வைகாசி பிறப்பு - திங்கள் 15 மே 2017
இல்லறம் பெரிதா, துறவறம் பெரிதா என்றால், இரண்டுமே உயர்ந்தது தான் என்கின்றனர், சான்றோர்.
வாழ்வில், எந்த அறத்தை கடைப்பிடித்தாலும், அதை சரியாகப் பேணினால், மனதில் மகிழ்ச்சி மலரும். இந்த அரிய தத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மாதம், வைகாசி.
இம்மாதத்தில் தான், புத்தர் அவதரித்து, 'இல்லறம், துறவறம் எதுவாக இருந்தாலும், ஆசையை கைவிடாத வரை, வாழ்வு இனிக்காது...' என போதித்தார்.
புத்தர் மட்டுமல்ல, மகாபாரத ஆசிரியர் வியாசர் பிறந்ததும் இம்மாதத்தில் தான். குரு பெளர்ணமி என்னும் வியாச பெளர்ணமி வருவதும் இம்மாதத்தில் தான்*
அத்துடன், அத்திரி - அனுசூயா தம்பதியின் புத்திரர் தத்தாத்ரேயர், திராவிட சிசு என போற்றப்படும் ஞான சம்பந்தர், நாயன்மார்களான சோமாசி மாறர், நமி நந்தியடிகள், கழற்சிங்கர், வைணவத்தின் உயிர்நாடிகளான நம்மாழ்வார், திருக்கோட்டியூர் நம்பிகள் மற்றும் கலியுகத்தில் நம்மோடு வாழ்ந்த காஞ்சிப் பெரியவர் ஆகியோரெல்லாம், வைகாசி மாதம் பிறந்து, நம்மை நல்வழிப்படுத்தியவர்கள் தாம்.
மகான்கள் மட்டுமல்ல, தெய்வங்களின் அவதாரமும் இந்த மாதத்தில் நிகழ்ந்துள்ளது. வைகாசி விசாகத்தன்று, சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து அவதரித்தார், முருகப்பெருமான்.
மேலும், இம்மாதத்தில் வரும் அட்சய திரிதியை அன்று, பரசுராமராக அவதாரம் எடுத்தார் திருமால்.
இந்நாளில் நகை மற்றும் பொருட்கள் வாங்கி தானம் செய்தால் அது, பல்கி பெருகும் என்ற நம்பிக்கை, தொன்று தொட்டு இருந்து வருகிறது.
வைகாசி மாதம் தான், உலகையே வாழ வைக்கும் மாதம்; ஏனெனில், இயற்கை, இம்மாதத்தில் தான், 'அக்னி நட்சத்திரம்' என்ற அற்புதத்தை செய்கிறது.
அக்னி நட்சத்திரம் என்றதும், கடுமையான வெயிலை நினைத்து, 'உச்' கொட்டுவோம்.
உண்மையில், இந்த வெயிலால், வயல்களில் வெடிப்பு ஏற்படும். அக்னி நட்சத்திரம் முடிந்து, மழை பிடித்ததும், இந்த வெடிப்புகளின் வழியாக, மழை நீர் சென்று தேங்கும்; ஆறுகளில் தண்ணீர் பாய்ந்து விவசாயம் செழிக்கும்.
அத்துடன், முருகனுக்குரிய வைகாசி விசாகம் மற்றும் வளர்பிறை அஷ்டமியன்று வரும், ரிஷப விரதம் போன்ற சில முக்கிய விரதங்களும் இம்மாதத்தில் வருகின்றன.
ஆபத்தில்லா பயணங்கள் அமைய, ரிஷப விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அன்று, ரிஷபத்தில் அமர்ந்த சிவ - பார்வதியை வணங்கி, சிவலிங்க அபிஷேகத்திற்குரிய, தாரா பாத்திரத்தை காணிக்கையாகக் கொடுப்பதன் மூலம், குடும்ப அபிவிருத்தி ஏற்படும்.
மேலும், வைகாசி மாத வளர்பிறை, தேய்பிறை ஏகாதசி நாட்களை, 'மோஹீனி மற்றும் வருதீனி' என்ற பெயர்களில் அழைப்பர்.
இந்நாட்களில் விரதம் இருந்தால், நோயற்ற வாழ்வு பெறலாம்.
வைகாசியை, சமஸ்கிருதத்தில், 'வைகாஷம்' என்பர்; இதற்கு, மலர்ச்சி என, பொருள். இந்த புதிய மாதத்தில், அனைவர் உள்ளத்திலும் மகிழ்ச்சி மலரட்டும்!
No comments:
Post a Comment