Monday, February 10, 2020

150 ஆண்டுகளாக அணையா அடுப்பு.

பசிப்பிணி போக்கி, சோதி வழிபாடு ஊட்டி வளர்க்கும் ஆன்ம நேய ஒருமைப்பாடு.

அருட்பெருஞ்சோதி
அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்சோதி
150 ஆண்டுகளாக பல லட்சம் ஜீவர்களின் பசியை போக்கிய வள்ளலார் ராமலிங்கப் பெருமானின் அணையா அடுப்பு.

இடம். வடலூர்
பசிப்பிணி போக்குவதே இறைவழிபாடு எனவும் சாதி மத சடங்கெல்லாம் விட்டொழித்து அருள்சோதியே மனித குலத்திற்கான இறைவழிபாடு என இயம்பிய அருளாளர் நிறுவிய உணவுச்சாலையைப் போற்றுவோம். அவர்தம் கொள்கையைப் பின்பற்றுவோம். வாழிய வள்ளலார் கண்ட ஆன்ம நேய ஒருமைப்பாடு.

வடலூரில் 150 ஆண்டுகளுக்கு முன் மூட்டப்பட்ட பசி போக்கும் அணையா அடுப்பு!

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’


இந்த வரியைப் படித்ததும் நம் மனதில் வள்ளலார் உருவம் தோன்றும். எங்கள் பள்ளியில் இருந்து அரை மணி நேரம் பயணித்தால், வள்ளலார் பிறந்த ஊரான மருதூர் இருக்கிறது. ‘என் பள்ளி என் சுட்டி’க்காக அங்கே சென்றோம்.1823-ல் ராமையா பிள்ளைக்கும், சின்னம்மையாருக்கும் ஐந்தாவது மகனாகப் பிறந்தவர், வள்ளலார் என்கிற ராமலிங்கம்.


ஏழை மக்களின் பசியை, ஒரு பிணி (நோய்) என்று சொன்னவர். ஜாதி, மதங்கள் தலைவிரித்தாடிய 1867-ம் ஆண்டு அது. ஜாதி, மத பேதம் மற்றும் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல், அனைவரின் பசியையும் போக்க முடிவெடுத்தார் வள்ளலார். அதற்காக, ‘சத்திய தர்மச்சாலை’யை வடலூரில் நிறுவினார். அப்போது, அவர் கையால் மூட்டப்பட்டதுதான் ‘அணையா அடுப்பு’.

இன்று வரை அந்த அணையா நெருப்பு பலரின் பசியைப் போக்கிக்கொண்டிருக்கிறது. இயற்கைச் சீற்றங்கள் கடலூர் மாவட்டத்தைப் பல முறை புரட்டிப் போட்டிருக்கிறது. ஒரு நாளும் இந்த நெருப்பு அணைந்தது இல்லை. தினமும் மூன்று வேளை சமைக்கப்பட்டு, ஒவ்வொரு வேளைக்கும் நூற்றுக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுவருகிறது. அதற்கான அரிசியும், மற்ற பொருட்களும் ஒரு நாளும் காசு கொடுத்து வாங்கியது இல்லை. எல்லாமே பொதுமக்களின் காணிக்கைதான்.

இதைப் பார்த்துதான் பள்ளிக் குழந்தைகளின் பசியைப் போக்கும் மதிய உணவு திட்டத்தை காமராஜர் கொண்டுவந்திருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

பசி தீர்ந்தால் கருணை உருவாகும். அந்தக் கருணையின் மூலம் இறைவனை தரிசித்து ஞானம் பெறலாம். அதற்கு, ஜோதி மூலம் வழிபாடு செய்ய வேண்டும் என்பது வள்ளலாரின் எண்ணம். அதற்காக, 1872-ல் ‘சமரச சுத்த சன்மார்க்க சங்கம்’ எனும் சத்திய ஞான சபையை நிறுவினார். ஜோதி ஏற்றி வழிபாடு செய்தார்.

1874-ல் மேட்டுக்குப்பம் சித்தி விளாகம் மாளிகையில், ‘முத்தேக சித்தி’ (ஜோதியாக மறைந்தார்) பெற்றார் வள்ளலார்.

சத்திய தர்மசாலைக்கு நாங்கள் சென்றபோது, அன்றைய மதிய உணவு தயாராகிக்கொண்டிருந்தது. சமைப்பவர்களுக்கு உதவியாக களத்தில் இறங்கினோம். பாத்திரங்கள் எடுத்துத் தருவது, காய்கறிகளை நறுக்கித் தருவது போன்றவற்றைச் செய்தோம். சாப்பாடு தயாரானதும், மேசையில் இலைகள் போட்டுப் பரிமாறினோம். சாப்பிட வந்தவர்கள் எங்களைப் பார்த்து புன்னகைத்து, நன்றியுடன் பாராட்டிச் சென்றனர்.

சத்திய ஞான சபையைச் சுற்றி இரும்புச் சங்கிலி போடப்பட்டிருப்பதன் காரணத்தை, அங்கிருந்த பெரியவரிடம் கேட்டோம்.

“நம் மனம் பலவித பிரச்னைகளால் சூழ்ந்துள்ளது. மனதை நம் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். இந்தச் சங்கிலியைத் தொட்டுக்கொண்டு மனதை ஒருநிலைப் படுத்தலாம்” என்றார்.


via அபிநயா
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி வள்ளலார் ஐயா உம்மைப் போற்றுகிறோம். ஆசான் வள்ளலார் ஏற்றிய அணையா அடுப்பு. அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

https://www.facebook.com/groups/305917699863621

ஆதி அகத்தியர் சன்மார்க்க சங்கம்

சித்தர் அறிவியல்


























No comments:

Post a Comment