இறைவனின் கருணையால் இதுபோன்ற ஞானக்கருத்துக்களைதான் இஃதொப்ப ஜீவ அருள் ஒலையிலே யாம் இந்த காலகட்டத்தில் பலரில் சிலருக்கும், சிலரில் சிலருக்கும், சிலரில், சிலரில், சிலரில், சிலரில் சிலருக்கும், ஓதவேண்டும் என்பது இறைவனின் கட்டளையாகும். ஆயினும்கூட அது நடைமுறையில் கடினம் என்பது எமக்கும் தெரியும். ‘வாழ்வியல் பிரச்சினைகள் குறித்து சித்தர்களை அணுகக்கூடாதா?' என்றால் அணுகலாம். ஆனால், அதற்கு நாங்கள் காட்டுகின்ற வழியை மனிதனால் ஏற்க இயலாது. அவன் ஏற்க எண்ணினாலும் அவன் மதியை பிடித்து ஆட்டும் விதி ஏற்கவிடாது. அதனால்தான் பல்வேறு தருணங்களில் நாங்கள் மௌனம் காக்கிறோம். எனவே இடைவிடாத இறைவழிபாடும், தளராத தர்மமும், இயன்ற தொண்டும் இஃதொப்ப எல்லோரையும் உயர்த்தும்.
இறைவனின் கருணையைகொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப உலக வாழ்வினிலே பல்வேறு மனிதர்களுக்கு காலகாலம் பல்வேறு பிரச்சினைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. இவைகளையெல்லாம் விலக்கி வைத்து பிரச்சினைகளே இல்லாத வாழ்க்கையைதான் பெரும்பாலான மனிதர்கள் விரும்புகிறார்கள். இஃதொப்ப நிலையை பார்க்கும்பொழுது அஃதொப்ப ஒரு அமைதியான வாழ்வு என்பது பெரும்பாலும் சராசரி வாழ்வில் கிட்டுவது கடினமே. இவைபோக வினைகளின் எதிரொலி அதன் வழியில் வாழ்க்கையில் பல்வேறுவிதமான அனுபவங்களைக் கொண்டுவந்து சேர்ப்பதால் மனித வாழ்வு என்பது பல கோணங்களில் பார்க்கும்பொழுது அமைதியைத் தராத நிலையிலும், சந்தோஷத்தை தராத நிலையிலும் இருப்பதுபோல் தோன்றுகிறது. ஆனாலும் கூட மனதை தளரவிடாமல் வாழ்க்கையை எதிர்கொள்வதும் இறை நம்பிக்கையோடு வாழ்வதுமாக வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள கட்டாயம் மெல்ல, மெல்ல மாற்றங்கள் ஏற்படும்.
இறைவன் அருளாலே, ஒரு மனிதன் நல்லவனாக இருப்பது மட்டுமல்ல, இங்கிதம் தெரிந்தவனாக இருக்க வேண்டும். இஃதொப்ப நிலையிலே, பிறருக்கு எந்தவகையிலும் உடல் ரீதியாகவும், எண்ணங்கள் ரீதியாகவும், பார்வைகள் ரீதியாகவும், தொல்லை தருகின்ற மனிதனாக இருத்தல் கூடாது. ஒரு மனிதனை, இன்னொரு மனிதன் பார்க்கும்பொழுதே மனதிலே உற்சாகம் ஏற்பட வேண்டும். "ஆஹா! இந்த மனிதனை இதற்கு முன்னால் சந்தித்ததே இல்லை! ஆனால் இவனை பார்க்கவேண்டும், இவனுடன் பழகவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறதே? அது ஏன் என்று தெரியவில்லை! ஆனாலும் கட்டாயம், இவன் நல்ல எண்ணங்கள் கொண்ட ஆத்மாவாகத்தான் இருக்க வேண்டும்" என்று ஒரு மனிதனைப் பார்க்கின்ற, இன்னொரு மனிதனுக்குத் தோன்றும் வண்ணம், ஒவ்வொரு மனிதனும், தன் மனதிலே நல்ல எண்ணங்களை வளர்த்து கொண்டிட வேண்டும்.
