Thursday, August 24, 2017

வினைகள் தீர்க்கும் விநாயகப்பெருமான் ஆசிநூல் 31/01/2013


சுவடி வாசித்தளித்தவர் T.ராஜேந்திரன், M.A., B.Ed.,
ஓம் ஸ்ரீ காகபுஜண்டர் ஸ்ரீ அகத்தியர் நாடிஜோதிட ஆசிரமம்,
டி.வி.எ° டோல்கேட், திருச்சி. செல் : 99655 71837

வினைகள் தீர்க்கும் விநாயகப்பெருமான் ஆசிநூல்
31/01/2013

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

அகத்தியர் துணை

நித்ய ஆசி நூல்

1. ஞான சூட்சுமம் கொண்ட அரசா
ஞானிகள் பூசை வழிமுறையை
வானவரே வியக்கும் வண்ணம்
வழுவாது செய்து கலியுகத்தில்

2. கலியுகத்தில் உலக ஞானிகளை
கருணைபட அழைத்து மக்களுக்கு
தெளிவூட்டும் தேசிகனே வாழ்க
தேவலோக சபையோ என வியக்க

3. வியக்க கண்டேன் ஐங்கரனும் (விநாயகப் பெருமான்)
வினை போக்க இன்று குடிலில்
தயக்கமிலா வரும் அடியவர்க்கு
தரணியிலே நந்தன கலை திங்கள்

4. திங்களிலே மூவாறு திகதியதும்
(நந்தன வருடம் தை மாதம் 18ம் நாள்)
தெரிவிப்பேன் நித்ய ஆசிதனை
ஓங்காரன் (ஆறுமுகப்பெருமான்) புஜத்தில் அமர்ந்து
உறுதுணைபட அருள்வேன்

5. அருள்பெற அணுகும் அனைவருக்கும்
அல்லல் நீக்கி அரங்கன் மூலம்
அருள்பலம் இனிதே ஈந்திடுவேன்
அன்னமதை குடிலில் உண்பவர்க்கு

6. உண்பவர்க்கு அருமருந்தாகி
உடல்பிணி அகற்றி நிற்பேன்
கண்டமிடரை விரட்டியும்
காத்து வளமும் சேர்ப்பேன்

7. சேர்ப்பேனே செயல் மாற்றமுள்ளவர்க்கும்
சிறப்பறிவு ஊட்டி இனிதே
வார்ப்பேனே (உருவாக்குவேனே) ஞானவழி அவரவரை
வளர்ப்பேனே குறைவிலா சிறப்புற

8. சிறப்புள அமுதை உண்ணும்
சிறார்கட்கும் ஞான ஆற்றல்
மறுப்பில்லா ஞாபகசக்தி கூட்டி
மண்ணுலகில் புகழ்பெறச் செய்திடுவேன்

9. புகழ்பட இன்று துறையூர் எல்லை
புண்ணியக் குடிலாம் பிரணவக் குடிலில்
வகைபட கண்டு தேசிகரை
வணங்கி தொண்டில் கலப்பீர்

10. கலந்து கவலைகள் தீர
கலச தீட்சை பணிவுடன் ஏற்று
வலம் வந்து தொண்டாற்றி
வையத்துள் சிறக்க தொடர் சேவை

11. சேவை புரிய அவரவர்க்கும்
சிவராசன் வழி என் அருள்
அவைமெச்ச (பலரால் போற்றப்படும்நிலை) அடைந்து உயர்த்தும்
அரங்கனுள் இருக்கின்றேன் உலகை காக்க நித்ய ஆசி முற்றே.


ஒரு மனிதன் ஞானத்தை அடைவது என்பது அவ்வளவு எளிதல்ல. அவர் பல ஜென்மங்களில் பல ஞானிகளிடம் ஆசி பெற்று ஞானிகள் மனம் மகிழும்படி நடந்து அவர்களது ஆசியினால் ஞான இரகசியங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்து இறுதியில் ஒரு ஜென்மத்தில் ஞானத்தலைவனால் வாசிவசப்பட்டு ஞானிகள் உதவியால்தான் மரணமில்லா பெருவாழ்வை அடைந்து ஞானி என்ற பட்டத்தையும் பெறஇயலும். எந்தவொரு மனிதனும் மரணமில்லா பெருவாழ்வாகிய ஞானத்தை ஞானிகளின் அருளும், ஆசியும், துணையும், வழிகாட்டுதல்களும் இல்லாமல் கண்டிப்பாக அடையவே முடியாது. சொல்லொண்ணா உருக்கமும், மனஉறுதியும், மனஒருமையும் கொண்டு நாத்தழும்பேற ஞானிகளே கசிந்துருகி அன்பு கொண்டு “என்பிள்ளை என்பிள்ளை” என வாரியெடுத்துக் கொள்ளும்படியான அளவிற்கு ஞானிகள் அத்தனைபேரும் இதுபோல் மனம் உருகி பூஜை செய்தவரை இதுவரை கண்டதில்லை என வியக்குமளவிற்கும், அவர்களே அளவில்லா மகிழ்ச்சி அடையும் அளவிற்கும் புளங்காகிதமடைந்து நெகிழும் அளவிற்கு பூஜை செய்து பெறுதற்கரிய ஞானத்தைப் பெற்றவர்தான் ஓங்காரக்குடிலாசான் அரங்கமகாதேசிகர்.

