Tuesday, May 21, 2019

இல்லானை இல்லாளும் வேண்டாள், ஈன்ற தாயும் வேண்டாள்

செல்வம் இல்லாதவனை இல்லாளும் வேண்டாள், ஈன்ற தாயும் வேண்டாள்


கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்றுண்டாயின்
எல்லாரும் சென்றங்கு எதிர்கொள்வர்- இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த தாய் வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்.(34)

அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு

(கைப் பொருள் = செல்வம், எதிர்கொள்வர் = வரவேற்பர், இல்லானை= செல்வம் இல்லாதவனை, ஈன்று = பெற்று, இல்லாளும் = மனைவியும், வாயின் சொல் = வாய்ச்சொல், பேச்சு)

கல்வி அறிவு உடையவர்கள் அனைவராலும் மதிக்கப்படுவர். கல்வி அறிவு இல்லாதவர்கள் அவ்வாறு மதிக்கப்படுவதில்லை.

ஆனால், கல்வி அறிவு இல்லாதவனுக்குச் செல்வம் இருந்தால் அவனையும் எல்லோரும் சென்று போற்றிப் புகழ்வார்கள்.

செல்வம் இல்லாதவனை அவனது மனைவி கூட விரும்பமாட்டாள்; அவனைப் பெற்ற தாயும் விரும்பமாட்டாள்; அவன் சொல்லும் சொல்லை யாரும் பெரிதாகக் கருதி ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று செல்வத்தின் உயர்வை ஒளவையார் பாடியுள்ளார்.

அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு
(அதிகாரம்:அருளுடைமை குறள் எண்:247)

பொழிப்பு (மு வரதராசன்): பொருள் இலாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறுபோல, உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.

மணக்குடவர் உரை:
அருள் இல்லாதார்க்கு மேலுலகமுறுங் காட்சியில்லை; பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகின்கண் இன்பமுறுங்காட்சி யில்லையானாற்போல.
இஃது அருளில்லாதார் சுவர்க்கம் புகாரென்றது.

பரிமேலழகர் உரை:
அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை - உயிர்கள்மேல் அருள் இல்லாதார்க்கு வீட்டுலகத்து இன்பம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு - பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகத்து இன்பம் இல்லையாயினாற் போல.
('அவ்வுலகம், இவ்வுலகம்' என்பன ஆகுபெயர். இவ்வுலகத்து இன்பங்கட்குப் பொருள் காரணமானாற்போல அவ்வுலகத்து இன்பங்கட்கு அருள் காரணம் என்பதாயிற்று.)

சி இலக்குவனார் உரை:
பொருட்செல்வம் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து இன்பம் இல்லையாயினாற் போல அருட்செல்வம் இல்லாதார்க்கு வீட்டுலக இன்பம் இல்லை.

அன்பும் அறமும் உள்ளவரிம் பொருள் இருந்தால், அறங்கள் பல செய்து தன்னையும் சமூகத்தையும் உயர்த்துவார்.


https://www.facebook.com/groups/305917699863621





நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 





                                                                      || |More videos  || ||  Contact தொடர்பு ||

No comments:

Post a Comment