Thursday, November 3, 2016

அவுஸ்திரேலியாவில் ஆட்சிமொழியாகும் தமிழ்..!


தொன்மைச் சிறப்பும் இலக்கிய வளமும் கொண்ட தமிழ் மொழியை அவுஸ்திரேலியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என அவுஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் பாராளுமன்றில் குரல் எழுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் தற்போது சிங்கப்பூர், இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த 10 நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் அமைப்பின் ஆட்சி மொழியாகவும் தமிழ் இருந்து வருகிறது.
கனடாவில் ஜனவரி மாதம் தமிழ்ப் பராம்பரிய மாதமாக கொண்டாடப்படுகிறது. அந்நாட்டில் தமிழ் சிறுபான்மையினர் மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் தமிழ் சிறுபான்மையினர் மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய பாடசாலைகளில் தமிழ் வழி கல்வி கற்பிக்கப்படுகிறது. மொரீசியஸ் மற்றும் செசெல்ஸ் நாட்டு கரன்சிகளில் தமிழ் அச்சிடப்பட்டுள்ளது.
தென் ஆப்ரிக்கா மற்றும் ஆப்ரிக்காவில் உள்ள பிரஞ்ச் பகுதியான ரியூனியனில் கலாச்சாரம் மற்றும் அரசியலில் தமிழர்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.
தவிர இந்தியாவில் அரியானா மற்றும் சண்டிகரில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது அவுஸ்திரேலியாவில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று குரல் எழுந்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பாராளுமன்றில் ஹியூஜ் மெக் டெர்மட் என்ற உறுப்பினர் இதனை வலியுறுத்தி கருத்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவருடைய கருத்துக்கு அவுஸ்திரேலியாவில் உள்ள பல தமிழ் அமைப்புகள் மற்றும் வானொலிகள் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment