Saturday, August 5, 2017

ஆறுமுகனே குருவாய் வருவான்..!


முற்றுப்பெற்ற பற்றற்ற ஞானிகளின் தொடர்பை பெறுவதற்கே பலப்பல சென்மங்களாக பாடுபட்டு புண்ணியங்கள் பலவாறாய் செய்திருக்க வேண்டும். அப்படி அவன் செய்த புண்ணிய பலத்தாலும் ஞானிகள் ஆசியும் கூடினதாலேதான் இச்சென்மத்தில் குருவின் வடிவினிலே ஞானிகள் அருள் செய்வர்.

ஆயினும் அச்சீடன் தமக்கு வேண்டியது கிடைக்காதபோது குருவின் மீது குருவின் செயல் மீது குருவின் ஆற்றல்மீது சந்தேகம் கொள்வான். இது அவனது பாவமாம். சந்தேகம் என்பது அவனது பாவத்தின் அடையாளம். என்று உள்மனதில் சந்தேகம் வந்ததோ அன்றே அவனது ஞானவாழ்வு பின்னடைவை காண்கும்.

உத்தம குருநாதர், சீடன் தம்மை அவன் செல்லும் தவறான பாதையினின்று மீட்டிட அவனது பாவத்தினால் அவனது அறிவு மழுங்கி தீயநெறி செல்லுவதினின்று மீட்டிட, எதிர்காலத்தே சீடனுக்கு ஏற்படும் ஆபத்திலிருந்து காத்திட, ஞானவழி செல்ல அவனிடத்து உள்ள குணக்கேடுகளை நீக்கிட, மலக்குற்றத்தில் அகப்பட்ட சீடன்தனை மலக்குற்றத்தினின்று மீட்டு காத்திட வேண்டியே அவன்தனை அவனது குற்றம்தனை, அவன்தனக்கு உணர்த்தி குறை கூறி அவனை தாயினும் மேலான கருணை கொண்டு கடைத்தேற்றுவார் மகாஞானி முருகப்பெருமான்.

சீடன் தான் செய்வது சரியென்று புறந்தள்ளுங்காலத்து அவன்மீது கடிந்து திருத்துவார் மகான் கருணைவள்ளல். ஆனால் அவ்வித கடிந்துரைகளெல்லாம் வாயினின்று வருபவைகளே அன்றி ஞானவான் உள்ளத்தினின்று வருவது அன்று. சீடன் கடைத்தேற வேண்டுமே என்றுதான், குருநாதர் எப்போதும் எண்ணுவார். அவர் சீடன் நலனை மையமாக கொண்டவர். சீடன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவனைக் கடைத்தேற்றுவது என்பது ஞானிகள் பண்பாகும்.

ஏனெனில் நம்பி வந்தோரை கைவிடலாகாது என்பதே ஞானிகள் பண்பாகும். ஆதலின் சீடன் திட்டினாலும் சரி, எதிர்த்தாலும் சரி, ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்று கொள்ளாவிட்டாலும் சரி, குரு தன் கடமையை செவ்வனே செய்வர்.

குருவின் உபதேச வார்த்தைகள் மயக்கத்தில் உள்ள சீடனுக்கு கசப்பாய் இருக்கும், வேம்பாய் கசக்கும், பழைய பாலாய் புளிக்கத்தான் செய்யும், இது அச்சீடனின் பாவச்சுமையை உணர்த்துகிறதே அன்றி குருவின் குற்றமல்ல.

குருவின் உபதேசம் மீறும் சீடன்மீது கருணை கொண்டு மனதினுள் வீணில் கழிகிறானே எம் அன்பு பிள்ளை எங்ஙனம் தேறுவான் என்ன செய்வோம் என்றே தன் தவம் மறந்து தன் பூசை மறந்து, தனது செயல் மறந்து அவன்பால் அன்பு கொண்டு ஆறுதல் கூறி தேறுதல் கூறி அவனை எக்காலத்தும் கைவிடாது காத்து கடிந்து கூறி, தேற்றி கூறி, கண்டித்தும், வசைபேசியும் இப்படி பலபலவாறாய் திருத்திட முயல்வர் ஞானிகளாம் சொற்குருநாதன்.

சீடனால் குருவிற்கு ஆவதொன்றுமில்லை. அவர்கள் பெற்று விட்டனர். அனைத்தையும் சீடனை வஞ்சிக்கவோ, ஏமாற்றவோ, கண்டிக்கவோ, தண்டிக்கவோ அவசியமில்லை. ஏனெனில் அனைத்தும் ஆறுமுகனருளால் அடைந்து வெற்றி பெற்றவர்கள் அவர்கள்.

