Tuesday, September 27, 2016

சிவபெருமானின் சிறப்பு


உலகுக்கெல்லாம் ஒப்பற்ற தலைவனாய் உள்ளவன் சிவன். இயற்கையை உடலாகக் கொண்டவன். இறைவனுடைய சிறப்புகளை இவ்வந்தாதி எடுத்துரைக்கிறது. இறை இயல்பும், இறைமைக் குணங்களும் ஆங்காங்கே எடுத்துரைக்கப்படுகின்றன. ஈகைக் குணம் உடையவன் சிவன். பல நாள் பணிந்து இரந்தால் 

எவ்வுலகும் அளிக்கும் இயல்புடையன் - (78)

என்று காரைக்கால் அம்மையார் பாடுகிறார்.

சிவபெருமான் வேண்டியார்க்கு வேண்டிய வடிவில் வருபவன் என்பதை,

எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத்து அவ்வுருவே யாம் - (33)

என்ற பாடலிலும், அட்ட மூர்த்தியானவன் என்பதை,

அவனே இருசுடர் தீ ஆகாசமாவான்
அவனே புவிபுனல் காற்றாவான் - அவனே
இயமானனாய் அட்ட மூர்த்தியுமாய் ஞான
மயனாகி நின்றானும் வந்து - (21)

என்ற பாடலிலும் விளக்குகிறார் அம்மையார். (ஞாயிறு, திங்கள், ஐம்பூதங்கள், உயிர் ஆகிய எட்டும் அவனே, இதனை அட்டமூர்த்தி என்ற சொல்லால் குறிப்பிடுவார்கள். இயமானன்= உயிர்)

சிவபெருமான் எவ்வுருவில் இருக்கிறான் என்று சொல்ல இயலாது. எல்லா உருவிலும் இருக்கிறான். அவன் ஒருவராலும் அறியப்படாதவன் என்பதே அவன் இலக்கணமாம். அவ்விலக்கணம் அம்மையாரால் பின்வரும் பாடலில்
பேசப்படுகிறது.

அன்றும் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்
இன்றும் திருவுருவம் காண்கிலேன் - என்றும் தான்
எவ்வுருவோன் நும்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது - (61)

எளிமையானவன். ஆனாலும் எங்கும் வியாபித்திருப்பவன். எல்லாமே அவன்தான் என்பதை,

அறிவானும் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற
மெய்ப்பொருளும் தானே விரிசுடர் பார் ஆகாயம்
அப்பொருளும் தானே அவன் - (20)

என்ற பாடல் உணர்த்தும்.

ஒப்பற்ற தலைவன்

சிவபெருமான் ஆதியானவன். உலகமெல்லாம் தோன்றுவதற்கு முன்னும் இருந்தவன். எல்லா உயிர்களையும் தோற்றுவிப்பவன். எல்லாவற்றையும் அழிக்கும் அழித்தற் கடவுளும் அவனே.

இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி
இறைவனே ஈண்டிறக்கம் செய்வான் - (5)

என்று அவன் சிறப்புப் பேசப்படுகிறது.

இறைசக்தி மிகப் பெரியது. இறைவன் நடனமாடும் போது இறைவன் அடி, முடி, கை முதலியன ஏழு உலகங்களில் மட்டும் அடங்கிக் கிடப்பன அல்ல. இவை அவ்வுலகங்களைக் கடந்தும் செல்வன. இறைவன் அடியும், முடியும், மேலும், கீழும் உழன்று தாக்கி, அரங்கு ஆற்றாது என்று கூறுவதன் வாயிலாக இறை சக்தியின் ஆற்றல் நமக்கு உணர்த்தப்படுகிறது.

அந்தப் பாடல் இதோ.

அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகள்
முடிபேரில் மாமுகடு பேரும் - கடகம்
மறிந்தாடு கை பேரில் வான்திசைகள் பேரும்
அறிந்தாடும் ஆற்றா தரங்கு - (77)

 இறைமைக் குணம்

இறைவன் உயிர்கள் மாட்டு வைத்துள்ளது இரக்கம். இறைவன் இரவில் ஈமக் காட்டினில் நின்று ஆடுவதன் தத்துவம் யாது? உயிர்கள் ஆணவ இருளில் மூழ்கித் தங்கள் நிலை தெரியாது கிடக்கும் போது அவைகளை விட்டு இறைவன் பிரியாது நின்று, அவைகளைச் செந்நெறிப்படுத்தி இயக்க வேண்டியே இருளில் ஒளியாய் நின்று ஆடுகின்றான். இதுவே ஆட்டத்தின் தத்துவம் மற்றும் விளக்கம் ஆகும். இதுவே இறைமைக் குணம். இதனை அம்மையார்

இங்கிருந்து சொல்லுவதென் எம்பெருமான் எண்ணாதே
எங்கும் பலி திரியும் எத்திறமும் - பொங்கிரவில்
ஈம வனத்தாடுவதும் என்னுக்கென் றாராய்வோம் 
நாமவனைக் காணலுற்ற ஞான்று - (25)

என்று பாடுகிறார்.

உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே - என்று பாடுகிறார் அப்பர் பெருமான் (திருநாவுக்கரசர்).

தம்பெருமை தானறியாத் தன்மையன் காண் சாழலோ - (திருவாசகம்)

என்கிறார் மாணிக்கவாசகர்.

இறைவனுடைய இந்த இயல்பினை அற்புதத் திருவந்தாதி எடுத்துரைக்கிறது.

என்னை உடையானும் ஏகமாய் நின்றானும்
தன்னை யறியாத தன்மையனும் - பொன்னைச்
சுருளாகச் செய்தனைய தூச்சடையான் வானோர்க்கு
அருளாக வைத்த அவன் - (92)

 திருவருள் திறம்

சிவபெருமான் அன்பிற்கு அடிபணிவான். செருக்குற்றவரைச் சீறி அழிப்பான். அடியவரைக் காக்கும் பொருட்டு எதனையும் செய்யும் அருள் மிக்கவன். இருபது தோள்களை உடைய இராவணன் சிவபக்தன்; இசைக் கலைஞன். தன் இசைத் திறத்தால் இறைவனையே தன் வசப்படுத்தும் ஆற்றல் மிக்கவன். அப்படிப்பட்ட இராவணனும் செருக்குற்ற போது இறைவன் அவனைத் தண்டித்தான். அடியும், முடியும் காண மாட்டாது அரற்றிய திருமாலும் பிரமனும் சிவன் பெருமை உணர்ந்து அவனை மகிழ்ந்தேத்தினர். காலம் தவறாது உயிர்களைக் கொள்ளும் எமன் மார்க்கண்டேயன் உயிரை எடுக்கமுற்பட்டான். தன்னையே சரண் அடைந்த மார்க்கண்டேயனுக்காக எமனையே உதைத்த கால்களை உடையவன் என்பதை

மாலயனும் காணா தரற்றி மகிழ்ந்தேத்தக்
காலனையும் வென்றுதைத்த கால் - (80)

என்ற பாடல் வரிகளில் அம்மையார் குறிப்பிடுகின்றார்.

இனி, சிவபெருமானின் திருவருள் திறம் மீளாப் பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவுவது என்பதைக் காரைக்கால் அம்மையார் எப்படிப் பாடுகிறார் பாருங்கள்.

இனியோ நாம் உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம்
இனியோர் இடரில்லோம் நெஞ்சே - இனியோர்
வினைக்கடலை ஆக்குவிக்கும் மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண் - (16)

Friday, September 23, 2016

நியூட்டனின் F = MA என்ற விதியை தெளிவாக போதிக்கும் திருமூலர்.

https://www.facebook.com/groups/siddhar.science

"அகார முதலா அனைத்துமாய் நிற்கும்
உகார முதலா யுயிர்ப்பெய்து நிற்கும்
அகர வுகார மிரண்டு மறியல்
அகார உகார மிலிங்கம் தாமே” 

(திருமந்திரம்: 1753)

பொருள்:


அகரமாகிய சிவம் எல்லாவற்றுக்கும் முதலாய் எல்லாவற்றுடன் கலந்தும் விளங்கும். உகாரமாகிய சத்தி யாவற்றுக்கும் முதலாய் அவை உயிர் பெற்று நிற்க உதவும். இங்ஙனம் அகரம் சிவம் என்றும், உகரம் சத்தி என்றும் அறிந்தால், அகர உகரங்களே சிவலிங்கம் என்பது தெரிய வரும்.


