எல்லோருக்கும் பொதுவாக அருளிய அறிவுரை:-
யார் என்ன கூறினாலும், மனக்குழப்பம் அடையாமல், நாங்கள் முன்பே கூறியது போல், தவறை செய்கின்ற மனிதன், தொடர்ந்து தவறுக்கு மேல் தவறு செய்து, பாவத்திற்கு மேல் பாவத்தை சேர்க்கின்ற மனிதன் யார் சொன்னாலும் கேட்கிறானா? யார் சொன்னாலும் தன்னை மாற்றிக்கொள்கிறானா? தவறு செய்கின்ற மனிதனுக்கு இருக்கின்ற உறுதி ஏனடா நல்லது செய்கின்ற உனக்கு (மனிதனுக்கு) இல்லாமல் போகிறது? ஏன் தடுமாற்றம் வருகிறது? ஏன் குழப்பம் வருகிறது? அங்கு இப்படி கூறுகிறார்கள், இங்கு இப்படி கூறுகிறார்கள். இதை இப்படி நம்பவேண்டும், அதை அப்படி நம்பவேண்டும், இங்கு கூறுவதையெல்லாம் ஏற்க முடியவில்லை, என்றெல்லாம் ஏன் குழப்பம் வருகிறது? குழப்பம் வருகிறது என்றாலே பாவங்கள் இன்னும் இருக்கிறது என்பதுதான் பொருள். எனவே தொடர்ந்து அறவழியில், சத்யவழியில் அனைவரும் வர நல்லாசிகள்.
கோவிலில் தொண்டுகள் செய்வதும், வழிபாடுகள் செய்வதும், யாகங்கள் செய்வதும், அபிஷேக ஆராதனைகள் செய்வதும் பெரிதல்ல. எந்த ஆலயத்தில் செய்ய வேண்டும் என்று சிலர் எண்ணுகிறார்களோ அந்த (கோவில்) நிர்வாகத்தோடு ஒத்துழைக்க முடிந்தால், அல்லது தொண்டு செய்கின்ற மனிதர்களோடு நிர்வாகம் சரியாக ஒத்துழைத்தால் மட்டும், செய்தால் போதும். இல்லையென்றால் எதிர்த்து வாதாடி, விதண்டாவாதம் செய்து "சித்தர்கள் இப்படிக் கூறியிருக்கிறார்கள். எனவேதான் நாங்கள் இப்படி செய்கிறோம். எனவே, இந்த பொருள்களை நீங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இந்த அபிஷேகத்தை செய்துதான் ஆகவேண்டும்" என்றெல்லாம், யாரிடமும் வாதாட வேண்டாம். ஒத்துவராத இடத்தைவிட்டு மௌனமாக விலகுவதே, எமது வழியில் வருகின்றவனுக்கு ஏற்புடையது.
இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால், நல்விதமான வாழ்வு நிலை இவ்வுலகினில் மாந்தர்கள் பெறவேண்டும் என்பதற்காக, இவ்வுலகம் தோன்றிய நாள் முதல், இஃதொப்ப முயற்சியினை மாந்தர்கள் செய்துகொண்டே இருக்கிறார்கள். இத்தகு முயற்சியிலே தன் சக்தி தாண்டி, நிலைதாண்டி இருப்பதாக பல மாந்தர்களில், சில மாந்தர்கள் எண்ணும்பொழுதே தெய்வீகத்தின் துணையை நாடுகிறார்கள். இயம்புங்கால், இறைவனின் கடாக்ஷம் இருந்துவிட்டால், எல்லாவகையிலும் இன்பம்தான், போராட்டங்களற்ற வாழ்வுதான் என்று மனிதன் எண்ணுகிறான். ஒருவகையில் அது உண்மைதான் என்றாலும், இயம்புகின்றோம் இஃதொப்ப ஒரு நிலையில் அஃது நன்று என்றாலும் மெய்யாக, மெய்யாக, மெய்யாக, ஆணித்தரமாக உள்ளும், புறமும் எவ்வித நடிப்பும் இல்லாமல், மெய்யான ஆன்மீக வழியிலே இறைவழியிலே எந்த மனிதன் சென்றாலும் அல்லது எந்த உயிர் சென்றாலும் பல்வேறுவிதமான சோதனைகளை சந்தித்துதான் ஆகவேண்டும்.
