Friday, June 22, 2018

பாரிய இழப்புகள் மற்றும் இயற்கைச் சீற்றங்கள் உண்டாகும்.



தென்நாட்டை அரசு தொடர்ந்து வஞ்சித்தால் பாரிய இழப்புகள் மற்றும் இயற்கைச் சீற்றங்கள் உண்டாகும்.

காலத்தை வென்ற கந்தக் கடவுளே
ஞாலத்தை ஆள்வான் நன்மக்கள் வாழவே.

எதிர்காலம் குறித்த இந்தியா, தமிழகத்தில் நிகழ்வு குறித்த முருகப்பெருமானின் ஆசிநூல்

வேற்றுமையில் ஒற்றுமை நிறைந்த
வல்லமை கொண்ட பாரதமே
ஆற்றல்பட தெய்வ நெறியோடு
அஞ்சாமைமிக்க செந்தமிழகமே

தமிழகமே இந்தியா புவிதன்னில்
தக்க நிகழ்வாக எதிர்கால பலனாக
நேமமுடன் விளம்பி ஆனி திங்களில்
நிகழ்த்திட சூலதிகதி மேல் தசதிகதி வரை
(விளம்பி ஆனி 3ம் நாள் 17.06.2018 முதல் ஆனி 10ம் நாள் 24.06.2018 முடிய)

வரையிலான நிகழ்வு பலனை
வழங்கிடுவேன் சுப்பிரமணியர் யானும்
நிறைவுபட வெப்பம் தவிர்க்கின்ற
நீர்வளமாக இயற்கை இறங்கும்

இறங்கினாலும் அளவுக்கு மேலான
இயற்கை சீற்றமாக காற்று மண்டலம்
இறங்கி தமிழகம் இந்திய எல்லை
இடர் தரும் சில அழிவுகள் தரும்

தருகவே கழனி காக்கும் முயற்சி
தடைபடும் அரங்கேறா தவிப்பும்
வருமுலகில் கழனியோடு கழனி மக்கள்
வாழ்வாதாரம் நசிவு காண்கும்

காண்கவே தமிழகம் பலவாறு
கண்டிட நேரும் போராட்டங்களை
மண்ணை காக்கும் நோக்கில்
மக்களுக்கு உயிர்பலி இழப்பும் நேரும்

நேருமையிலா கல்வி முறையால்
நிலவுலகில் குழப்பம் தொடரும்
மாறுதலான செயல் முறைகளால்
மருத்துவத் துறை தமிழகத்துக்கு கனவாகும்

ஆகவே வளரும் சந்ததிகளிடம்
அவநம்பிக்கை நம்பகமின்மை கூடி
வகைபடா எதிர்மறை நிகழ்வு காணும்
வருவாய் பெருக்கம் காணா இந்தியா

இந்தியா உலக நாடுகள் அளவில்
இறக்கம் காணும் பொருளாதார வழி
இந்திய முதுகெழும்பான சில ஏற்றுமதி
இடர்களை காணும் வரிச்சுமை வழி

வரிச்சுமையால் சிறுதொழில்கள்
வகையின்றி தடைபடும் மூடப்படும்
வரிச்சுமை வழி செயல் திட்டங்களும்
வளரா மந்தமும் முடக்கமும் காண்கும்

காண்கவே இவை சோடைகள்
கலிகால சிக்கல்கள் விலகி
உண்மைபட வளர்ச்சி பாதுகாப்பு
உலகளவில் தன் நிலை உயர

உயர ஆளுமை மாந்தர்கள்
உண்மைபட மக்களை நோக்கி
தயவான ஆட்சி புரிந்துமே
தரும வழிகளை கடைப்பிடித்து

கடைப்பிடித்து மெய்ஞான வழிகாட்டும்
கருணைமிகு என் சூட்சுமமான
சோடை போக்கும் அரங்க மகான்
சொல் செயல் ஞானவழிகள் தனை

வழிகள் தனை ஏற்று வருக
வறுமை கொடுமை எனும் பாதக
அழிவுகளில்லா பாதுகாப்புமிக்க
ஆளுமை கூடி தமிழகம் இந்தியா சிறக்கும்

வார ஆசி நூல் முற்றே.
-சுபம்-

முருகப்பெருமான் துணை

முருகப்பெருமான் அருளிய வார ஆசி நூலின் சாரம் :