அறிவியல்:


நியூட்டனின் F(Force) = M(Mass) * A(Acceleration) போதிப்பது யாதெனில் திடப்பொருளுடன் சக்தி சேரும் போது அங்குதான் இயக்கம் ஏற்படுகிறது என்பதாம். அதாவது ஒரு கல் ஒரு இடத்தில் அசையாதிருந்தால் அது வெறும் திடப்பொருள்தான் அந்த கல்லை ஒருவன் உருட்டி செல்கிறான் எனில் அங்கு உந்து சத்தி(Acceleration) ஏற்பட்டு கல்லானது இயக்கத்திற்கு உள்ளாகிறது. இங்கே கல்லானது இயங்கும் திடப்பொருளாக உருமாறுகிறது. இதைத்தான் திருமூலர் M(Mass) ஐ சிவமாகவும், A(Acceleration) சத்தியாகவும் குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல் சத்திதான் உயிர் கொடுக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். எந்த ஒரு பொருளின் இயக்கித்திற்கு தேவை சத்தி மட்டுமே. சிவசத்தியின் கூட்டு சேர்கையே உயிரோட்டத்தின் அச்சானி.


-Amutha

https://www.facebook.com/groups/siddhar.science

Thursday, September 22, 2016

தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியது யார்..?!

https://www.facebook.com/groups/siddhar.science

*"பக்தியில் முதன்மை..."*
=====================================
'தஞ்சைப் பெரிய கோயில கட்டினது யாரு?'ன்னு கேட்டா....
எல்லோரும் யோசிக்காமல் "ராஜா ராஜா சோழனு..." பதில் சொல்லிடுவாங்க.
ஆனா, ராஜா ராஜா சோழனோ, 'அந்த கோயில கட்டினது நான் இல்லை...'ன்னு சொல்றாரே!
===========================================

தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரம் அது... கோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்டி முடிக்க பட்ட சந்தோசத்துல ராஜா ராஜா சோழன் நிம்மதியா தூங்கும் போது... கனவுல இறைவன் ஆன பரமசிவன் அவன் முன்னே எழுந்தருளினார்.
'ராஜா ராஜா!' என்றழைக்க... ராஜா ராஜா சோழன், "இறைவா என் பாக்கியம் என்னவென்று சொல்வது... தாங்கள் எனக்கு காட்சி தந்தது நான் செய்த பாக்கியம்... தங்களுக்கு நான் கட்டிய கோயில் எப்படி இருக்கிறது?... இந்த ஊரிலே எல்லோரும் வியந்து பார்க்கும் மிக பெரிய கோயிலாக கட்டியுள்ளேன்... அதற்க்கு *'தஞ்சை பெரிய கோயில்'* என்று பெயர் சூட்ட போகிறேன்... மகிழ்ச்சி தானே தங்களுக்கு?" என்று கேட்டான் ஆனந்தமாக. இறைவன் சிரித்து கொண்டே, "ம்ம்ம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்... ஒரு மூதாட்டியின் காலடி நிழலின் கீழ் யாம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்..." என்று கூறி மறைந்தார்.
ராஜா ராஜனின் கனவும் கலைந்தது. விழித்தெழுந்த ராஜா ராஜன் தான் கண்ட கனவை பற்றி மறுநாள் அரசவையில் கூறி அந்த கனவுக்கு விளக்கம் கேட்டான். யாருக்கும் பதில் தெரியவில்லை.
=================================================
பின் நேராக கட்டி முடிக்க பட்ட தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றான். கோயில் சிற்ப்பியிடம் தான் கண்ட கனவை கூறி விளக்கம் கேட்டான். சிற்பி தயங்கியவாறே, "அரசே கடந்த மூன்று மாதங்களாக மோர் விற்கும் வயதான ஒரு ஏழை மூதாட்டி தினமும் மத்திய வேளையில் இங்கு வருவார்... ஏழ்மை நிலையில் இருந்தாலும் தன் பங்குக்கு இந்த கோயிலுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி தான் விற்கும் மோரில் பாதியை காசுக்காகவும், பாதியை இந்த கோயிலுக்காக வேலை செய்யும் எங்களுக்கு குடிக்க இலவசமாக கொடுப்பார்... நாங்கள் காசு கொடுத்தாலும் வாங்க மறுத்து விடுவார். எதோ இந்த ஏழை கிழவியால் இந்த கோயிலுக்கு செய்ய முடிந்த தொண்டு என்று கூறி காசு வாங்க மறுத்திடுவார். இப்படி இருக்கும் போது போன வாரத்தில் ஒரு நாள், ஆலய சிற்பங்களின் எல்லா வேலையும் முடித்த எங்களுக்கு இறைவனின் கருவறையின் மேலிருக்கும் கல்லை மட்டும் சரி செய்யவே முடியவில்லை... நாங்களும் அதன் அளவை எவ்ளவோ முயற்சி செய்து அளவெடுத்து வைத்தாலும் ஒன்று கல் அளவு அதிகமாக இருந்தது அல்லது குறைவாக இருந்தது.

