Sunday, July 31, 2016

தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிருக்கு மருத்துவம்..!!!

உடற்பிணிகளைப் பற்றி அறிந்துள்ளோம். உயிர்ப்பிணியைப் பற்றிச் சிந்தித்ததுண்டா..?! உயிருக்கு ஏற்பட்ட பிணி என்ன..?! அதுதான் பிறவிப்பெருங்கடலில் அகப்பட்டுக் கொண்ட துன்பம். இதுவே பிறவிப்பிணி என்பதாகும். இந்தப் பிணிக்கு மருத்துவம் உண்டா..?! ஆம்! அரிய பிறப்பான மனிதப்பிறப்பை பெற்றவர் அனைவரும் இப்பிணியிலிருந்து விடுதலை அடையலாம். இப் பிறவிப்பிணி நீக்கும் ஒரே மருத்துவர் ஞானபண்டிதரான ஆசான் முருகப்பெருமான் ஆவார் என்பது முற்றுப்பெற்ற சித்தர்கள் கூற்றாகும்.

இறப்பு என்பது உயிர் இழப்பல்ல, அது உடல் இழப்பு. அகால மரணங்களைத் தவிர மற்ற மரணங்களை நாம் அழுவதை விடுத்து மாறாக ஒப்பாரி செய்து, பறை அடித்து ஆடிப்பாடி கொண்டாடுவதே தமிழர் மரபு. ஏனெனில் நம் முன்னோர் பிறப்பு-இறப்புப் பற்றித் தெளிவாக அறிந்திருந்தனர். அதாவது உயிரானது ஆக்கப்படுவதும் இல்லை மற்றும் அழிக்கப்படுவதும் இல்லை. நம் உயிரானது பல் வகையான உடல்களுக்குள் நம் வினைகளுக்கேற்ப பிறப்பு-இறப்பு(கர்மா) சக்கரத்தில் மாட்டிப் பிறவிப்பிணியால் தொடர்ச்சியாக அவதியுறுகின்றது.

இவ்வாறான பிறவிப்பிணியை 'முற்றுப்பெற்ற குரு' முகாந்திரமாக நீக்கி, நாம் எங்கிருந்து வந்தோமோ அந்த வீட்டை மீண்டும் அடைவதே ஆன்ம விடுதலை / வீடு பேறடைதல் / இறையுடன் இரண்டறக் கலத்தல் / சாகாக்கல்வி / மரணமிலாப் பெருவாழ்வு / மோட்ச கதி / பேரின்பம் அடைதல் / பேரறிவு பெறல் / முக்தி அடைதல் / இறைநிலை(சிவபதம்) எய்தல் / முற்றுப்பெறல் எனப் பலபெயர்களால் அழைக்கப்படுகின்றன.

இது மனிதப் பிறப்பிற்கே சாத்தியம். ஆதலாலேயே மனிதப் பிறப்பு என்பது மிகவும் அரிதானதாகும். இந்த மனிதப் பிறப்பெடுக்க முன் நம் ஆன்மாவானது மனிதரல்லாத எண்ணிலாப் பிறப்புக்களை எடுத்துள்ளது என்கின்றனர் சித்தபெருமக்கள். பல பிறவிகள் எடுத்த பிறகே இந்த மானிடப்பிறவியை அடைகிறோம். சிவபுராணத்தில் "புல்லாய், பூடாய், புழுவாய், மரமாகி, பல் மிருகமாய், மனிதராய், பேயாய், கணங்களாய், வல் அசுரராய், தேவராய் சொல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் !" என்கிறார் ஆசான் மாணிக்கவாசகப் பெருமான்.

"அரிது! அரிது! மானிடர் ஆதல் அரிது
மானிடராயினும்..
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்தலாயின்
வானவர் நாடி வழி பிறந்திடுமே!"
- ஆசான் ஓளவையார்

பசித்திருந்து நோன்பு இயற்றுவதே தவம். பசித்தோர்க்கு உணவளிப்பதே உயர்ந்த தானம். தானமும் தவமும் செய்பவர்க்கு இறையருள் கைகூடும். அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. அதனிலும் அரிது கூன், குருடு, செவிடு இல்லாமல் பிறத்தல் அரிது, அதனிலும் அரிது ஞானம் கிடைத்தல் அரிது. அதனிலும் அரிது தானம், தவம் போன்றவை கிடைத்தல் அரிது என்றும். தானமும் தவமும் செய்யும் வாய்ப்புக் கிடைத்துவிட்டால் இறையுடன் இரண்டறக் கலத்தற்கான வழி தானே கிடைத்துவிடும் என்று கூறி இருக்கிறார் ஆசான் ஓளவையார் பெருமாட்டி

பிறவியே அறியாமை மிகு பேதமையென்றும், அந்தப் பிறப்பு-இறப்பு(கர்மா) எனும் பிணியை நீக்கி நாம் வெற்றி பெறுவதே உயர்ந்த அறிவென்கிறார் பிறவிப்பிணி நீக்கிய மகான் திருவள்ளுவப் பெருமான்.

''பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.''
- திருக்குறள் (ஆசான் திருவள்ளுவர்)

ஒருவர் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலையை விரும்ப வேண்டும். அதை (இறையிடம்) வேண்டினால் மற்றவை தானாகவே கிடைக்கும். எனவே, மீண்டும் மீண்டும் பிறந்து துன்பப்படாமலிருக்கப் பேரறிவான "பிறவாமை"யை நாம் இறையிடம் வேண்டுவோம்.

"வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்."
- திருக்குறள் (ஆசான் திருவள்ளுவர்)

எனவே கிடைத்த இந்தப் பிறவியை ஒவ்வொருவரும் வீணாக்காமல் சரியாகப் பயன்படுத்திப் பலன் அடைய வேண்டும் என்கிறார் ஆசான் திருமூலர் பெருமான்.

“பெறுதர்கரிய பிறவியை பெற்றும்
பெறுதற் கரிய பிரானடி பேணார்
பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே”
- திருமந்திரம் (ஆசான் திருமூலர்)

அரிய பிறப்பான மனிதப்பிறப்பை பெற்றவர் அனைவரும் பிறவிப்பிணியிலிருந்து விடுதலை அடையலாம். இப் பிறவிப்பிணி நீக்கும் ஒரே மருத்துவர் ஞானபண்டிதரான ஆசான் முருகப்பெருமான் ஆவார்.

ஓம் ஆசான் முருகப்பெருமான் திருவடிகள் சரணம்
ஓம் ஆசான் மாணிக்கவாசகர் திருவடிகள் சரணம்.
ஓம் ஆசான் ஓளவையார் திருவடிகள் சரணம்.
ஓம் ஆசான் திருவள்ளுவர் திருவடிகள் சரணம்.
ஓம் ஆசான் திருமூலர் திருவடிகள் சரணம்.

ஓம் எண்ணிலாக்கோடி சித்த, ரிஷி, கணங்கள் திருவடிகள் போற்றி

நன்றி! 
கண்ணன் Suryà
 Aum Muruga ஓம் முருகா 
05/08/2015

ஆசான் அகத்தீசர் அருளிய துறையறி விளக்கம்

ஆசான் அகத்தீசர் அருளிய துறையறி விளக்கம்:

"பெட்டியிலே அடைத்து வைத்த 
பாம்புதன்னைப்
பிடித்தாட்டத் தெரியாமல் 
புலம்புவார்கள்
எட்டிலே இரண்டு
வைத்து ஆட்டினாக்கால்
இருபுறமும் ஆடிவர
எதிரேயேறும்
கட்டிற்குள் நில்லாது
சிரசிலேறும்
கடைவாசல் சுழிமுனையில்
கட்டும்வாசி
கட்டியின்கீழ் திருவாடுதுறைப்
பார்க்கில்
சூரியனும் சந்திரனும்
தோற்றமாமே."
-ஆசான் அகத்தீசர்


பெட்டி என்பது வயிறு, பாம்பு இடகலை பின்கலை சேர்ப்பது எனப்படும்.. எட்டு என்பது அகாரம், இரண்டு என்பது உகாரம்.. இது இரண்டையும் சேர்ப்பது நம்மால் சும்மா சுழிமுனையில் கும்பிக்கச் செய்ய முடியாது. இதற்கு ஆசான் முருகப்பெருமான் ஆசி வேண்டும். தினமும் ஞானிகளை பிரம்ம முகூர்த்தத்தில் பூசை செய்ய வேண்டும். பத்மாசனம் இட்டு ஆசானை நினைத்து மூச்சுக்காற்றை உள்ளே இழுக்க வேண்டும்.

மேலும் கருத்துக்களை அறிய ஞானத்திருவடி நூலை வாங்கி படியுங்கள்! குருநாதர் மகான் அரங்கமகாதேசிகர் அவர்கள் ஞானிகளின் பாடல்களுக்கு தான் உணர்ந்த இரகசியங்களை நம்பால் கருணை கொண்டு எளியமுறையில் அருளிய அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல். இது ஆன்மீக அன்பர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
ஓங்காரக்குடில் Ongarakudil
 Aum Muruga ஓம் முருகா