Thursday, July 20, 2017

ஓங்காரக்குடிலில் ஓர் அட்சயப்பாத்திரம்.


40+ ஆண்டுகளில் கோடிக் கணக்கானோர்க்கு
அன்னதானம், இலவசக்குடிநீர், மருத்துவம்...
ஓங்காரக்குடிலில் ஓர் அட்சயப் பாத்திரம்.


துறையூர் - இப்போது மிகவும் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு சிறு ஊர். இதற்குமுன் வறட்சி மிகுந்ததாக, இயற்கை வளம் குன்றியிருந்த இந்த ஊர் இப்போது பசுமைப் போர்வை போர்த்திக் கொண்டிருக்கிறது. இந்த மாற்றத்துக்குக் காரணம், துறையூரில் அமைந்திருக்கும் ஓங்காரக் குடில்தான்! தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிக சுவாமிகளின் அரிய முயற்சியால் உருவானதுதான் ஓங்காரக் குடில். ‘நல்லார் ஒருவர் உளரேல்’ என்ற வாக்கியப்படி, அந்தப் பகுதியின் வறட்சியைப் போக்கி நீர்வளம் மிக்கதாக ஆக்கியவர் சுவாமிகள்தான். வடலூரிலுள்ள வள்ளலார் திருக்கோயி லில் நிரந்தரமாக ஒளிரும் தீபத்திலிருந்து ஒரு பொறியை எடுத்துவந்து இங்கே ஓங்காரக்குடிலில் தீபமாக ஏற்றி வைத்து, வடலூர் போலவே அனைத்து ஆன்மிக நிகழ்ச்சிகளையும் மேற்கொள்கிறார்கள். திருச்சி, துறையூரிலிருக்கும் இந்த ஓங்காரக் குடிலில், சுவாமிகள் தலைமையில், சமீபத்தில் தைப்பூசத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

24.01.2016 அன்று காலை 6.30 மணியளவில் சரவணஜோதி தரிசனமும் தொடர்ந்து மகான் ஸ்ரீராமலிங்க சுவாமிகள் வகுத்த அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணமும் நடைபெற்றன. காலை 9 மணியளவில் குருநாதர் அன்பர்களுக்கும் பொது மக்களுக்கும் அருளாசி வழங்கினார். காலை 10 மணியளவில், பருவ மழை பெய்து நாடு செழித்திட வேண்டி முதுபெரும் தலைவன் முருகப்பெருமான், மகான் அகத்தியர், மகான் ஸ்ரீராமலிங்க சுவாமிகள் மற்றும் நவகோடி சித்தர்களை வணங்கும் சித்தர்கள் வழிபாடு நடைபெற்றது. பிறகு அன்பர்களின் வாழ்த்துரையைத் தொடர்ந்து குருநாதர் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் சிறப்பு அருளுரை வழங்கினார்கள். சித்திரா பௌர்ணமி, அகத்தியர் சித்தி தினம் ஆகியவையும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும் இத்தலத்தில் சமீபத்திய தைப்பூசத் திருவிழாவுக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து குழுமிவிட்டார்கள். சிங்கப்பூர், லண்டனிலிருந்தெல்லாம் வந்திருந்து ஆர்வத்துடன் விழா நிகழ்ச்சிகளில் அவர்கள் கலந்து கொண்டார்கள். மலேசியாவிலிருந்து மட்டும் 200 பேர் வந்திருந்தார்கள் என்றால், இத்தலத்தின் மேன்மை புரியும்.