எங்கே ஆலய பணி நடக்காமல் போய்விடுமோ என்று நாங்கள் கவலையுடன் இருந்தோம்...
அப்பொழுது இந்த மோர் விற்கும் மூதாட்டி வந்து மோர் கொடுத்து கொண்டே, 'ஏன் கவலையாய் இருக்குறீர்கள்?' என்று கேட்டார்கள். நாங்களும் கல் சரி ஆகாத விசயத்தை சொன்னோம்.
==================================================
அதற்க்கு அவர்கள் என் வீட்டு வாசற்படியில் பெரிய கல் ஒன்று உள்ளது... நான் அதை தான் என் வீட்டுக்கு வாசற்படி போல் வைத்துள்ளேன். அதை வேண்டுமானால் எடுத்து பொருத்தி பாருங்கள் என்றார். நாங்களும் நம்பிக்கை இல்லாமல் அந்த மூதாட்டி சொன்ன கல்லை எடுத்து வந்து பொருத்தினோம்... என்ன ஆச்சிரியம்! கருவறையின் மேற் கூரைக்கு அளவெடுத்து வைத்தது போல் மிக சரியாக இருந்தது. அதைதான் இறைவன் தாங்களுக்கு உணர்த்தி இருப்பார் என்று அடியேன் நினைக்கிறன்... என்றான் சிற்பி. இதை கேட்டதும் ராஜா ராஜனுக்கு எல்லாம் புரிந்தது...

எவ்வளவு பொருள் செலவு செய்து கோயில் கட்டினாலும் இறைவன் நேசிப்பது அன்பான ஒரு ஏழையின் பக்தியை தான். ஆரவாரமாக பொருள் செலவு செய்து நான் கோயிலை கட்டினாலும், அமைதியாக ஏழ்மை நிலையிலும் அந்த மூதாட்டி விற்க இருந்த மோரை கோயில் திருப்பணி செய்வோருக்கு அர்ப்பணித்தாரே..."
என்று கண்ணீர் மல்கி... பின் சுதாரித்து தன் அமைச்சரை அழைத்து, "அமைச்சரே கும்பாபிஷேகம் நடக்கும் நன்னாளில் அந்த மூதாட்டியை அரண்மனைக்கு அழைத்து வாருங்கள்... நான் வெண்குடை ஏந்தி அந்த அம்மையாரை வைத்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள்...

