Tuesday, January 14, 2020

சித்திரைத் திங்களே தமிழர்களின் புத்தாண்டு.

சித்தர்கள் வகுத்த தமிழ் ஆண்டுகளும்,  தமிழர்கள் இயற்கைக்குச் செலுத்தும் நன்றியும்...!

சித்திரையைத் தமிழ்ச்சித்தர்கள் ஆண்டின் தொடக்கமாக வைத்ததற்கு வானவியல் காரணங்கள் பலவுண்டு. அதை இன்னொரு பதிவில் ஆராய்வோம். பலரும் தமிழ் மாதங்கள் செந்தமிழில் இல்லை எப்படி அவை தமிழருக்குரிய ஆண்டுகளாக இருக்கும் என்கின்றனர். அறுபது(60) ஆண்டுச் சுழற்சிக்கும் தமிழ்ப் பெயர்களுண்டு. அவற்றைப் பதிவின் இறுதியிற் காண்க. சம(ஸ்)கிருதத்தைப் பலரும் வடமொழியென அழைக்கின்றனர். இது மிகத்தவறானது. ஹிந்தி, உருது போன்றவற்றை வடமொழியெனலாம். சம(ஸ்)கிருதத்தையல்ல. 

ஹிந்தி, உருது போன்றவை சம(ஸ்)கிருத சொற்களைப் பயன்படுத்திப் பிறந்த மொழிகளேயன்றி இலக்கண அடிப்படையில் ஹிந்தி, உருது போன்ற வடமொழிகளைவிட தமிழ்மொழிக்கே தொடர்பதிகம். மாபெரும் தமிழாசான், தமிழ்ச்சித்தர் வியாசரால் தமிழுக்குச் சமமாக(சம) உருவாக்கப்பட்ட கிருதமே(கிருதம்=மொழி) சம(ஸ்)கிருதம். சித்தர்களால் வழிபாட்டிற்காகப் பயன்படுத்ப்பட்ட மொழியேயன்றி, பேச்சுமொழியல்ல சம(ஸ்)கிருதம். தமிழே சித்தர்களின் உயர்வான ஞானமொழி. .சம(ஸ்)கிருதத்தைவிடப் பலயுகங்கள் காலத்தால் மூத்ததும் தமிழே. இதை ஆழமாக இன்னுமொரு பதிவிற் பார்ப்போம். 

தை முதல்நாள் தமிழர்களின் திருநாள். உழவர்களின் பெருநாள். தமிழர்கள் இயற்கைக்கு நன்றிகூறி விழா எடுக்கும் இனிய நாள். தமிழ்கூறும் நல்லுலகம் போற்றும் இன்ப நாள். இந்த நாளன்று உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் சாதி, மதம் என்ற எந்த ஒரு வேறுபாடில்லாமல், அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. சொல்லப்போனால், அது தமிழர்களின் ஒரு தேசியத் திருவிழா என்றும் சொல்லலாம். ஏனெனில் இந்த பொங்கல் பண்டிகை உலமெங்கும் இருக்கும் தமிழர்களால் இன்றும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. ஆனால், பலருக்கும் இந்த பொங்கல் பண்டிகை எதற்கு கொண்டாடுகின்றோம் என்றே தெரியாது. தெரியாமலேயே இத்தனை வருடங்களாக பலரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றார்கள்.

பொங்கல் விழாவானது களனி திருத்தி, வயல் உழுது, எரு இட்டு, நீர் பாய்ச்சி, நெல் விதைத்து, களை எடுத்து,விளைந்த நெல்மணிக் கதிர்களை அரிவி வெட்டி, சூடு மிதித்து, நெல்லை வீட்டுக்குக் கொண்டு வந்து கூடையில் போட்டு பின்னர் அதில் கொஞ்சம் எடுத்து உரலில் போட்டுக் குத்தி அரிசியாக்கி, புதுப்பானையில் பாலும் சர்க்கரையும், பாகும் பருப்பும் இட்டுப் பொங்கி, மஞ்சளும், இஞ்சியும், கரும்பும், கற்கண்டும் இயற்கைத் தெய்வமான ஞாயிறுகுப் படைத்து மனைவியும் மக்களும் கொண்டாடி மகிழும் விழா ஆகும்.

அறுவடைக்கு முன்னதாக நல்ல நாளில் வயலில் தலைசாய்த்து காற்றினால் தலையசைத்து நிற்கும் நெல்மணிக் கதிர்களில் கைப்பிடி அரிந்து, தட்டில் எடுத்து வந்து வீட்டு வாசலில் கட்டுவார்கள். இதற்குப் புதிர் எடுத்தல் என்று பெயர். பின்னர் தைப்பூசத் திருநாளில் புதிர் குழைத்தல் இடம்பெறும். புத்தரிசி பொங்கி, சர்க்கரையும் வாழைப் பழமும் சேர்த்துப் படைக்கும் இப்புதிர் சோற்றை சுற்றமும் நட்பும் சூழ இருந்து உண்டு மகிழ்வர்.

பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். இந்நாளில் வயல் உழவும், வண்டி இழுக்கவும், பால், தயிர், நெய் கொடுக்கவும், எரு எடுக்கவும் காரணமாக இருந்த எருதுகளையும், பசுக்களையும், கன்றுகளையும் குளங்களில் குளிப்பாட்டி, குங்குமம், சந்தனம், மலர் மாலைகளால் அலங்கரித்து குடிக்கக் பச்சையரிசிக் கஞ்சி கொடுப்பர். உழவன் கமத்துக்கு துணையாக இருந்த கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளே மாட்டுப் பொங்கலாகக் கொண்டாடப் படுகிறது. இந்த விழா பட்டிப் பொங்கல் என்றும் அழைக்கப்படும்.

இந்தத் தமிழர் திருநாளைச் சாகடிக்காமல் வளர்த்து வருவது நமது கடமை. கொஞ்சம் கொஞ்சமாக கலை இலக்கியங்களை வேலைப்பளுவாலும் அரசியல் சூழ்ச்சியாலும் மறந்து வரும் தமிழர்கள், இனம் வாழ வேண்டுமெனில், நமது கலை கலாச்சாரத்தை மீட்டெடுப்போம்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. அதாவது தமிழ் உறவுகளது வாழ்வில் அல்லல்கள் நீங்கி, துன்பங்கள் தொலைந்து, கோடி இன்பங்கள் குவிந்து ஒளி பிறக்கும். இன்பம் சேரும் மகிழ்ச்சி பொங்கும் என எதிர்பார்ப்போமாக!

தமிழப் புத்தாண்டு..!

தமிழ்நாட்டில் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் தை, சித்திரை என்று இருவேறு பிரிவினர்களால் வகைப்படுத்தப்படுகிறது. இதில் எது உண்மையாக இருக்கும்?

தமிழர்கள் இந்தத் தமிழ்நாட்டில் மட்டுமா இருக்கின்றனர்? இந்தியா தவிர, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், பிஜூ தீவுகள் மற்றும் தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் புலம் பெயர்ந்து பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு எனக் கொண்டாடி வருகின்றனர். 

தமிழ்நாட்டில் இருக்கும் நாம் பன்னெடுங்காலமாக சித்திரை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறோம். உலகம் முழுவதும் கதிரவனை (ஞாயிறு) அடிப்படையாகக் கொண்டு காலத்தை வரையறுத்திருக்கிறார்கள். இந்தக் காலத்தின் அளவை மிகத் துல்லியமாகக் கண்டறிந்து நம் முன்னேர்கள் முன்பே தெரிவித்திருக்கிறார்கள். இதைத் தமிழில் “தெறிப்பளவு” என்பார்கள். ஆங்கிலத்தில் “Time Measure ” என்பார்கள். அதாவது,

2 கண்ணிமை = 1 நொடி
2 கைநொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 விநாடி
60 விநாடி = 1 நாடி – நாழிகை
2½ நாழிகை = 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் = 1 சாமம்
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம் = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்
2 அயனம் = 1 ஆண்டு
60 ஆண்டு = 1 வட்டம்
360 ஆண்டு = 1 தேவ ஆண்டு
12 ஆயிரம் தேவ ஆண்டு = 1 சதுர்யுகம்

இந்த சதுர்யுகத்தில் பார்த்தம், பரமம் போன்றவைகளைக் கடந்து யுகம் இருக்கிறது. இந்த யுகங்களில் கிருதயுகம், திரேதாயுகம் மற்றும் துவாபரயுகம் போன்றவை முடிந்து போய் விட்டன. தற்போது கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது. இப்படி பல லட்சம் ஆண்டுகளுக்குக்கும் மேலான காலக் கணக்குகளை நம் முன்னோர்கள் சிறப்பாக வகுத்து வைத்திருந்திருக்கிறார்கள்.

இக்காலச் சுழற்சியில் தமிழர்கள் நாள் மற்றும் ஆண்டைப் பொழுதுகளாகப் பிரித்துள்ளனர்.