வேறுவகையில் கூறப்போனால் கனகம், சோதனை, புடம் என்று வைத்துக்கொள்ளலாம். இஃது ஒருபுறமிருக்க இந்த சோதனை என்ற கட்டத்தை அடைவதற்கு முன்னால் அந்த உயிர் அல்லது ஆத்மா சுத்தி செய்யப்படவேண்டும். எங்ஙனம்? இதற்கு முன்னர் எடுத்த பிறவிகளில் சேர்த்த பாவங்களின் அடிப்படையிலிருந்து தோன்றிய நடப்பு பிறவிகளில் நடக்கின்ற நிகழ்வுகளால், அவமானங்களால், நம்பிக்கை துரோகங்களால், கைப்பொருளை இழப்பதால், உறவு சிக்கலால், கடுமையான ஏமாற்றத்தால், உலகியல் போராட்டத்தால், மட்டுமல்லாது இன்னும் பிறவழிகளிலும் பாவங்கள் குறைகிறது. இயம்புங்கால், அங்ஙனமாயின் ஒரு மனிதன் தன் புத்தியை பயன்படுத்தி தனக்கு வரக்கூடிய துன்பத்தை தவிர்த்துக் கொள்ளலாகாதா? தன்னுடைய சிந்தனையை திடமாக்கி, வளமாக்கி, துன்பமற்ற நிலையில் வாழ முயற்சி செய்யக்கூடாதா? என்றால் தவறல்ல. செய்யலாம்.
ஆயினும் மனிதன் செய்கின்ற முயற்சிகளையெல்லாம் தாண்டி, சாமர்த்தியங்களையெல்லாம் தாண்டி ஒரு மனிதனுக்கு எந்தவகையில் யாராலும், எதனாலும் மனித ரீதியாக, மனித மனப்பாங்கிலே துன்பங்கள் வருகிறதென்றால், மௌனமாக அதனை ஏற்றால் அது பாவக்கழிவிற்கு வழியாக இருக்கும். சரி, அப்படி ஏற்காவிட்டால், எதிர்த்தால் என்னவாகும்? ஒன்றும் ஆகப்போவதில்லை. துன்பத்தை ஒரு மனிதன் அதன் போக்கிலே அமைதியாக ஏற்றுக்கொண்டாலும், எதிர்த்து ஆர்பாட்டம் செய்தாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை. விதி தன் கடமையை செய்துகொண்டேதான் இருக்கும். எதிர்த்து ஆர்பாட்டம் செய்வதால் மேலும் மன உளைச்சல்தான், மனிதனுக்கு ஏற்படுகிறது. இஃதோடு மட்டுமல்லாது இன்னும் எத்தனையோ வழிகளிலெல்லாம் விதி மனிதனின் பாவங்களற்ற நிலைக்கு ஆட்படுத்ததான் இறைவனின் அருளால் படைக்கப்பட்டு, அந்த விதியானது மனித மதியிலே அமர்ந்துகொண்டும் ஆசைகள், மாயைகள் மூலமாகவும் வாழ்க்கையை ஒரு பிடிப்புள்ளதாக ஆக்கி, வாழ்க்கையில் எதனையோ சாதிக்கப்போவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, முடிவிலே ஒரு விரக்தியைத் தந்து, ஒரு ஏமாற்றத்தை தந்து, அதன் மூலம் ஒருசில பாவங்களை அந்த ஆத்மாவின் தன்மையிலிருந்து எடுக்கப் பார்க்கிறது. இதையெல்லாம் புரிந்து கொள்வதும், மேலும் அறிந்து கொள்வதும், அறிந்து கொள்வதையெல்லாம் நடைமுறைபடுத்துவதும் கடினம்தான். அதற்கும் விதி இடம் தரவேண்டும்.