இந்த கோயில் கட்டியது அந்த அம்மையார் தான்... நான் அல்ல...
இதற்கு இறைவனே சாட்சி என்றான்..."
*"அன்பே சிவம்..."*
*என உணர்வதே தவம்...*
-PothigaiPriya

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐
படித்ததில் வியந்தது.

https://www.facebook.com/groups/siddhar.science

Friday, September 16, 2016

தமிழர் சாதித்த கட்டிடக்கலை 'கழுகுமலை'


இடம்- கழுகுமலை வெட்டுவான் கோவில் - கோவில்பட்டி

தென் தமிழகத்தின் எல்லோரா - 'கழுகுமலை'
https://www.facebook.com/groups/siddhar.science



இயற்கையின் படைப்புகளை விரும்பாதவர்கள் இவ்வுலகில் எங்கும் இல்லை. அத்தகைய இயற்கையின் படைப்புகளில் மலைகளும் மலைசார்ந்த இடங்களும் நம் மனதை கொள்ளை கொள்ளச் செய்பவைகள். மலைகள் சார்ந்த இடங்களில், மெல்ல தவழ்ந்து வந்து நம்மை தொட்டுவிட்டு செல்லும் 'சில்லென்ற' குளிர்ந்த காற்றும், அங்கு நிலவும் அமைதியையும் சொல்வதைவிட உணர்வதே சரியானதாகும். மலைப்பயணம் செய்தவர்களுக்கு தெரிந்திருக்கும் அந்த இனிமையும், குளுமையும். இன்றும் தங்களது இயந்திர வாழ்க்கையைவிட்டு மலைப்பகுதிகளுக்கு விடுமுறை நாட்களில் சென்று மனதையும் உடலையும் இலகுவாக்கி உற்சாகமடைபவர்கள் பலர். அங்கு அவர்கள் கண்ட ரம்மியமான காட்சிகள் என்றுமே மனதைவிட்டு நீங்காத காலச்சுவடுகளாக பதிவாகிவிடும்.

இன்றைய இயற்கையே இவ்வாறு இருக்கிறதென்றால், பலநூறு ஆண்டுகளுக்கு முந்தைய இயற்கை மிக பிரமிக்கதக்கதாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இன்றைய நாகரீக வாழ்ககை வேகத்தில் 'இயற்கை' என்பது திரைப்படத்தின் தலைப்பாகவே நமக்குத் தெரிகிறது. இயற்கையைப் பாதுகாப்பது என்பது எல்லாம் நம்மிடத்தில் வெறும் கருத்துகளாகவும், பாதுகாப்பு விளம்பரங்களாகவுமே நின்றுவிடுகிறது. ஏன் இந்த இயற்கை வளங்களை எல்லாம் பாதுகாக்க வேண்டும் என்ற கேள்வியோடு நாம் மேலும் தொடருவோம்.

பொதுவாக மனித வரலாற்று உண்மைகள் பல இயற்கையை சார்ந்தே வாழ்ந்திருக்கின்றன. கற்கால மனிதன் பேச்சு மொழியே இல்லாத காலத்தில், தான் வாழ்ந்த காலகட்ட சூழ்நிலைகளை எதிர்கால சந்ததியினர் தெரிந்துகொள்ள ஓவியங்கள், குறியீடுகள், சிற்பங்கள், கல்வெட்டுகள் போன்றவற்றை மலைகளில் செதுக்கிவைத்தான். பின் நாட்களில் அவர்களின் சந்ததியினர் அவற்றைக் கொண்டு தங்களது அடுத்தகட்ட தலைமுறையை சற்று மேம்படுத்திக்கொண்டனர். இந்த சமூக மாற்றங்களுக்கு மலைகள் ஒரு மிகப்பெரிய வரலாற்றுப் பெட்டகமாக தன்னை நம் அனைவருக்கும் தந்து இன்றும் கம்பீரமாக இருந்துகொண்டிருக்கின்றன.

