கள் (ஆங்கிலம்:toddy, கன்னடம்: ಕಲ್ಲು,தெலுங்கு: కల్లు, மலையாளம்: കള്ള്, இந்தி: ताड़ी) என்பது பனை, தென்னை போன்ற மரங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு வகையான போதை ஏற்படுத்தும் பானம் ஆகும். பனை அல்லது தென்னை மரங்களின் பாளையினை வெட்டி அதிலிருந்து வடியும் பால் போன்ற திரவம் மண் பானைகளில் சேகரிக்கப்படுகிறது. இந்த பானம் புளிப்பு கலந்த சுவையுடன் உள்ளது. இதை அருந்துபவர்களுக்கு போதை ஏற்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் பனங்கள் மற்றும் தென்னங்கள் மதுபானங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் கள் அருந்துவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது[2]. எனவே தமிழ்நாட்டில் பனங்கள் மற்றும் தென்னங்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை.
பனங்கள்
பனைமரம் பூ பூக்கும் தருணத்தில் பனைமரத்தின் உச்சியில் பனையோலைகளுக்கிடையே உருவாகும் குருத்து என்ற விழுதை சரியான முறையில் சீவி, அதனை ஒரு சிறிய மண் பாண்டத்தில் உள்ளிட்டு, மண் பாண்டத்தின் கழுத்துப் பகுதியில் கயிற்றால் கட்டி பின் மரத்துடன் கட்டுவர். மண் பாண்டத்தில் குருத்தில் இருந்து சொட்டு சொட்டாக வடியும் பனை நீரே பனங்கள்ளு ஆகும்.
பனங்கள்ளை அதிகமாக அருந்தினால் போதை உண்டாகும். பனங்கள்ளுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்தால் அதுவே பதநீர் எனும் இனிப்பான பானமாகும். கோடைகாலத்தில் பதநீரை தினமும் அளவுடன் குடித்தால் உடலில் உள்ள உஷ்ணத்தை நீக்கி குளிர்ச்சியை தர வல்லது. வாய்ப்புண், குடல் புண்கள் ஆற்றும் குணமுடையது.
பனங்கள்ளிலிருந்து பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனஞ்சக்கரை போன்ற இனிப்பு பண்டங்கள் தயாரிக்கப்படுகிறது. பனங்கருப்பட்டி பால், காபி, தேநீரில் கலந்து குடிக்க பயன்படுகிறது. மேலும் இனிப்புத் தின்பண்டங்கள் செய்ய பனங்கருப்பட்டி பயன்படுகிறது.
ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கள் குடிக்கிறார்கள். கள் உற்பத்தி செய்வது சில பனை இனங்கள் அருகி வரும் நிலைக்குத் தள்ளப்பட்டதிற்கு காரணமாகலாம் (எ.கா. சிலி நாட்டு பனை). ஆனால், சிறிய அளவில் கள் உற்பத்திச் செய்பவர்களாலும், தனிப்பட்ட விவசாயிகளாலும் வீட்டு வருமானத்திற்காக "கள்" மரங்கள் வளர்ப்பது இவ்வகை மர இனங்கள் பாதுகாப்பிற்கு வித்திடலாம்.
No comments:
Post a Comment