Friday, November 4, 2016

காரிருள் நீக்கிடும் கதிர்வடி வேலா !

கந்தா கடம்பா கார்த்திகை பாலா
கனிபெற உலகை வலம்வந்த வேலா.
எந்தாய் சக்தியின் இளைய குமாரா
ஈசனின் மைந்தா ! இடும்பா முருகா!
தொந்திக் கணபதி அன்புத் தமையா 
தோகை இளமயில் ஏறிடும் அழகா
தந்தைக்கு மந்திரம் சொன்னாய் குருவாய்
தமியேன் துயருக்கு விடை சொல்ல வருவாய்!

சூரனை வதம்செய்த சுப்பிரமணியா !
சுடர்வள்ளி அழகினில் சொக்கிய இனியா !
போரினில் அசுரரை பொடிசெய்த வீரா !
பூவையர் இருவரை மணம்செய்த தீரா !
காரிருள் நீக்கிடும் கதிர்வடி வேலா !
கார்முகில் வண்ணனின் மருகா முருகா !
சீரிளத் தமிழுக்கு அரசே வருவாய் !
சிறியேன் குரலுக்கு செவிசாய்த் திடுவாய்.

முன்னவன் துணையுடன் மணம்செய்த வேடா
முப்புரம் எரித்தவன் விழிவந்த வேலா !
அன்னையின் வேலினை கரங்களில் உடையாய்
அவ்வையின் தமிழுக்கு கனிதந்த இடையா!
பன்னிரு கரன்கொண்ட பால குமாரா
பழம் நீ எனவே பேர்கொண்ட பாலா !
உன்னிரு பாதங்கள் என்தலை வைப்பாய்
உன்விழிக் கணைகளை என்மேல் தைப்பாய்.

நான்முகன் செருக்கினை அடக்கிய வேலா !
நான்மறை போற்றிடும் ஞானத்தின் பாலா !
கான்மகள் வள்ளியின் காதல் மணாளா
காலத்தின் கோலத்தை மாற்றும் குணாளா !
வானுறை தேவரும் வணங்கும் கண்ணாளா
வரங்களைத் தடையின்றி வழங்கும் தயாளா !
யானுறும் துயர்கண்டும் இருப்பதேன் வாளாய்?
"யாம் உளோம் துணை"என சொல் அருளாளா !

அரங்கனின் மனங்கவர் அழகிய மருகா
அமரர்கள் தேவர்கள் அடிதொழும் முருகா!
பரங்குன்றம் தணிகையில் குடிகொண்ட குமரா
பழமுதிர்ச் சோலையில் பலன்தரும் முருகா !
இரங்கிடும் மனங்கொண்ட ஈசனின் மைந்தா
இருவரை மணங்கொண்ட இளவலே கந்தா !
கரங்களில் வேல்கொண்டு காத்திட வருவாய்
கழலடி பணிந்தோம் கண்களைத் திறவாய் !

அலைதவழ் செந்தூர்க் கடலிடை உறைவாய் !
அருணையில் தொண்டருக் கருளிய இறைவா !
சிலையினில் சிரிப்பாய்! சிந்தையில் இருப்பாய்
சிறுமையும் தீமையும் சினங்கொண்டு அறுப்பாய் !
மலைமகள் உமையவள் மடிதனில் வளர்ந்தாய்
மங்கையர் அறுவரின் கரங்களில் தவழ்ந்தாய் !
வலையிடை மீனென வினைதனில் வீழ்ந்தேன்
வடிவேல் கொண்டிந்த வினைவலை அறுப்பாய்!

இடும்பனை அழித்த இனியவேல் முருகா
இதயத்தில் புகுந்தே இருளினைக் களைவாய் !
கடம்பனுக் கருளிய கார்த்திகை பாலா !
கருணையின் வடிவாய் காத்திடும் வேலா !
அடம்செய்யும் மனதினை அடக்கிட வருவாய்
அருட்கவி கேட்டெனை அரவணைத் திடுவாய்
உடும்பென உனையே பிடித்தேன் வருவாய்
உருகிடும் கவிதைகள் வடித்தேன் அருள்வாய் !

ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ சரவணபவ ஓம்
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ சரவணபவ ஓம்..

#முருகாசரணம்
#MurugaSaranam

No comments:

Post a Comment