உலகிலே மிகவும் தீயவர் யார்? மிகவும் நல்லவர் யார்? என்ற தேர்வு பஞ்ச பாண்டவர்களில் தர்மருக்கும், கௌரவர்களில் துரியோதனனுக்கும் வைத்தபொழுது, துரியோதனன் சென்று வந்து, முனிபுங்கவர்களிடம் "யாரைப் பார்த்தாலும் எனக்கு கெட்டவனாகத்தான் தெரிகிறார்கள். எல்லோரும் தீயவர்கள்தான். இந்த உலகம் தீயவர்களால்தான் நிரம்பப்பட்டிருக்கிறது" என்று கூறினானாம். தர்மர் வந்து கூறும்பொழுது "இந்த உலகில் எல்லோரும் நல்லவர்களே. இருக்கின்றனர். ஒரே தீயவன் நான்தான்" என்று கூறினானாம். இந்த சம்பவத்திலிருந்து புரிந்துகொள்ள வேண்டியது என்ன. தன்னுடைய பார்வையில், எல்லாம் நல்லவைகளாகத் தெரியவே தன்னுடைய மனதையும், சிந்தனையையும், கருத்தையும் அனுமதித்தால், அதுவே சிறப்பாகும். ஒரு மகா பெரிய தீயவனிடமும், ஏதாவது ஒரு நல்ல குணம் இருக்கும். எத்தனை பெரிய நல்லவனிடமும், எஃதாவது ஒரு தீய குணம் இருக்கும். நல்லவனிடம் இருக்கின்ற தீய குணத்தை சீர்தூக்கிப் பார்த்து, அவன் திருத்திக் கொண்டிய வேண்டும். தீயவனிடம் இருக்கக்கூடிய நல்ல குணத்தை, அவன் மேலும் வளர்த்துக்கொண்டு, அதன் மூலம் மற்ற தீய குணங்களை விட, அவன் முயற்சி செய்ய வேண்டும்.
இறைவனின் கருணையைக்கொண்டு, இயம்புவது யாதென்றால், காலகாலம் மனிதர்கள், வாழ்வியல் சிக்கல்களை தீர்க்கும் விதத்திலே எத்தனையோ முயற்சிகள் எடுப்பதில் ஒன்றுதான், தெய்வீக வழியில் தீர்வைக் காண எண்ணுவது. இஃதொப்ப முறையிலே மகான்களை, ஞானிகளை நாடுவதும், அதில் ஒன்றாக இஃது போன்ற நாடிகளை நாடுவதும், காலகாலம் நடந்துகொண்டே இருக்கக்கூடிய நிகழ்வுதான். ஆனால், இயம்புங்கால், நாடிகளை பார்ப்பது என்பது வேறு, நாடிகளை வாசிக்கக் கேட்பது என்பது வேறு. நாடிகளை முழுமையாக உணர்ந்து கொள்வது என்பது வேறு. நாடிகளை பார்ப்பதும், கேட்பதும் ஒரு மேலெழுந்தவாரியான சிந்தனை. நாடிகளை முழுமையாக ஞானக்கண்ணோட்டத்தோடு உணர்ந்து கொள்ள முயற்சி செய்யாவிட்டால், நாடியில் பலாபலன்கள் பலியாதது போலும், நாடிகள் அனைத்தும் பொய் போலவும், மனிதனுக்குத் தோற்றமளிக்கும். இஃதொப்ப நிலையிலே ஞானிகளும், மகான்களும், மனிதனின் விதியும், இஃதொப்ப அந்த ஞானிகளின் கருணையால், இறைவனின் அருளால் அந்த மனிதனின் விதியில் சேர இஃதொப்ப நாடிகளின் மூலம் எம்போன்ற மகான்கள், வாக்கை இறைவனருளால் அருளிக்கொண்டே வருகிறார்கள். இஃதொப்ப நிலையிலே நாங்கள் மீண்டும், மீண்டும் கூற வருவது என்னவென்றால், ஒரு மனிதன் இதுவரை எடுத்த பிறவிகளில் சேர்த்த பாவங்களின் மற்றும் புண்ணியங்களின் நிலை, இப்பொழுது நடப்பு பிறவியில் அவன் சிந்தனை, அவன் செயல். இஃதொப்ப ஒரு ஆலயத்தில் இருக்கும்பொழுது மட்டுமாவது ஒருவன் நல்லவனாக இருந்துவிட்டுப் போகட்டுமே என்பதே! இது போன்ற நாடிகளைக் கேட்கும்பொழுதாவது ஒருவன் நல்லவனாக இருந்துவிட்டுப் போகட்டுமே! என்பது ஒரு மாறாத உண்மையாக இருந்தாலும், எம்மைப் பொருத்தவரை இறைவன் இல்லாத இடம் ஏதுமில்லை. எனவே ஒரு மனிதன் வாழ்க்கை முழுவதும், எல்லா நிலையிலும் பரிபூரணமான நல்லறிவைப் பெறுவதோடு, நல்ல குணத்தை வளர்த்துக் கொண்டிட வேண்டும். ஒரு மனிதன் தனக்கு தேவையான விஷயங்களை அல்லது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள, தவறான வழியைத் தேர்ந்தெடுப்பதின் காரணமே அவனுக்கு சரியான வழிமுறையில் வெற்றி கிடைக்கவில்லை என்பதாலும், சரியான வழிமுறையில் சென்றால் வெற்றி கிடைக்க நீண்ட காலம் ஆகிறது என்பதற்காகவும், அஃது மட்டுமல்லாமல் குறுக்கு வழியிலே சென்றால் விரைவில் வெற்றி பெறலாம், பலரும் அவ்வாறு பெற்றிருக்கிறார்கள் என்பதே காரணம். இவையனைத்துமே, மனிதன் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளக்கூடிய நிலையாகும்.
நாங்கள் கூறுகின்ற வாக்கின் தன்மையை ஆய்ந்து, பகுத்து, புரிந்து ஏற்றுக்கொள்வது என்பதும் ஒரு மனிதனின் பக்குவம், மனோபலம், கர்ம வினைகள்தான் தீர்மானிக்கிறது. அது நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது மனிதர்களுக்கு இல்லை என்பதால்தான் யாமும் பொட்டில் அடித்தாற்போல் கூறாமல், மேலெழுந்த வாரியாகவே கூறிக்கொண்டு செல்கிறோம். ஒருவனைப் பார்த்து எதிர்காலத்தில், உனக்கு இருதயத்தில் குறைபாடு வருமாப்பா. எனவே, இன்றிலிருந்தே, தக்க உடற் பயிற்சி செய்து, அன்ன ஆகாரத்தில் கவனமாக இருந்து, நிறைய தர்மங்களை செய்து, நிறைய பூசைகளை செய்துவா என்றால், நல்ல வேளை கூறினீர்களே என்று எடுத்துக் கொள்ளாமல், எனக்கு இருதயத்தில் பாதிப்பா? எனக்கு இருதயத்தில் பாதிப்பு வந்துவிடுமா, என்று அவன் அன்றில் இருந்தே அச்சப்பட துவங்கினால், இது போன்ற வகை ஏன் கூறினோம்? என்றுதான் மகான்களுக்கும் இருக்கும். எனவே எதிர்காலத்தை தெரிந்து கொண்டு, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று அறிந்து கொண்டு வாழ வேண்டும், என்பதற்காகத்தான் மனிதன் ஜோதிடம், அருள்வாக்கு போன்றவற்றை பார்க்கிறான். ஆனால் அவன் எதிர்காலம் அவன் எண்ணுவது போல் ஆக்கபூர்வமாக இருந்துவிட்டால் பாதகம் இல்லை. ஆனால் பெரும்பான்மையான மனிதர்களுக்கு அப்படி இல்லாதபோது எதைக் கூறுவது? அப்படி எதிர்காலத்தை பற்றி கூறி அச்சுறுத்துவதை விட, எதிர்காலத்தில் வரக்கூடிய விதி வழியாக எதிர் காலத்தில் வரக்கூடிய ஆபத்துகளை எல்லாம் மாற்றுவதற்கு அல்லது அந்த துன்பங்களை எல்லாம் தாங்குவதற்கு மனவலிமை அதிகரிக்கும் வண்ணம் பிரார்த்தனைகளையும், தர்மங்களையும் எம்மை நாடும் மனிதர்களுக்கு கூறினால் அதை, அவன் கவனமாக பின்பற்றிக் கொண்டே வந்தால் கட்டாயம், எதிர்காலம் என்பது சிறப்பாகவே இருக்கும். எனவே, இகுதொப்ப யாம் கூறுவது என்னவென்றால், எம்மை நாடும் தருணம், எது நடப்பினும் மனம் தளராமல் வந்தால், இறுதியில் இறைவன் அருளால், பரிபூரண வெற்றி என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
நல்லாசிகள்!
via சித்தன் அருள்
Wisdom of Siddhas சித்தரியல்
No comments:
Post a Comment