின்றது. நறுங்கரந்தை என்கிற மாற்றுப் பெயரும் உண்டு. இலை, பூ, விதை, வேர், வேர்ப்பட்டை போன்றவை மருத்துவப் பயன் கொண்டவை.
தோல்நோய்கள் குணமாக இலைத்தூள், வேளைக்கு ½ தேக்கரண்டி வீதம், தினமும் இரண்டு வேளைகள் சாப்பிட்டு வர வேண்டும்.
 கொட்டைக்கரந்தைத் தைலம்
முடிவளர்ச்சிக்கும், முடி கருமையடையவும் கொட்டைக் கரந்தை தைலம் பயன்படும். கொட்டைக் கரந்தை இலைச்சாறு, தேங்காய் எண்ணெய், சம அளவாக எடுத்துக் காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்கான எண்ணெயாகப் பயன்படுத்திவர வேண்டும்.
வெள்ளைப்படுதல் குணமாக இலைகளை உலர்த்தித்தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு, வெந்நீரில் கலந்து குடித்துவர வேண்டும். தினமும் 3 வேளைகள், 10 நாட்களுக்குக் குடிக்கலாம்.
இரத்த மூலம் சரியாக வேர்ப்பட்டையை அரைத்து, எலுமிச்சம்பழ அளவு, வெண்ணெயில் கலந்து சாப்பிட வேண்டும்.
குடல் புழுக்கள் வெளியாக விதைகளைச் சேகரித்து, உலர்த்தி, தூள் செய்து, ஒரு தேக்கரண்டி அளவு, தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும்.
 மூளை, இதயம், நரம்புகள் பலமடைய
பூக்காத செடிகளை வேருடன் பிடுங்கி, நிழலில் உலர்த்தி, பொடி செய்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் ஒரு தேக்கரண்டி அளவு, இரவில் பாலுடன் சாப்பிட வேண்டும். 6 மாதங்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.


     

Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html




Thursday, February 1, 2018

அகத்தியப் பெருமானின் அருள்வாக்கு



"புற விடயங்கள் என்னை பாதிக்கின்றன. நான் விரும்புகின்ற மெய்ஞானத்தை நோக்கி செல்ல விடாமல் தடுக்கின்றன" என்று மனிதர்கள் எண்ணுவது ஒரு வகையில் நியாயம்தான் என்றாலும் இந்த நிலையையும் ஒரு மனிதன் தாண்டி செல்ல வேண்டும். புற விடயங்களோ, வேறு விடயங்களோ ஒரு மனிதனின் மெய்யான மெய்ஞானத்திற்கு எதிராக இருக்கிறது அல்லது அந்த நோக்கத்தை தடை செய்கிறது என்றாலே அந்த மனிதன் இன்னும் நன்றாக, உறுதியாக, உறுதியாக, உறுதியாக மெய்ஞானத்தை பற்றவில்லை. அதை நோக்கி செல்லவில்லை என்பதே மெய்யாகும்.

எனவே ஒரு உறுதியான உறுதிப்பாடு ஒரு மனிதனின் ஆத்ம நிலை குறித்தும் உடல் சார்ந்து இருக்கின்ற வாழ்க்கை எதற்கு? இந்த ஏணி எதற்கு? இந்தத் தோணி எதற்கு? இந்த வாகனம் எதற்கு? வாகனத்திலேயே வாழப்போகிறோமா? அல்லது நதியை கடக்க மட்டுமே இந்தத் தோணியா? என்பதைப் புரிந்து கொண்டு நதியைக் கடக்கும் வரை தோணியின் முக்கியத்துவம். ஊரை சென்றடையும் வரை வாகனத்தின் முக்கியத்துவம். அஃதொப்ப லிகிதம் பத்திரமாக சென்று யாரிடம் சேரவேண்டுமோ, சேரும் வரை உறையின் முக்கியத்துவம், இந்த அளவிலே உடல் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம். எனவே அதற்காக உடலைப் பேணுதல் அவசியம் என்றாலும் உடல் உணர்ந்து கொடுக்கும் உணர்வுகளுக்குள் உள்ளம் விழுந்துவிடக்கூடாது.

அங்கே ஆத்மாவின் சொல்படி உடல் கேட்டால் அது மாயையை வெல்ல நல்லதொரு பயணமாக இருக்கும். உடலின் இச்சைக்கு ஏற்ப ஆத்மா செல்ல துணிந்தால் அங்கே மாயை எனும் கடலுக்குள் அந்த ஆத்மா முழுகிக்கொண்டே இருக்கிறது என்பது பொருளாகும். ஒவ்வொரு தினமும் ஒரு மனித வாழ்விலே மனித நோக்கத்திலே உலகியல் வெற்றியை எந்த அளவு குவித்திருக்கிறோம் என்று எண்ணும். ஆனால் அது ஒரு நிலை என்றாலும் அதுவே ஒரு உன்னத நிலை அல்ல என்பதை மெய்யான மெய்ஞான வழியிலே வருகின்ற ஆத்மாக்கள் உணர வேண்டும்.

ஒவ்வொரு தினமும், ஒவ்வொரு கணமும் பாவங்கள் சேராமல் விழிப்புணர்வோடு வாழ்வதும் முன்னரே சேர்த்த பாவங்களை தொலைப்பதுமே ஒரு மெய்யான வாழ்வாக இருக்க வேண்டும் ஒரு மெய்யான மெய் ஞானத்தை நோக்கி செல்ல வேண்டும் என்று எண்ணுகின்ற மனிதனுக்கு. எனவே வாதங்கள், விசாரங்கள், தத்துவ விளக்கங்கள், நிறைய நூல் ஓதுதல் என்றெல்லாம் ஒரு மனிதனை ஆன்மீகப் பாதைக்கு இட்டு செல்லலாம் அல்லது ஒரு குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

இருந்தாலும் இது போன்ற நூல்களை வாசிப்பதும், வாசித்ததை மனதிலே வைத்து யோசிப்பதும், யோசித்த பிறகு இறையை நோக்கி எதை யாசிக்க வேண்டும் ? என்பதை உணர்வதும் பிறகு எப்படி பூசிக்க வேண்டும் ? என்பதையும் மனிதன் மெல்ல, மெல்ல காய்த்தல், உவத்தலின்றி நடுநிலையில் நின்று புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும்.

-சித்தன் சிவமயம்
SiththanArul
https://www.facebook.com/groups/siddhar.science