"பெரும்பொழுதென்றா சிறுபொழுதென்றா
இரண்டு கூற்றத் தியம்பிய பொழுதே"

என்று நம்பியகப்பொருள் நூற்பா மொழிகிறது

ஒவ்வொரு நாளையும் நான்கு மணிகளாகக் கொண்டு பகுத்து, ஆறு பொழுதுகளாகப் பிரித்துள்ளனர். அந்தப் பொழுதுக்கு தனித்தனியாகப் பெயரையும் வைத்திருந்தார்கள். அவை;

2 முதல் 6 மணி வரை – இராப்பொழுதின் பிற்கூறு - வைகறை 
6 முதல் 10 மணி வரை – பகற்பொழுதின் முற்கூறு – விடியல் (காலை)
10 முதல் 2 மணி வரை – பகற்பொழுதின் நடுக்கூறு - நண்பகல்
2 முதல் 6 மணி வரை – பகற்பொழுதின் பிற்கூறு - ஏற்பாடு
6 முதல் 10 மணி வரை – இராப்பொழுதின் முற்கூறு - மாலை
10 முதல் 2 மணி வரை – இராப்பொழுதின் நடுக்கூறு - யாமம்

இந்த ஆறு பொழுதுகளும் சேர்ந்தது சிறு பொழுது என்கிறார்கள்.

இதுபோல் ஒவ்வொரு ஆண்டையும் இரு மாதங்களாகப் பகுத்து, ஆறு பொழுதுகளாகப் பிரித்துள்ளனர். அந்தப் பொழுதுக்கு தனித்தனியாகப் பெயரையும் வைத்திருந்தார்கள். அவை;

சித்திரை & வைகாசி மாதங்கள் – இளவேனில் காலம் 
ஆனி & ஆடி மாதங்கள் – முதுவேனில் காலம்
ஆவணி & புரட்டாசி மாதங்கள் – கார் காலம் 
ஐப்பசி & கார்த்திகை மாதங்கள் – கூதிர்க் காலம்
மார்கழி & தை மாதங்கள் – முன்பனிக் காலம்
மாசி & பங்குனி மாதங்கள் – பின்பனிக் காலம்

என்று இந்த ஆறு காலங்களும் சேர்ந்து பெரும் பொழுது என்கிறார்கள். 

இந்தப் பெரும் பொழுதின் தொடக்கம் இளவேனில் காலம்தான். இந்தக் காலத்தின் முதல் மாதம் சித்திரை மாதம். இம்மாதம் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாக இருப்பதுதான் சரி.

தை மாதம் ஆண்டிற்கான பெரும் பொழுதுகளில் முன்பனிக் காலத்தில் வருகிறது. இந்த முன்பனிக் காலமே ஆண்டின் முதல் தொடக்கமாக வைத்துக் கொண்டாலும் மார்கழி மாதம் ஆண்டின் தொடக்கமாக இருக்குமே தவிர, அதில் இரண்டாவதாக உள்ள தை மாதம் எப்படி ஆண்டின் தொடக்கமாகும்?

தமிழ் மாதங்கள் கதிரவனை அடிப்படையாகக் கொண்ட மாதங்களாகும். அதாவது பூமிக்குச் சார்பாகக் கதிரவனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே காலங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பூமியிலிருந்து பார்க்கும் போது பூமியைச் சுற்றி வருவது போல் தோன்றும். கதிரவன் அவ்வாறு ஒருமுறை சுற்ற எடுத்துக் கொள்ளும் காலம் ஒரு ஆண்டாகும். இந்தச் சுற்றுப்பாதையின் தளம் பூமியை மையமாகக் கொண்டு ஒவ்வொன்றும் 30 பாகை (degrees) எனும் அளவுள்ள 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் இராசிகள் எனப்படுகின்றன. எனவே ஒவ்வொரு முழுச் சுற்றின் போதும் கதிரவன் 12 இராசிகள் வழியாகப் பயணம் செய்கிறது. அந்தப் 12 இராசிகளை;

1. மேடம் (‍ேமஷம்) 
2. இடபம் (ரிஷபம்) 
3. மிதுனம் 
4. கர்க்கடகம் (கடகம்) 
5. சிங்கம் (சிம்மம்)
6. கன்னி 
7. துலாம் 
8. விருச்சிகம் 
9. தனுசு 
10. மகரம் 
11. கும்பம் 
12. மீனம் 

என்று குறிப்பிடுகின்றனர். 

கதிரவன் இந்த பன்னிரண்டு இராசிக்குள் நுழைந்து அதை விட்டு வெளியேறும் வரையான காலமே ஒரு மாதம் ஆகும்.

கதிரவன் மேட இராசியில் பயணம் செய்யும் போது நடைபெறும் மாதம் சித்திரை. இவ்வாறே அடுத்துள்ள ஒவ்வொரு இராசியிலும் கதிரவன் பயணிக்கும் காலத்தை மாதங்களாகக் கொண்டு மொத்தம் 12 மாதங்கள் என கணக்கிட்டுள்ளனர். 

