சித்தர்கள் The Ascended Masters
அகால மரணங்களைத் தவிர மற்ற மரணங்களை நாம் அழுவதை விடுத்துப் பறை அடித்து ஆடிப்பாடி கொண்டாடுவதே தமிழர் மரபு. ஏனெனில் நம் முன்னோர் இறப்பு-பிறப்புப் பற்றித் தெளிவாக அறிந்திருந்தனர். அதாவது உயிரானது ஆக்கப்படுவதும் இல்லை மற்றும் அழிக்கப்படுவதும் இல்லை. நம் உயிரானது பல் வகையான உடல்களுக்குள் நம் வினைகளுக்கேற்ப பிறப்பு-இறப்பு(கர்மா) சக்கரத்தில் மாட்டிப் பிறவிப்பிணியால் தொடர்ச்சியாக அவதியுறுகின்றது.
இவ்வாறான பிறவிப்பிணியை 'முற்றுப்பெற்ற குரு' முகாந்திரமாக நீக்கி, நாம் எங்கிருந்து வந்தோமோ அந்த வீட்டை மீண்டும் அடைவதே ஆன்ம விடுதலை / வீடு பேறடைதல் / இறையுடன் இரண்டறக் கலத்தல் / சாகாக்கல்வி / மரணமிலாப் பெருவாழ்வு / மோட்ச கதி / பேரின்பம் அடைதல் / பேரறிவு பெறல் / முக்தி அடைதல் / இறைநிலை(சிவபதம்) எய்தல் / முற்றுப்பெறல் எனப் பலபெயர்களால் அழைக்கப்படுகின்றன.
இது மனிதப் பிறப்பிற்கே சாத்தியம். ஆதலாலேயே மனிதப் பிறப்பு என்பது மிகவும் அரிதானதாகும். இந்த மனிதப் பிறப்பெடுக்க முன் நம் ஆன்மாவானது மனிதரல்லாத எண்ணிலாப் பிறப்புக்களை எடுத்துள்ளது என்கின்றனர் சித்தபெருமக்கள். பல பிறவிகள் எடுத்த பிறகே இந்த மானிடப்பிறவியை அடைகிறோம். சிவபுராணத்தில் "புல்லாய், பூடாய், புழுவாய், மரமாகி, பல் மிருகமாய், மனிதராய், பேயாய், கணங்களாய், வல் அசுரராய், தேவராய் சொல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் !" என்கிறார் ஆசான் மாணிக்கவாசகப் பெருமான்.
"அரிது! அரிது! மானிடர் ஆதல் அரிது
மானிடராயினும்..
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்தலாயின்
வானவர் நாடி வழி பிறந்திடுமே!"
- ஆசான் ஓளவையார்
பசித்திருந்து நோன்பு இயற்றுவதே தவம். பசித்தோர்க்கு உணவளிப்பதே உயர்ந்த தானம். தானமும் தவமும் செய்பவர்க்கு இறையருள் கைகூடும். அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. அதனிலும் அரிது கூன், குருடு, செவிடு இல்லாமல் பிறத்தல் அரிது, அதனிலும் அரிது ஞானம் கிடைத்தல் அரிது. அதனிலும் அரிது தானம், தவம் போன்றவை கிடைத்தல் அரிது என்றும். தானமும் தவமும் செய்யும் வாய்ப்புக் கிடைத்துவிட்டால் இறையுடன் இரண்டறக் கலத்தற்கான வழி தானே கிடைத்துவிடும் என்று கூறி இருக்கிறார் ஆசான் ஓளவையார் பெருமாட்டி
பிறவியே அறியாமை மிகு பேதமையென்றும், அந்தப் பிறப்பு-இறப்பு(கர்மா) எனும் பிணியை நீக்கி நாம் வெற்றி பெறுவதே உயர்ந்த அறிவென்கிறார் பிறவிப்பிணி நீக்கிய மகான் திருவள்ளுவப் பெருமான்.
''பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.''
- திருக்குறள் (ஆசான் திருவள்ளுவர்)
ஒருவர் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலையை விரும்ப வேண்டும். அதை (இறையிடம்) வேண்டினால் மற்றவை தானாகவே கிடைக்கும். எனவே, மீண்டும் மீண்டும் பிறந்து துன்பப்படாமலிருக்கப் பேரறிவான "பிறவாமை"யை நாம் இறையிடம் வேண்டுவோம்.
"வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்."
- திருக்குறள் (ஆசான் திருவள்ளுவர்)
"என்றானும் சாவாமல் கற்பதே கல்வி"
- ஆசான் ஔவையார்.
"பிறப்பென்பது பேதமை"
- ஆசான் திருவள்ளுவர்.
"சகாதவனே சன்மார்க்கி"
- ஆசான் வள்ளலார்
எனவே கிடைத்த இந்தப் பிறவியை ஒவ்வொருவரும் வீணாக்காமல் சரியாகப் பயன்படுத்திப் பலன் அடைய வேண்டும் என்கிறார் ஆசான் திருமூலர் பெருமான்.
“பெறுதர்கரிய பிறவியை பெற்றும்
பெறுதற் கரிய பிரானடி பேணார்
பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே”
- திருமந்திரம் (ஆசான் திருமூலர்)
ஓம் ஆசான் மாணிக்கவாசகர் திருவடிகள் சரணம்.
ஓம் ஆசான் ஓளவையார் திருவடிகள் சரணம்.
ஓம் ஆசான் திருவள்ளுவர் திருவடிகள் சரணம்.
ஓம் ஆசான் திருமூலர் திருவடிகள் சரணம்.
ஓம் எண்ணிலாக்கோடி சித்த, ரிஷி, கணங்கள் திருவடிகள் போற்றி
நன்றி!
-Nàthàn கண்ணன் Suryà
10/07/2015
. ஓங்காரக்குடில் Ongarakudil
Aum Muruga ஓம் மு௫கா
சித்தர் அறிவியல் Wisdom of Siththars
நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil
Posted by Nathan Surya
No comments:
Post a Comment