ஒரு ஞானியின் மனோபாவத்தில் வாழ்வதால் என்ன லாபம்? மனம் மரத்துப் போகவேண்டும். நூறாண்டுகள் வாழ்வதற்கு, ஆக்கையை தயார் நிலையில் வைக்கலாம். தவறில்லை. அடுத்த கணம் மரணம் வந்தால், அதை ஏற்கும் நிலையில் மனம், பக்குவமாக இருத்தல் வேண்டும். குடியிருக்கின்ற இல்லத்தை பேணிக்காப்பது போல எண்ணி, ஆக்கையை பேணிக் காத்திடல் அவசியம். நன்றாகத் தெரியும், இது இரவல் வாசம், நமது சொந்த இல்லம் அல்ல, என்று வேண்டுமானாலும் அந்த இல்லத்திற்கு உரிமையாளன் நம்மை இந்த இல்லத்தைவிட்டு அகன்று போகுமாறு ஆணையிடுவான் என்று தெரியும். இதனைப்போலவே இந்த ஆத்மா இந்த நடப்பு காலத்தில், இந்த மனித கூட்டுக்குள் இரவல் வாசமாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்வதும், புரிந்துகொள்வதை ஆழ பதிய வைத்துக்கொள்வதும், இப்படி மனதை ஞானியின் மனோநிலைக்காக மாற்றி, மாற்றி கொண்டு போவதற்கு முயற்சி செய்வதும்தான் நிரந்தரமான நிம்மதிக்கும், சந்தோசத்திற்கும் உண்டான வழியாகும்.
இறைவனின் கருணையாலே வாழ்வு நிலையிலே எடுத்த எடுப்பிலேயே எல்லா ஆத்மாக்களும் இந்த நிலைக்கு வருவது கடினம். என்றாலும் யாம் அடிக்கடி இதுபோன்ற தத்துவரீதியான விளக்கங்களைக் கூறுவதால் அதுவே பலருக்கு எரிச்சலையும், மன ஆதங்கத்தையும், சலிப்பையும் ஏற்படுத்துவதும், யாம் அறிந்ததே. ஆயினும் ஒரு குழந்தைக்கு, பொம்மைகள் நிரந்தரமான உறவோ அல்லது நிரந்தரமான தேவையோ அல்ல என்பது ஈன்றோருக்கு தெரிவதுபோல, மனிதன் வாழ்கின்ற வாழ்க்கையிலே லௌகீக விஷயங்கள் அனைத்துமே, ஒரு குழந்தைக்கு தேவைப்படும் பொம்மைகள் போல்தான் என்பதை ஞானிகள் உணர்ந்திருப்பதால்தான், மெய்யான இறையருள் பெற்ற ஞானிகள் தமைநாடும் மாந்தர்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும், சதாசர்வகாலம் சிந்தனையோடு நெடிய, உயர்ந்த, தாராளமான பெருந்தன்மையோடு கூடிய இறை ஞான விழிப்புணர்வு வரவேண்டும் என்றுதான் விரும்புவார்களே தவிர, "நீ அனேக காலம் வாழப்பா, நீ நன்றாக வாழப்பா, இந்த லௌகீக சுகங்களைப் பெற்று வாழப்பா" என்று ஆசீர்வாதம் செய்யமாட்டார்கள். அங்ஙனம் பலர் செய்கிறார்களே என்றால் என்ன பொருள்? சரி, இன்னும் இந்த குழந்தை பொம்மைகளை விட்டுவிடத் தயாராக இல்லை என்பதே பொருளாகும்.