எண்ணற்ற வேற்றுமைகளை உள்ளடக்கி இருந்தாலும் ஒன்றுபட்ட மக்களாக ஒன்றுபட்ட தேசமாக ஒற்றுமையுடன் வல்லமை மிகக் கொண்ட பாரத தேசமே ஆற்றல் மிகக் கொண்டு தெய்வீக நெறியோடு எதற்கும் அஞ்சாத வல்லமைமிக்க செந்தமிழகமே வாழ்க வாழ்க. தமிழகத்திலும் இந்தியாவிலும் விளம்பி வருடம் ஆனி மாதம் 3ம் நாள் 17.06.2018, ஞாயிறு முதல் ஆனி மாதம் 10ம் நாள் 24.06.2018, ஞாயிறு முடிய உள்ள ஒரு வார கால நிகழ்வுகளை சுப்பிரமணியர் யானும் உரைக்கின்றேன் என்கிறார் மகான் சுப்பிரமணியராகிய முருகப்பெருமான்
.
நாட்டினில் இதுவரை நிகழ்ந்து வந்த வெப்பத்தை குறைக்கும்விதமாக நிறைவாக நீர்வளமாக இயற்கை மழையாய் பெய்திடும். ஆனாலும் மழையானது வழக்கத்திற்கு மாறாய் சீராக இல்லாமல் அளவிற்கு அதிகமாக பெய்து இயற்கை சீற்றமாக காற்று மண்டலம் இறங்கி தமிழகத்திலும் இந்தியாவிலும் சில அழிவுகளை தரும்.

இதனால் விவசாயங்களையும் விவசாய நிலங்களையும் காக்கும் முயற்சி தடைபடும். விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்பட மாட்டாது. வருங்காலங்களில் விவசாய நிலங்கள் பாதிப்படைவதோடு விவசாயிகளும் வாழ்வாதாரம் இழந்து நலிவு காண நேர்ந்திடும். தமிழகம் பலவிதமான போராட்டங்களை காண நேரும். தமிழக மண்ணை காக்கும் நோக்கில் மக்களுக்கு உயிர்பலியும் பெரும் இழப்பும் ஏற்படும்.
நேர்மையற்ற கல்வி முறையால் உலகினில் மேலும் குழப்பங்கள் உண்டாகும். மத்திய அரசின் மாறுபட்ட கொள்கை முடிவுகளால் மருத்துவதுறை என்பது தமிழகத்திற்கு இன்னும் கனவாகவே இருக்கும். இதனால் வளர்ந்து வரும் இளைஞர்களிடையே அவநம்பிக்கை உண்டாகும். நம்பிக்கை இன்மை பெருகி எதிர்மறையான நிகழ்வுகள் உண்டாகும்.

வருவாய் பெருக்கம் மந்தமாக இருக்கும். வருவாய் பெருக்கம் இல்லாத இந்திய தேசம் உலக நாடுகளின் முன்னிலையில் இறக்கம் காணும். பொருளாதார வழிகளிலே சில இழப்புகள் ஏற்படும்.
இந்தியாவின் முதுகெலும்பான சில ஏற்றுமதிகள் இடர்பாடுகளை காணும். அரசு தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்கும் வரிவிதிப்புகளால் சிறுதொழில்கள் வகையின்றி தடைபடும். சிலவகை தொழில்கள் முற்றிலும் முடங்கிவிடும். வரிச்சுமையினால் செயல் திட்டங்களும் வளராது மந்தநிலை காணும், முடக்கமும் அடையும்.

இப்படிப்பட்ட குற்றமுள்ள துன்பமயமான கலிகாலத்தின் சிக்கல்கள் எல்லாம் விலகி உண்மையான வளர்ச்சியும் பாதுகாப்பையும் உலகளவில் பெற்று இந்திய தேசம் தனது நிலையிலிருந்து உயர்ந்திட வேண்டுமாயின் இந்த ஞானபூமி இந்தியாவை ஆளும் ஆட்சியாளர்கள் சுயநலம் இன்றி மக்களிடத்து உண்மையுடன் நடந்து மக்களிடத்து தயவான ஆட்சி புரிந்து தருமத்தின் வழிகளை நெறிகளை கடைப்பிடித்து மெய்ஞான வழிகாட்டும் உயர் ஞானகுரு முருகப்பெருமான் எமது சூட்சுமங்களை கொண்ட குருநாதன் துன்பம் போக்கும் ஆறுமுக அரங்கமகா தேசிகனாரின் சொற்களையும், செயல்களையும் அரங்கன் உபதேசிக்கும் ஞானவழிகளையும் ஏற்று கடைப்பிடித்திட இந்திய தேசத்திலே வறுமை ஒழியும். கொடுமையான பாதக சூழ்நிலை எல்லாம் மாறி அழிவுகளிலிருந்து இந்தியா மீண்டு வருவதால் பாதுகாப்புமிக்க ஆட்சியாளர்களால் ஆட்சி செய்யப்பட்டு தமிழகமும் இந்தியாவும் சிறந்து விளங்கும் என தமது வார ஆசி நூல் மூலம் உலகறிய உரைக்கின்றார் மகான் சுப்பிரமணியராகிய முருகப்பெருமான்.
-சுபம்-

காலத்தை வென்ற கந்தக் கடவுளே
ஞாலத்தை ஆள்வான் நன்மக்கள் வாழவே. 
- மகான் ஆறுமுக அரங்கமகா தேசிகர்.



     

Related Articles


2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html






No comments:

Post a Comment