உலகுக்கெல்லாம் ஒப்பற்ற தலைவனாய் உள்ளவன் சிவன். இயற்கையை உடலாகக் கொண்டவன். இறைவனுடைய சிறப்புகளை இவ்வந்தாதி எடுத்துரைக்கிறது. இறை இயல்பும், இறைமைக் குணங்களும் ஆங்காங்கே எடுத்துரைக்கப்படுகின்றன. ஈகைக் குணம் உடையவன் சிவன். பல நாள் பணிந்து இரந்தால்
என்று காரைக்கால் அம்மையார் பாடுகிறார்.
சிவபெருமான் வேண்டியார்க்கு வேண்டிய வடிவில் வருபவன் என்பதை,
எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத்து அவ்வுருவே யாம் - (33)
என்ற பாடலிலும், அட்ட மூர்த்தியானவன் என்பதை,
அவனே இருசுடர் தீ ஆகாசமாவான்
அவனே புவிபுனல் காற்றாவான் - அவனே
இயமானனாய் அட்ட மூர்த்தியுமாய் ஞான
மயனாகி நின்றானும் வந்து - (21)
என்ற பாடலிலும் விளக்குகிறார் அம்மையார். (ஞாயிறு, திங்கள், ஐம்பூதங்கள், உயிர் ஆகிய எட்டும் அவனே, இதனை அட்டமூர்த்தி என்ற சொல்லால் குறிப்பிடுவார்கள். இயமானன்= உயிர்)
சிவபெருமான் எவ்வுருவில் இருக்கிறான் என்று சொல்ல இயலாது. எல்லா உருவிலும் இருக்கிறான். அவன் ஒருவராலும் அறியப்படாதவன் என்பதே அவன் இலக்கணமாம். அவ்விலக்கணம் அம்மையாரால் பின்வரும் பாடலில்
பேசப்படுகிறது.
அன்றும் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்
இன்றும் திருவுருவம் காண்கிலேன் - என்றும் தான்
எவ்வுருவோன் நும்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது - (61)
எளிமையானவன். ஆனாலும் எங்கும் வியாபித்திருப்பவன். எல்லாமே அவன்தான் என்பதை,
அறிவானும் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற
மெய்ப்பொருளும் தானே விரிசுடர் பார் ஆகாயம்
அப்பொருளும் தானே அவன் - (20)
என்ற பாடல் உணர்த்தும்.
ஒப்பற்ற தலைவன்
சிவபெருமான் ஆதியானவன். உலகமெல்லாம் தோன்றுவதற்கு முன்னும் இருந்தவன். எல்லா உயிர்களையும் தோற்றுவிப்பவன். எல்லாவற்றையும் அழிக்கும் அழித்தற் கடவுளும் அவனே.
இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி
இறைவனே ஈண்டிறக்கம் செய்வான் - (5)
என்று அவன் சிறப்புப் பேசப்படுகிறது.
இறைசக்தி மிகப் பெரியது. இறைவன் நடனமாடும் போது இறைவன் அடி, முடி, கை முதலியன ஏழு உலகங்களில் மட்டும் அடங்கிக் கிடப்பன அல்ல. இவை அவ்வுலகங்களைக் கடந்தும் செல்வன. இறைவன் அடியும், முடியும், மேலும், கீழும் உழன்று தாக்கி, அரங்கு ஆற்றாது என்று கூறுவதன் வாயிலாக இறை சக்தியின் ஆற்றல் நமக்கு உணர்த்தப்படுகிறது.
அந்தப் பாடல் இதோ.
அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகள்
முடிபேரில் மாமுகடு பேரும் - கடகம்
மறிந்தாடு கை பேரில் வான்திசைகள் பேரும்
அறிந்தாடும் ஆற்றா தரங்கு - (77)
இறைமைக் குணம்
இறைவன் உயிர்கள் மாட்டு வைத்துள்ளது இரக்கம். இறைவன் இரவில் ஈமக் காட்டினில் நின்று ஆடுவதன் தத்துவம் யாது? உயிர்கள் ஆணவ இருளில் மூழ்கித் தங்கள் நிலை தெரியாது கிடக்கும் போது அவைகளை விட்டு இறைவன் பிரியாது நின்று, அவைகளைச் செந்நெறிப்படுத்தி இயக்க வேண்டியே இருளில் ஒளியாய் நின்று ஆடுகின்றான். இதுவே ஆட்டத்தின் தத்துவம் மற்றும் விளக்கம் ஆகும். இதுவே இறைமைக் குணம். இதனை அம்மையார்
இங்கிருந்து சொல்லுவதென் எம்பெருமான் எண்ணாதே
எங்கும் பலி திரியும் எத்திறமும் - பொங்கிரவில்
ஈம வனத்தாடுவதும் என்னுக்கென் றாராய்வோம்
நாமவனைக் காணலுற்ற ஞான்று - (25)
என்று பாடுகிறார்.
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே - என்று பாடுகிறார் அப்பர் பெருமான் (திருநாவுக்கரசர்).
தம்பெருமை தானறியாத் தன்மையன் காண் சாழலோ - (திருவாசகம்)
என்கிறார் மாணிக்கவாசகர்.
இறைவனுடைய இந்த இயல்பினை அற்புதத் திருவந்தாதி எடுத்துரைக்கிறது.
என்னை உடையானும் ஏகமாய் நின்றானும்
தன்னை யறியாத தன்மையனும் - பொன்னைச்
சுருளாகச் செய்தனைய தூச்சடையான் வானோர்க்கு
அருளாக வைத்த அவன் - (92)
திருவருள் திறம்
சிவபெருமான் அன்பிற்கு அடிபணிவான். செருக்குற்றவரைச் சீறி அழிப்பான். அடியவரைக் காக்கும் பொருட்டு எதனையும் செய்யும் அருள் மிக்கவன். இருபது தோள்களை உடைய இராவணன் சிவபக்தன்; இசைக் கலைஞன். தன் இசைத் திறத்தால் இறைவனையே தன் வசப்படுத்தும் ஆற்றல் மிக்கவன். அப்படிப்பட்ட இராவணனும் செருக்குற்ற போது இறைவன் அவனைத் தண்டித்தான். அடியும், முடியும் காண மாட்டாது அரற்றிய திருமாலும் பிரமனும் சிவன் பெருமை உணர்ந்து அவனை மகிழ்ந்தேத்தினர். காலம் தவறாது உயிர்களைக் கொள்ளும் எமன் மார்க்கண்டேயன் உயிரை எடுக்கமுற்பட்டான். தன்னையே சரண் அடைந்த மார்க்கண்டேயனுக்காக எமனையே உதைத்த கால்களை உடையவன் என்பதை
மாலயனும் காணா தரற்றி மகிழ்ந்தேத்தக்
காலனையும் வென்றுதைத்த கால் - (80)
என்ற பாடல் வரிகளில் அம்மையார் குறிப்பிடுகின்றார்.
இனி, சிவபெருமானின் திருவருள் திறம் மீளாப் பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவுவது என்பதைக் காரைக்கால் அம்மையார் எப்படிப் பாடுகிறார் பாருங்கள்.
இனியோ நாம் உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம்
இனியோர் இடரில்லோம் நெஞ்சே - இனியோர்
வினைக்கடலை ஆக்குவிக்கும் மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண் - (16)
Good explanation
ReplyDeleteநல்ல வரிகள். சிவன் பெருமை சித்தம் ஏற்றது. நல்ல பகிரவுக்கு மிக்க நன்றி. சிவ சிவ சிவ சிவ சிவாய நமக.
ReplyDelete