இறைவனின் கருணாகடாக்ஷத்திலே, இவனொத்த ஆத்மாக்கள் எம்மிடம் வரும்போதெல்லாம், அஃதொப்ப கிரகநிலையை அனுசரித்து இறைவன் அருளாலே கூறுகிறோம் என்றாலும்கூட, அடிப்படை விஷயம் யாதென்றால், விஷத்தை உண்டுவிட்ட ஒருவனுக்கு, அவன் உடலில் இருந்து விஷத்தை எடுப்பதற்கு மருத்துவர்கள் எங்ஙனம் போராட்டம் நடத்துகிறார்களோ, அந்த போராட்டம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக என்னென்ன வழிமுறைகளையெல்லாம் மருத்துவர்கள் கையாள்கிறார்களோ, அதைப்போலதான் பாவங்கள் என்ற கடுமையான விஷம் ஒரு மனிதனை பற்றியிருக்கும் பட்சத்திலே, அதை எடுப்பதற்கென்றுதான் பிறவிகளும், பிறவிகளில் பல்வேறுவிதமான சம்பவங்களும் நிகழ்கின்றன. அந்த சம்பவங்களை வெறும் உலகியல் ரீதியாக பார்க்கும்பொழுது கடினமாக, சோதனையாக, அவமானமாக, வேதனையாக தெரியும். ஆனாலும்கூட அதை ஒரு சிகிச்சை முறையாக பார்த்தால் நோயாளிக்கு அது எப்படி அவசியமோ அதைப்போல பாவங்களைக் கழிப்பதற்காக பிறவியெடுத்த ஆத்மாக்களுக்கு இஃதொப்ப லௌகீக அனுபவங்கள் அவசியம் என்பது புரியும். எனவே விஷத்தை உண்டுவிட்ட மனிதனுக்கு விஷமுறிப்பு சிகிச்சைபோல பாவங்களிலிருந்து ஒரு ஆத்மாவை விடுவித்து, நிரந்தரமாக தன்னை அறிவதற்கென்று எந்தப் பிறவியில் அந்த ஆத்மாவை தேர்ந்தெடுத்து தருகிறாரோ, அந்தப் பிறவியில் லௌகீக வெற்றிகள் அத்தனை எளிதாக கைவரப் பெறாமலும், சுற்றமும், உறவும் ஏளனம் செய்யும் வண்ணமும், ‘"பித்து பிடித்தவன், பிழைக்கத் தெரியாதவன்" என்றெல்லாம் நாமகரணம் சூட்டப்பட்டும் அந்த ஆத்மா, வாழத்தான் வேண்டும். நாங்கள் கூறவருவது ஒன்றுதான்.
இது போன்ற நிலையிலே மனம் தளராமல் திடம்கொண்டு வாழ்வதற்கு, இஃதொப்ப ஆத்மாக்கள் முயற்சியும், பயிற்சியும் செய்வதோடு விடாப்பிடியாக இறைவனின் திருவடியை பிடித்துக்கொள்வதுதான். இஃதொப்ப ஆத்மாக்களுக்கு ஒருவேளை, ஒருவேளை ஜீவ அருள் ஓலையிலே வாக்குகள் வாராது. இருப்பினும் யாம் இறைவன் அருளால் எஃதாவது ஒரு வழியில் வழிகாட்டிக்கொண்டே இருப்போம். இறைவன் அருளாலே தத்துவ நிலை தாண்டி, பிறவியெடுத்ததற்கு ஏதோ ஒரு இல்லறம் நடத்தி, வாரிசை பெற்று வாழவேண்டிய நிலையிலே அந்த வாழ்க்கையும் ஓரளவு அர்த்தம் உள்ளதாக வேண்டும் என்று எண்ணுகின்ற நிலையிலே, அஃதொப்ப ஒரு பங்கம் வராமல் வாழ யாம் இறைவனருளால் நல்லாசி கூறுகிறோம்.
via சித்தன்அருள்
Wisdom of Siddhas சித்தரியல்
No comments:
Post a Comment