ஆதலினால் பெற வேண்டியவன் சீடனே முற்றுப்பெற்ற ஞானியர் தொடர்பு கிடைக்கப் பெற்றும் அந்த வாய்ப்பை சீடன் இழப்பானேயானால் இழப்பு குருநாதருக்கல்ல சீடனுக்கேயாம்.

ஆதலின் கொண்ட நல்குரு பற்றற்றவர், பண்பே வடிவானவர், குணக்குன்று, குமரனின் தோற்றம், மும்மலமற்றவர், வினையற்றவர், மகாகோடி புண்ணியவான், அருள்நிறை ஞானி. அவருக்கு சீடர்களால் ஆவது ஒன்றுமில்லை. ஆயினும் இந்த எழுநூறு கோடி மக்களிலே ஞானமெனும் பெருநிலை அடையும் வழி தனிலே விரும்பி வந்திட்ட முன் சென்ம தொடர்பினாலே, முன்சென்ம வாசனையாலே, செய்திட்ட புண்ணியத்தாலே வந்தோராம் திருக்கூட்ட மரபின் தொடர்புடைய மாந்தர்கள் என்ற ஒன்றின் மீதுள்ள கருணையாலே சீடர்கள் குறைதமை குருநாதர்கள் பொறுத்துக்கொள்கின்றனரே அன்றி சீடர்களிடத்து அவர்கள் எந்தவிதத்தும் அவர்கள் கடமைப்பட்டவர்கள் அல்லர்.
https://www.facebook.com/groups/ongarakudil

ஏனெனில் அவரவரும் அவரவர் வினைக்குற்றம் நீங்கிடவே குருகுலம் சார்ந்தனர். ஆதலின் சீடனால் குருவிற்கு ஆவதொன்றுமில்லை. ஆனால் குருவினால்தான் சீடனுக்கு அனைத்துமேயாம்.

எனவே அந்த கிடைத்ததற்கரிய குரு வாய்க்கப் பெற்ற சீடன் அந்த குருநாதன், சீடன் வினை போக்கிட எந்த வகையில் சோதித்தாலும், வேதித்தாலும், சுட்டாலும், வசைபாடினாலும், புறந்தள்ளினாலும் அந்த உண்மை குருவின் திருவடிகளைப் பற்றி இறுகப்பற்றி குரங்கு பிடியாய் பிடித்து உயிர் காத்திட போராடும் குரங்கினை போன்று பற்றின இலையை நழுவ விடாது. ஆவி சோர்ந்திடும் வரை விடாது இறுகப் பற்றியது போல பற்றி, குருவே உமது திருவடி விடேன் நீயே எம்மை எம் வினைக்காரணமாக புறந்தள்ளினாலும் நான் உம்மை விடேன். எம்மை காணும் போதெல்லாம் பேராற்றலுடை பெரியோனே உமக்கு எம்மை காணச்சகியாது தான். ஆயினும் நான் உம்மை விடேன். எம்மை புறந்தள்ளாதே. பாவியேன் அறியாது செய்த பாவங்களை பொறுத்தருள்வீர். மகாதேவனே மன்னிக்கும் குணம் உள்ளவனே உம் திருவடி விட்டு நீங்காதிருக்க அருளுங்கள். எம் வினை எம்மை தாக்குகிறது.

உமதருள் கொண்டு வினை நீக்கி காத்தருளுங்கள் என்றெல்லாம் உருகி உருகி பூசித்து குருவின் திருவடி நீங்காதிருக்க நம் வினைவெல்ல குருஅருள் நாடி நின்றிடல் வேண்டும். அவ்வாறின்றி பெறுதற்கரிய குருவின் செயல் கண்டு குரு செயல்களுக்கு விளக்கம்தனை தம்முள் கேட்டு சந்தேகம் கொண்டு எக்காலத்தும் விலகி விடாதீர்.

இப்படிப்பட்ட குரு இனி கிடைப்பது அரிது என்றே உணர்ந்திடச் செய்திடுவன்! அந்த ஆறுமுகனை அளவிலாது வணங்கும் பக்தர் தமக்கு அந்த ஆறுமுகனே குருவாய் வந்து அந்த சீடனுள் இருந்து உணர்த்திடுவன்! அருள்நிறை கருணைக்கடவுள் கந்தப்பெருமான். முருகா! முருகா!! முருகா!!! என்றே முற்றிலும் உமது சிந்தை சொல் செயலெல்லாம் முருகனருளாய் கூடிட செபியுங்கள் முருகனே குருநாதனாய் வந்திடும் அற்புதம் காணுங்கள்.

-அடிகளார் ஆறுமுகஅரங்கர் உபதேசம்

ஓங்காரக்குடில் Ongarakudil



நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 

No comments:

Post a Comment