பசிப்பிணி போக்கும் அட்சயப் பாத்திரமாகவே இந்த அற்புதத் தலம் விளங்குகிறது என்றால் மிகையில்லை. ஆமாம், காலை, மதிய வேளைகளில் தினமும் சுமார் 25,000 பேருக்கு அன்னதானம் அளிக்கப்படுகிறது - முழு சாப்பாடு! இதுதவிர, சுற்றியுள்ள ஏழு கிராமங்களைத் தத்தெடுத்து ஒவ்வொரு நாளும் ஒரு கிராமத்துக்கு சுடச்சுட அன்னதானம் அளிக்கப்படுகிறது. ‘மிச்சமில்லை, எச்சமில்லை’ என்பது இந்த அன்னதானத்தில் தாரக மந்திரமாகக் கடைபிடிக்கப்படுகிறது. அதாவது, தயாரிக்கப்பட்ட அன்னம் அனைவருக்கும் மிச்சமில்லாமல் பகிர்ந்தளிக்கப்படுகிறது. அதேபோல உணவு பெற்றவர் சிறிதளவேனும் எச்சம் (மீதம்) வைத்தால், அவையும் வாயில்லா ஜீவன்களுக்கு ஆகாரமாகிறது. அதேபோல டன் கணக்கில் தயாராகும் சாதம் வடிக்கப்பட்டு அந்த உலைநீர் ஒரு கால்வாய் வழியாக வெளியே விடப்படுகிறது. இந்த நீர் பக்கெட்டுகளில் சேகரிக்கப்பட்டு பசு முதலான கால்நடைகளுக்கு உணவாக அளிக்கப்படுகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்புவரை அடுப்பெரிக்க விறகு பயன்பட்டுவந்தது; இப்போது முற்றிலும் எரிவாயுதான். எச்சில்பட்ட பாத்திரங்களைப் படுசுத்தமாகக் கழுவி எடுக்க ‘டிஷ் வாஷர்’ இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. சமையலறையும் சுத்தத்திற்கு இலக்கணமாகத் திகழ்கிறது. குடிலின் ஆதரவில் இதுவரை 18,000 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. பொருளாதாரத்தில் நலிந்த பலர் இந்த உதவியால் கண்ணொளி பெற்று உலகைப் பளிச்சென்று பார்த்து மகிழ்கிறார்கள். இங்கே மிகவும் எளிய முறையில் திருமணமும் நடத்திவைக்கப்படுகிறது. ஆமாம், மொத்தத்தில் பத்தே நிமிஷம்தான்! மணமகன்-மணமகள் இருவரும் ஒருவருக்கொருவர் வலதுகை மணிக்கட்டில் காப்பு கட்டிக்கொள்கிறார்கள். ‘அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி’ என்று வள்ளலார் மந்திரம் சொல்கிறார்கள்.

பிறகு மணமகன், மணமகளுக்குத் தாலி கட்டுகிறார். இருவரும் தத்தமது பெற்றோருக்கு பாதபூஜை செய்கிறார்கள். பிறகு சுவாமிகளிடம் சென்று ஆசி பெறுகிறார்கள். அவ்வளவு தான்! இந்தவகையில் இதுவரை சுமார் 3000 திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன. பொதுவாக மடாதிபதிகளோ, ஓர் ஆன்மிக அமைப்பின் தலைவரான சுவாமிகளோ தன்னை வணங்கி ஆசிபெற வருபவர்களுக்கு விபூதி, குங்குமம், சந்தனம், புஷ்பம் அல்லது பழம் என்று தமது ஆசியுடன் அளிப்பார்கள். ஆனால், தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளோ அனைவருக்கும் சாக்லெட் அளிக்கிறார் - வாழ்க்கை இனிப்பாகவும், சுவையாகவும் (அந்த சாக்லெட் காகிதத்தைப் பிரிப்பதுபோன்ற சிறு பிரச்னை வந்தாலும், அதுவும் தன் அருளால் சீராகி) அமையவேண்டும் என்ற தன்னுடைய உளமார்ந்த அருளாசியுடன்!

நன்றி தினகரன் 25/02/16
- குடந்தை நடேசன்
ஓங்காரக்குடில் Ongarakudil
https://www.facebook.com/groups/ongarakudil
Aum Muruga ஓம் மு௫கா






நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 
bbb3



No comments:

Post a Comment