அப்படி பலஆயிரம் ஆண்டுகள் பாடுபட்டு சேர்த்த அந்த ஞான இரகசியங்களையும், ஞானிகளை எப்படியெல்லாம் வணங்கினால் மனமிரங்கி அருள் செய்வார்கள், எப்படியெல்லாம் ஞானிகளை அழைப்பது, என்னென்னவெல்லாம் ஞானிகளிடம் வேண்டுகோளாக கேட்பது, எதையெல்லாம் கேட்கக்கூடாது. இப்படி அநேகம் அநேகம் ஞானஇரகசியங்களையெல்லாம் தாம் பெற்ற அந்த ஞானானுபவ நிலைகளை, உலகமக்களும் பெறவேண்டுமென்று பொதுநோக்கிலே உலக மக்கள் அறியும் பொருட்டு வெளிப்படையாக அனைவருக்கும் அறிவித்து அவர்களையும் ஞானிகள் திருவடியைப் பற்றச் செய்து இக்கலியுகத்தினையே ஞானயுகமாக மாற்றி வருகிறார் மகாஞானி ஆறுமுகப்பெருமானின் அவதாரம் அரங்கமகாதேசிகர். அரங்கமகாதேசிகரின் அளப்பரிய முயற்சிகளால் ஓங்காரக்குடிலைச் சார்ந்த அனைவரும் ஞானிகள் திருவடியைப் பற்றி பூசித்து தேவநிலையை எட்டும் நிலையிலிருப்பதால் ஓங்காரக்குடிலே சித்தர்கள் சபையோ என வியக்கும் அளவிற்கும், தேவலோக சபையோ என வியக்குமளவிற்கும் பண்புள்ள அன்பர்கள் கூட்டத்தால் நிறைந்துள்ளது என வியக்கிறார் ஐங்கரனாகிய விநாயகப் பெருமான்.

தர்மத்தின் தலைவனாம் ஆற்றல் பொருந்திய ஆறுமுகப்பெருமானின் பன்னிரு கரங்களிலும், விநாயகப் பெருமானும் சார்ந்து தர்மத்தைக் காக்கும் பொருட்டு ஆறுமுகப்பெருமான் கொடியவர்களை அடக்கி நல்லோரைக் காக்கும்பொழுது விநாயகப் பெருமானாகிய நானும் ஆறுமுகனின் கரத்திலிருந்து ஆற்றல் வழங்கி அருள் செய்கிறேன் என்கிறார் விநாயகப்பெருமான்.

ஞானிகளெல்லாம் ஓங்காரக்குடிலில் தங்கி அருள் செய்வதால் இங்கு சமைக்கப்படும் உணவு ஞானிகளின் அருள் பார்வையால் நோய் தீர்க்கும் மருந்தாக மாறி உணவு உண்பவர்களுக்கு நோய்கள் நீங்கி, அவர்களுக்கு உள்ள கண்டங்களும் இடர்களும் நீங்கி சுகம் பெறுவார்கள். சன்மார்க்க நெறிகளிலிருந்து மாறுபட்டு வேறுவழிகளில் செல்ல நினைப்பவர்களை தடுத்து ஆட்கொண்டு அருள் செய்வேன்.

ஓங்காரக்குடிலில் உணவு உண்கின்ற கல்வி கற்கும் மாணவர்களுக்கு தாம் கற்ற கல்வி மறக்காமல் நினைவில் தங்குவதற்கு நான் அருள் செய்வேன். கல்வியில் அவர்கள் தேர்ச்சியடைந்து பெரிய பெரிய பதவிகளில் அமரச்செய்து புகழடையவும் செய்வேன் என கூறுகிறார் விநாயகப்பெருமான்.

நந்தன வருடம் தை மாதம் 18ம் நாள் (31.01.2013) வியாழக்கிழமையான இன்றைய தினம் புண்ணியத்தின் உறைவிடமான ஓங்காரக்குடிலை நாடி ஓங்காரக்குடிலாசான் அரங்கமகாதேசிகரை முறையாக வணங்கி வழிபட்டு தொண்டு செய்தும் அவர்களது கவலைகள் தீரும் பொருட்டு ஆசானிடத்தில் “கலச தீட்சை”யை தீட்சை உபதேசமாக பெற்றும், பணிவுடன் தீட்சை ஏற்று குடிலாசானை வணங்கி குடிலில் நடைபெறும் அறப்பணிகளுக்கு தொண்டு செய்தும், பொருளுதவி செய்தும் வருபவர்களுக்கு சிவராஜயோகியாகிய ஓங்காரக்குடிலாசான் அரங்கமகாதேசிகர் வடிவில் விநாயகப் பெருமானாகிய நானும் கலந்து தீட்சை பெறுபவர்களுக்கும், தொண்டு செய்பவர்களுக்கும், பொருளுதவி செய்பவர்களுக்கும் ஆசி அருள்வேன். அரங்கரை நானும் சார்ந்து இவ்வுலகை காப்பேன் என்கிறார் விநாயகப்பெருமான்.


- சுபம்-

No comments:

Post a Comment