அவை முறையே சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி என 12 மாதங்களாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 

இம்மாதங்களை நல்ல தமிழில் சொன்னால், 

1. மேழம்
2. விடை 
3. ஆடவை 
4. கடகம் 
5. மடங்கல் 
6. கன்னி 
7. துலை 
8. நளி 
9. சிலை
10. சுறவம்
11. கும்பம் 
12. மீனம் 

என்று சொல்லலாம். 

இப்படி காலக்கணக்கை கணிக்கும் நிலையைத் தமிழில் காலந்தேர் (காலம் + தேர்) என்று சொல்கிறோம். இதைத்தான் ஆங்கிலத்தில் Calendar என்கின்றனர்.

தமிழ்க் காலந்தேரில் இருக்கும் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்திற்கென்று சில சிறப்புகள் உண்டு. சித்திரை மாதம் ஆண்டுக்கான பெரும் பொழுதில் இளவேனில் காலத்தில் இருக்கிறது. இந்தக் காலத்தை வசந்த காலம் என்றும் சொல்வார்கள்.

ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்கள்.!

தமிழ் ஆண்டுகள் அறுபது எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் முதல் இருபது ஆண்டுகள் உத்தம ஆண்டுகள் என்றும், அடுத்த இருபது ஆண்டுகள் மத்திம ஆண்டுகள் என்றும், கடைசி இருபது ஆண்டுகள் அதம ஆண்டுகள் என்றும் அழைக்கப் பெறுகின்றன. இந்தச் சம(ஸ்)கிருத பெயர்களுக்குச் சரியான தமிழ்ப் பெயர் உங்களுக்குத் தெரியுமா?

தெரியவில்லையே என்று கலங்க வேண்டாம். உங்களுக்காகவே சம(ஸ்கிருதப் பெயர்களும், அதற்கு இணையான தமிழ்ப் பெயர்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

சம(ஸ்கிருதப்  பெயர் -தமிழ்ப் பெயர்

பிரபவ -நற்றோன்றல்

விபவ -உயர்தோன்றல்

சுக்கில-வெள்ளொளி

பிரமோதூத-பேருவகை

பிரசோத்பத்தி-மக்கட்செல்வம்

ஆங்கீரச-அயல்முனி

சிறிமுக-திருமுகம்

பவ- தோற்றம்

யுவ-இளமை

தாது-மாழை

ஈசுவர-ஈச்சுரம்

வெகுதானிய-கூலவளம்

பிரமாதி-முன்மை

விக்ரம-நேர்நிரல்

விச-விளைபயன்

சித்திரபானு-ஓவியக்கதிர்

சுபானு-நற்கதிர்

தாரண-தாங்கெழில்

பார்த்திப-நிலவரையன்

விய-விரிமாண்பு

சர்வசித்த-முற்றறிவு

சர்வதாரி-முழுநிறைவு

விரோதி- தீர்பகை

விகிர்தி-வளமாற்றம்

கர-செய்நேர்த்தி

நந்தன-நற்குழவி

விசய-உயர்வாகை

சய-வாகை

மன்மத-காதன்மை

துன்முகி-வெம்முகம்

ஏவிளம்பி-பொற்றடை

விளம்பி-அட்டி

விகாரி-எழில்மாறல்

சார்வரி-வீறியெழல்

பிலவ-கீழறை

சுபகிருது-நற்செய்கை

சோபகிருது-மங்கலம்

குரோதி-பகைக்கேடு

விசுவாவசு-உலகநிறைவு

பராபவ-அருட்டோற்றம்

பிலவங்க-நச்சுப்புழை

கீலக-பிணைவிரகு

சவுமிய-அழகு

சாதாரண-பொதுநிலை

விரோதி கிருது-இகல்வீறு

பரிதாபி-கழிவிரக்கம்

பிரமாதீச-நற்றலைமை

ஆனந்த-பெருமகிழ்ச்சி

இராட்சச-பெருமறம்

நள- தாமரை

பீங்கள-பொன்மை

காளயுக்தி-கருமைவீச்சு

சித்தார்த்தி-முன்னியமுடிதல்

ரவுத்ரி-அழலி

துன்மதி-கொடுமதி

துந்துபி-பேரிகை

உருத்ரோத்காரி-ஒடுங்கி

இரக்தாட்சி-செம்மை

குரோதன்-எதிரேற்றம்

அட்சய-வளங்கலன்

இனிய தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் வாழ்த்துகள்.

Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html

Posted By Nathan Surya


Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html

Posted By Nathan Surya

No comments:

Post a Comment