Monday, January 13, 2020

தன்னை அறிந்தால் கடவுளை அறியலாம்

தன்னை அறி

ஓம் திருமூலர் திருவடிகள் போற்றி போற்றி "தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்சிக்கத் தானிருந் தானே." -திருமந்திரம் "என்னை யறிகிலேன் இத்தனை காலமும் என்னை யறிந்தபின் ஏதும் அறிந்திலேன் என்னை யறிந்திட் டிருத்தலும் கைவிடா(து) என்னையிட் டென்னை உசாவுகின் றேனே." -திருமந்திரம் "தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள் முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள் பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள் சென்னியில் வைத்த சிவனருளாலே" -திருமந்திரம் "தன்னை அறி" தன்னைஅறிகின்றவன் தலைவனை அறிவான். உடம்பைப்பற்றியும், உயிரைப்பற்றியும் அறிவதே தன்னை அறிவதாகும். அதுவே ஞானமாகும். உடம்பையும், உயிரையும் பற்றி அறிந்து கொண்டவர்கள் இயற்கை அன்னையைப் பற்றியும் அறிந்து கொள்வார்கள். தன்னை அறியக்கூடிய அறிவு பெற்றாலும், உலகநடையில் இருந்து கொண்டே விடுபடாமல் ஆசான் அகத்தீசரை தினமும் காலை மாலை பூசை செய்தும், தவத்திற்குரிய முறையை கடைப்பிடித்தும், மற்றும் உடம்பை பாதுகாக்க கூடிய மூலிகை கற்பங்களையும் ஆசானைக் கேட்டு உண்டு, அத்துடன்ஆசானின் அனுமதியுடன் அவ்வப்போது பிரணாயாமமாகிய யோகம் செய்யவேண்டும். தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளாது, தன்னடக்கத்தோடு இருந்து குரு அருள் பெற்றுக்கொள்ள வேண்டும். குரு அருள் இன்றி ஒருவன் தன்னை அறியமுடியாது. குணக்கேடுகளால்தான் நமக்கு மீண்டும் மீண்டும் பிறவி வருகிறது. பொறாமை, பேராசை, அளவு கடந்த சினம், பிறர் மனம் புண்படும்படி பேசுதல் போன்ற குணக்கேடுகளே பிறவிக்கு காரணமாகும். குருபக்தி தான் குணக்கேடுகளை பற்றி புரிந்தும் அதை வெல்லுகின்ற உபாயத்தையும் உணர்த்தும். ஆகவே குருபக்தி தான் தன்னை அறியக்கூடிய தகைமையைத் தரும்.


Posted By Nathan Surya

*******************************************************************

நான் கடவுள்! நீ கடவுள்! நாம எல்லோரும் கடவுள்!!!

யார் கடவுள்?


"நட்ட கல்லும் பேசுமோ
நாதன் உள்ளிருக்கையில்..?!"


அவன் நம்முள் இருக்க
எவனையும் நம்பி மாள்வது ஏனோ?!


உள்ளம் பெருங்கோவில் ஊன் உடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
ஐம்புலன்களும் காளா மணிவிளக்கு .

-திருமூலர் திருமந்திரம்-

'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்' என்பதில், உடம்பு ஆலயம். உள்ளம் கர்பக் கிரகம். 'வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்'- உடம்பாகிய ஆலயத்துக்கு வாய் தான் வாசல். உள்ளம் ஆகிய கருவறையில் சீவனாகிய சிவலிங்கம் இருக்கிறதாம். 'கள்ளப் புலனைந்தும் காள மணி விளக்கே'- ஐந்து புலன்களும் இறைவனுக்கு ஏற்றி வைத்த விளக்குகளாம்.

பூசை செய்தற்கு அவர்களது இருதயமே அவ்விலிங்கம் எழுந்தருளியிருக்கும் கருவறையாயும், ஊனால் அமைந்த உடம்பே அக்கருவறை உள்ளடக்கிச் சூழ்ந்துள்ள திருச்சுற்றுக்களாயும், வாயே அவ்விலிங்கத்தின் நேர் நோக்கு வாயிலாயும், உயிரே இலிங்கமாயும், கண் முதலிய ஐம்பொறி உணர்வுகளே ஒளிமிக்க இரத்தின தீபங்களாயும் அமையும்.

'உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான்'


உடம்பு ஆலயம், உள்ளம் கர்பக் கிரகம், உறு பொருள் சீவனாகிய சிவன். மொத்த ஆலயத்தையும் கோயில் என்பதுண்டு. திருமந்திரத்திலேயே

'எண்ணிலா ஞானி உடலெரி தாவிடில்
அண்ணல் தம் கோயில் அழல் இட்ட தாங்கொக்கும்'


என்கிற போது உடம்பு மொத்ததையும் கோயில் என்று கூறுகிறார்.

மேலும் எடுத்துக்காட்டுகள்

நெஞ்சகமே கோவில்
நினைவே சுகந்தம்
அன்பே மஞ்சன நீர்
பூஜை கொள்ள வாராய் பராபரமே!

-தாயுமானவர்-

"நட்ட கல்லை தெய்வம் என்று
நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி வந்து முனுமுனுவென்று
சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன்
உள்ளிருகாயில்?
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை தான் அறியுமோ?"

- சிவவாக்கியர்-

நாமெல்லாம் இறையின் கூறு. மனிதன் கடவுளுடன் இரண்டறக் கலக்கலாம்.

யார் கடவுள்..?!

"மாலும் மனிதன் 
மலரோனும் தான் மனிதன் 
ஆலமுண்ட கண்டன் அவன் மனிதன் 
சீலமுடன் உற்றுணர்ந்த உகந்த பெரியார்
கற்றுமறிந்தார் இல்லை"
- மகான் ஔவையார்

மனிதன்தான் கடவுள் ஆனான். முற்றுப்பெற்ற ஞானியரே கடவுள். இதை நாமனைவரும் உணர வேண்டுமென விரும்புகிறார் முற்றுப்பெற்று வணக்கத்திற்குரிய கடவுள்நிலையை அடைந்த ஞானியான ஆசான் ஔவையார்.

"மாலும் மனிதன்" - திருமாலும் மனிதனே

"மலரோனும் தான் மனிதன்" - பிரம்மாவும் மனிதன்

"ஆலமுண்ட கண்டன் அவன் மனிதன்" - சிவபெருமானும் மனிதனே

"சீலமுடன் உற்றுணர்ந்த உகந்த பெரியார்
கற்றுமறிந்தார் இல்லை" - இந்த மானிடரே கடவுளாக முடியும். எத்தனை வேதங்களைக் கற்றாலும், இந்த உண்மையை உணர்ந்தோர் எவருமேயில்லையே என வருத்தப்படுகிறார் முற்றுப்பெற்ற ஞானி ஔவைப் பிராட்டியார்.

இதைத்தான் முற்றுப்பெற்ற ஆசான் திருமூலரும்…

"தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே!"

என்கிறார். இது முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டியதாகும். மனிதன் முயன்றால், முற்றுப்பெற்ற சித்தர்/ஞானியர் வழி நடந்தால் மனிதரும் கடவுளாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், கடவுளரும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். முற்றுப்பெற்ற சித்தர்களைக் குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் மட்டுமே இது சாத்தியம்.

போற்றுவோம் முற்றுபெற்ற சித்தர்களை, அடைவோம் கடவுள் தன்மையை.

கருத்தாக்கம்: அடிகளார் ஆறுமுகஅரங்கர்


Nàthàn கண்ணன் Suryà

ஓங்காரக்குடில் Ongarakudil - London Branch

தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிக சுவாமிகள் அருளிய உபதேசம் Contact Book Stall: +919095633344 படங்கள்: திருப்பட்டூர், திருச்சி ஓம் பதஞ்சலி முனிவர் திருவடிகள் போற்றி போற்றி




Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html

Posted By Nathan Surya

No comments:

Post a Comment