அத்தகைய வரலாற்றுப் பெட்டகத்தை நாம் தெரிந்துகொள்வதும், அதனை பாதுகாப்பதும் நாம் நம் எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் ஒரு கடமையாகும். தமிழக அரசின் தொல்லியியல் துறை இத்தகைய வரலாற்று சின்னங்களை கண்டுபிடித்து அவற்றை பாதுகாத்துவருகிறது. மேலும் மலைகளில் மக்கள் சென்று அவற்றை பார்வையிட தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து வருகின்றது. பழைய வரலாற்றை நாம் தெரிந்து கொள்ளாவிட்டால் இன்றைய வாழ்க்கையின் உயர்ந்த மதிப்புகளை நாம் உணர்ந்துகொள்வது சற்று கடினமே.

மொழி, பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த வரலாற்று சின்னங்கள், கல்வெட்டுகள் தமிழகம் முழுவதும் உள்ள மலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி போன்ற இடங்களில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பழமையான சமணர்கால குகைகள், குகை கோயில்கள், சிற்பங்கள் வரலாற்றை கூறும்வண்ணத்தில் அமைந்துள்ளன. மேலும் பிராமி மற்றும் வட்டெழுத்துகள் போன்ற ஆரம்பகால தமிழ் எழுத்துகளும் இங்குள்ள மலைகளில் காணப்படுகின்றன. இவற்றை எல்லாம் நாம் நேரில் சென்று பார்க்கும் பொழுது வியப்பூட்டக்கூடிய கலைப் படைப்புகளையும், சிற்பங்களையும் அவற்றுள் பொதிந்துள்ள வரலாற்றுக் கருத்துகளையும், உண்மைகளையும் நாம் அறியமுடிகிறது.

மதுரையிலிருந்து சுமார் 150 கி.மீ தோலைவில் அமைந்துள்ளது கழுகுமலை. கழுகுமலை கோவில்பட்டிக்கு அருகாமையிலுள்ள ஒரு சிறிய ஊராகும். பேருந்து மார்க்கமாக செல்வதற்கு வசதியாக, மதுரையிலிருந்து கோவில்பட்டிக்கு தோடர்ச்சியாக பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. இதற்கு இரண்டு மணிநேர பயணம் ஆகும். பின்னர் கோவில்பட்டியிலிருந்து அரைமணி நேர பேருந்து பயணத்தில் கழுகுமலையை அடைந்துவிடலாம். இரயில் மார்க்கமாக செல்ல மதுரையிலிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் விரைவு வண்டிகள் மூலம் இரண்டு மணி நேரத்தில் கோவில்பட்டியும், பின்னர் பேருந்து மூலம் கோவில்பட்டியிலிருந்து கழுகுமலை சென்றடையலாம்.

'சமய இறையாண்மைமிக்க இடமாகவும், கலைக் கருவூலமாகவும் திகழும் கோவில்பட்டி கழுகுமலை, உலக மரபுச் சின்னங்களின் பட்டியலில் இடம் பெறக்கூடிய வகையில் சிற்ப்பக்கலையை தன்னகத்தே கொண்டுள்ளது. தென் தமிழகத்தின் எல்லோரா என்றழைக்கப்படும் கழுகுமலையில், பல நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு மேம்பாட்டுப்பணிகளை நடுவண், மாநில அரசுகள் எடுக்கும்பட்சத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. உலகம் முழுவதும் ஏறக்குறைய 911 இடங்களை பண்பாடு மற்றும் இயற்கை மரபுச் சின்னங்களாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. அதே போன்று கழுகுமலையையும் அது போன்ற பண்பாட்டு மரபுச் சின்னமாக அறிவித்தால் தமிழகத்தின் வரலாற்றுக்கு மகுடம் சூட்டக்கூடிய வாய்ப்புள்ளது.

எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவில் மற்றும் மாமல்லபுரம் சிற்பக் கோவில் ஆகியனவற்றைக் காட்டிலும் கழுகுமலை வெட்டுவான் கோயில் தனிச்சிறப்பு மிக்கது. காரணம் கழுகுமலை கடினமான பாறை அடுக்குகளால் ஆனது. இவ்விடத்தில் சிற்பங்களைச் செதுக்கியிருக்கிறார்கள் என்றால் நம் முன்னோர்களின் உழைப்பும், தொழில்நுட்பமும் வியப்பிற்குரியதாகும்'. 'பாறைகளில் எண்ணற்ற புடைப்புச் சிற்பங்களைக் கொண்டுள்ளதுடன், சமண சமயத்தின் பழம் பெரும் பல்கலைக்கழகமாகவும் கழுகுமலை திகழ்கிறது. முக்குடையின் கீழ் அமர்ந்துள்ள சமண சமயத்தைத் தழுவி வாழ்ந்த சமணர்களின் சமணதீர்தங்கரர் 'மகாவீரரின்' சிற்பங்கள் 2000 ஆண்டுகளுக்குப் பின்பும் பார்ப்பவர்களை வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகின்றன.

மலையின் உச்சியில் உள்ள வெட்டுவான் கோவிலானது கோட்டைச்சுவர்களால் சூழப்பட்டது போன்று முற்றிலும் மலையையே வெட்டி உருவாக்கியுள்ளனர். இதனை உருவாக்க அவர்கள் எடுத்துக்கொண்ட காலம் பற்றி தெரியவில்லை, ஆனால் இதனை இன்று உருவாக்குவதென்றால் பல வருடங்கள் ஆகும் என்பது உண்மை. சிற்பக்கலையின் சிகரம் என்று வர்ணிக்கூடிய வகையில் இக்கோவிலை உருவாக்கியுள்ளனர்.

மனிதர்களுக்கு வரலாற்றை அறிந்துகொள்ளவும், அதனை பாதுக்காக்கவும் விருப்பம் இல்லாத காரணத்தினால், நாம் இழந்த வரலாற்று சின்னங்கள் பல. இன்று நாம் காண்பதெல்லாம் அவற்றின் எச்சங்களே ஆகும். இப்போது இருக்கும் அந்த எஞ்சிய எச்சங்களையாவது நாம் கண்டுகொண்டு அதனை பாதுகாத்து எதிர்கால தலைமுறைக்கு தமிழக வரலாற்றினை கொண்டுசெல்வோம்.

- மே.இளஞ்செழியன் (Ilanchezhiyankathir@gmail.com)

Wednesday, September 7, 2016

2ம் கட்ட அகழாய்வு நிறைவடைகிறது

அமெரிக்காவின் ஆய்வில் கீழடியின் 'காலம்': 2ம் கட்ட அகழாய்வு நிறைவடைகிறது

மதுரை,: மதுரை, சிலைமான் அருகில் உள்ள கீழடியில் இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் நடத்தப்பட்டு வரும், இரண்டாம் கட்ட ஆய்வில் கிடைத்த பொருட்கள், 'கார்பன் டேட்டிங்' எனப்படும் கரிம பகுப்பாய்விற்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட உள்ளன. ஆதிச்சநல்லுார் தொல்லியல் களத்திற்கு அடுத்ததாக, இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் நடத்தப்படும் மிகப் பெரிய அகழாய்வு கீழடியில், இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. முதல்கட்ட ஆய்வு, 2015ம் ஆண்டு பிப்.,யில் துவங்கி செப்., வரை நடந்தது. இரண்டாம் கட்ட ஆய்வு 2016 ஜன.,யில் துவங்கி நடந்து வருகிறது.

இந்த ஆய்விற்காக தோண்டும் பணிகள் முடிவடைந்து, கிடைத்த பொருட்கள் குறித்த கணக்கெடுப்பு மற்றும் வரைபடம் தயாரிப்பு தொடர்பான இறுதிகட்ட பணி நடந்து வருகிறது.

