Wednesday, September 7, 2016

2ம் கட்ட அகழாய்வு நிறைவடைகிறது

அமெரிக்காவின் ஆய்வில் கீழடியின் 'காலம்': 2ம் கட்ட அகழாய்வு நிறைவடைகிறது

மதுரை,: மதுரை, சிலைமான் அருகில் உள்ள கீழடியில் இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் நடத்தப்பட்டு வரும், இரண்டாம் கட்ட ஆய்வில் கிடைத்த பொருட்கள், 'கார்பன் டேட்டிங்' எனப்படும் கரிம பகுப்பாய்விற்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட உள்ளன. ஆதிச்சநல்லுார் தொல்லியல் களத்திற்கு அடுத்ததாக, இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் நடத்தப்படும் மிகப் பெரிய அகழாய்வு கீழடியில், இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. முதல்கட்ட ஆய்வு, 2015ம் ஆண்டு பிப்.,யில் துவங்கி செப்., வரை நடந்தது. இரண்டாம் கட்ட ஆய்வு 2016 ஜன.,யில் துவங்கி நடந்து வருகிறது.

இந்த ஆய்விற்காக தோண்டும் பணிகள் முடிவடைந்து, கிடைத்த பொருட்கள் குறித்த கணக்கெடுப்பு மற்றும் வரைபடம் தயாரிப்பு தொடர்பான இறுதிகட்ட பணி நடந்து வருகிறது.

5,000 பொருட்கள்

இரண்டு ஆண்டுகளாக, இங்கு, 100 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் கூரை ஓடுகள், மண்பாண்டங்கள், மிளிர்கல் அணிகலன்கள், எலும்புக் கருவிகள், இரும்பு வேல், 'ஆதன், உதிரன்' போன்ற பெயர்களை குறிப்பிடும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானையோடுகள், சூது பவளம், பளிங்கு, அகேட் மணிகள், பச்சை, மஞ்சள், நீலநிற கண்ணாடி மணிகள் , யானைத் தந்தத்திலான தாயக்கட்டைகள், மைதீட்டும் தாயத்திலான கம்பிகள் என, 5,000 பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பத்திரப்படுத்தப்பட்டு, ஆய்விற்காக பெங்களூரில் உள்ள தலைமை தொல்லியல் ஆய்வக அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

அகழாய்வில் திருப்பம்

இரண்டாம் கட்ட அகழாய்வில் தொழிற்சாலை போன்ற கட்டட அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதில் உலை, வடிகால், சுடுமண்ணினால் செய்யப்பட்ட குழாய், மூடப்பட்ட வடிகால் இருப்பது தெரிய வந்தது. இது இந்திய அகழாய்வின் திருப்பமாக கருதப்பட்டுள்ளது. இவற்றை பார்வையிட டில்லியில் இருந்தும் தொல்லியல் அதிகாரிகள் இங்கு வந்தனர்.

புதுமையான இந்த கண்டுபிடிப்பால் உற்சாகடைந்துள்ள இந்திய தொல்லியல் துறை, இவை எந்த காலத்தை சேர்ந்தது என்பது குறித்த அடுத்த கட்ட ஆய்விற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் ஆய்வு

கீழடியில் கிடைத்துள்ள தடங்களின் காலம் கி.மு., 3 ம் நுாற்றாண்டு முதல், கி.பி., 3ம் நுாற்றாண்டுக்கு இடைப்பட்டதாக இருக்கும் என்பது தமிழக தொல்லியல் அறிஞர்களின் கருத்து. ஆனால், கரிம தேதியிடல் முறையில் தான் காலத்தை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கான ஆய்வகங்கள் இந்தியாவில் சில இங்களில் உள்ளன. அதில் இங்கு கிடைத்த கரித்துண்டுகளை வைத்து ஆய்வு செய்யப்படும்.

உலக அளவில் இது போன்ற வரலாற்று ஆய்வை துல்லியமாக கணித்து வரும் அமெரிக்காவின், 'பீட்டா அனலலிஸ்' என்ற நிறுவனத்திற்கு, இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கரித்துண்டுகளை அனுப்புவதற்கு, மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன்படி இவை அமெரிக்காவிற்கு அனுப்பப்படுகின்றன.
இந்த ஆய்வகத்தில், ஒரு மாதத்திற்குள்ளாக முடிவை தெரிவிப்பர். அதனுடன், இந்திய ஆய்வகங்களில் நடத்தும் ஆய்வையும் ஒப்பீடு செய்து கீழடியின் காலம் கணிக்கப்பட உள்ளது.

அகழாய்வில் தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் தலைமையில் உதவி தொல்லியலாளர்கள் ராஜேஷ், வீரராகவன், நந்த கிஷோர் மற்றும் ஆய்வு மாணவர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர். தினமும், 80 பேர் களப்பணிகளில் உள்ளனர்.
இங்கு, மூன்றாம் கட்ட அகழாய்வுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் இது முக்கியத்துவம் பெற்றுள்ளதால், மூன்றாம் கட்ட அகழாய்விற்கு அனுமதி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

அகழாய்வு நிறைவு

தற்போது நடந்து வரும் அகழாய்வில் முக்கிய பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. குழிகளை மூடுவதற்கு முன், வரைபடங்கள் தயாரிப்பு, கிடைத்த பொருட்களுக்கு குறியீடுகள் தயாரித்து பத்திரப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. செப்., 15 க்கு பின் குழிகள் மூடப்படும். இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் உள்ளதால், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் இந்த ஆய்வின் முடிகளை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கீழடியில் ஏராளமான தொல்லியல் பொருட்கள் கிடைத்தால், மத்திய தொல்லியல் ஆய்வகம், இங்கு அருங்காட்சியகம் அமைக்க ஆர்வமாக உள்ளது. மாநில அரசு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன.

Courtesy:Dinamalar

1 comment:

  1. இந்த அகழ்வாய்வில் கிடைத்த வாழிட அமைப்புகள்போல் இதுவரை தமிழகத்தில் எங்கும் நடைபெற்றதில்லை. இது ஹரப்பா, மொகஞ்சோதரா அகழ்வாய்வு முடிவுகளுக்கு இணையான முக்கியத்துவம் பெறுகிறது. இப்பணிமுழுமையாக முடிவடையும் பொழுது, தமிழகத்தின பெருமை, தொன்மை, வெளிப்டும் என நம்பலாம்.

    ReplyDelete