5,000 பொருட்கள்

இரண்டு ஆண்டுகளாக, இங்கு, 100 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் கூரை ஓடுகள், மண்பாண்டங்கள், மிளிர்கல் அணிகலன்கள், எலும்புக் கருவிகள், இரும்பு வேல், 'ஆதன், உதிரன்' போன்ற பெயர்களை குறிப்பிடும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானையோடுகள், சூது பவளம், பளிங்கு, அகேட் மணிகள், பச்சை, மஞ்சள், நீலநிற கண்ணாடி மணிகள் , யானைத் தந்தத்திலான தாயக்கட்டைகள், மைதீட்டும் தாயத்திலான கம்பிகள் என, 5,000 பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பத்திரப்படுத்தப்பட்டு, ஆய்விற்காக பெங்களூரில் உள்ள தலைமை தொல்லியல் ஆய்வக அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

அகழாய்வில் திருப்பம்

இரண்டாம் கட்ட அகழாய்வில் தொழிற்சாலை போன்ற கட்டட அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதில் உலை, வடிகால், சுடுமண்ணினால் செய்யப்பட்ட குழாய், மூடப்பட்ட வடிகால் இருப்பது தெரிய வந்தது. இது இந்திய அகழாய்வின் திருப்பமாக கருதப்பட்டுள்ளது. இவற்றை பார்வையிட டில்லியில் இருந்தும் தொல்லியல் அதிகாரிகள் இங்கு வந்தனர்.

புதுமையான இந்த கண்டுபிடிப்பால் உற்சாகடைந்துள்ள இந்திய தொல்லியல் துறை, இவை எந்த காலத்தை சேர்ந்தது என்பது குறித்த அடுத்த கட்ட ஆய்விற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் ஆய்வு

கீழடியில் கிடைத்துள்ள தடங்களின் காலம் கி.மு., 3 ம் நுாற்றாண்டு முதல், கி.பி., 3ம் நுாற்றாண்டுக்கு இடைப்பட்டதாக இருக்கும் என்பது தமிழக தொல்லியல் அறிஞர்களின் கருத்து. ஆனால், கரிம தேதியிடல் முறையில் தான் காலத்தை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கான ஆய்வகங்கள் இந்தியாவில் சில இங்களில் உள்ளன. அதில் இங்கு கிடைத்த கரித்துண்டுகளை வைத்து ஆய்வு செய்யப்படும்.

உலக அளவில் இது போன்ற வரலாற்று ஆய்வை துல்லியமாக கணித்து வரும் அமெரிக்காவின், 'பீட்டா அனலலிஸ்' என்ற நிறுவனத்திற்கு, இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கரித்துண்டுகளை அனுப்புவதற்கு, மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன்படி இவை அமெரிக்காவிற்கு அனுப்பப்படுகின்றன.
இந்த ஆய்வகத்தில், ஒரு மாதத்திற்குள்ளாக முடிவை தெரிவிப்பர். அதனுடன், இந்திய ஆய்வகங்களில் நடத்தும் ஆய்வையும் ஒப்பீடு செய்து கீழடியின் காலம் கணிக்கப்பட உள்ளது.

அகழாய்வில் தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் தலைமையில் உதவி தொல்லியலாளர்கள் ராஜேஷ், வீரராகவன், நந்த கிஷோர் மற்றும் ஆய்வு மாணவர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர். தினமும், 80 பேர் களப்பணிகளில் உள்ளனர்.
இங்கு, மூன்றாம் கட்ட அகழாய்வுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் இது முக்கியத்துவம் பெற்றுள்ளதால், மூன்றாம் கட்ட அகழாய்விற்கு அனுமதி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

அகழாய்வு நிறைவு

தற்போது நடந்து வரும் அகழாய்வில் முக்கிய பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. குழிகளை மூடுவதற்கு முன், வரைபடங்கள் தயாரிப்பு, கிடைத்த பொருட்களுக்கு குறியீடுகள் தயாரித்து பத்திரப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. செப்., 15 க்கு பின் குழிகள் மூடப்படும். இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் உள்ளதால், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் இந்த ஆய்வின் முடிகளை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கீழடியில் ஏராளமான தொல்லியல் பொருட்கள் கிடைத்தால், மத்திய தொல்லியல் ஆய்வகம், இங்கு அருங்காட்சியகம் அமைக்க ஆர்வமாக உள்ளது. மாநில அரசு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன.

Courtesy:Dinamalar