Tuesday, January 30, 2018

வள்ளலார்

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமனாரின் அருட்பாவில்.... ஒருபாவும் ; சமூக அக்கறையும்.... 

"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" -எனும் வரிகளை அனைவரும் கேட்டது உண்டு...

★அதுவும் தமிழகத்திற்கு விவசாய காலங்களில் காவிரி நீர் வராத பொழுதும் ; மழை பொய்த்த சூழலிலும் பெரும்பாலான மேடைகளிலும் - ஊடகங்களிலும் இவ்வரிகள் முழங்கப்படுகின்றன...

★இவ்வரிகளுக்குச் சொந்தக்காரர் வள்ளல் பெருமனார்..

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்..என்று தொடங்கும் திருஅருட்பாவின் அடுத்த அடி என்னவென்று தெரியுமா....?

★ "பசியினால் இளைத்தே வீடுதோற் இரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்..."என்பதே அந்த வரி...

★ஆம்>>> பசிக் கொடுமையினால் உடல் இளைத்தோர்கள் , வீடுதோறும் பிச்சை கேட்டும் உணவு கிடைக்காத ஏழை எளியோரைக் கண்டு தன் உள்ளம் நடுங்கியதாக வள்ளலார் குறிப்பிடுகிறார்.

★பசிக்கொடுமையினால் அயர்ந்து சோர்ந்த தமிழர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டுமென அத் துறவின் உள்ளம் துடிதுடித்தது...

★பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப்பகுதியான அன்றைய தமிழகத்தில் ஆங்கிலேய - அன்னியரின் சுரண்டலாலும் ; உணவு பஞ்சத்தாலும் பட்டினி சாவு அதிகரித்தன.....

★எந்த வகையாலும் ஆதாரம் (ஆகாரம்) இல்லாத ஏழை எளியோர்களுக்கு தினசரி பேதமின்றி உணவு வழங்க வள்ளலின் மனம் திட்டம் தீட்டியது... விளைவு...

★ஆதரவற்ற ஏழை எளியோர்களுக்கு தினசரி மதிய - இரவு உணவுகளை வழங்கும் நோக்கத்தோடு சத்திய தர்மச்சாலை எனும் அமைப்பை வடலூரில் வள்ளல் பெருமனார் தொடங்கினார்கள்

23/05/1867 -வைகாசி 11- ஆம் நாள் வியாழக்கிழமை ஏழைகளின் பசி தவிர்க்க சத்திய தர்மச்சாலை வடலூரில் தொடங்கப்பட்டது.


★சத்திய தர்மச்சாலையின் தொடக்க விழாவே புதுமையாய் அமைந்திருந்தது....

◆ஒருபுறம் சத்திய தர்மச்சாலையின் நிரந்தர கட்டிடத்திற்கான மனை முகூர்த்தம் - பூமி பூஜை நடந்துகொண்டிருந்தது..

◆மற்றொருபுறம் ... அப்பொழுதே சத்திய தர்மச்சாலை ஒரு தற்காலிக பந்தலில் - கொட்டகையில் தொடங்கி ஏழைகளின் பசியாற்றும் பணியைச் செய்துகொண்டிருந்தது..

★■◆●ஆம்>>> பொதுமக்களின் நலன் காக்கும் தர்மப்பணியின் அஸ்திவார தோண்டலும் - தர்மக் காரியத்தின் தொடக்க விழாவும் ஒருங்கே நடந்தேறியது....

★"நன்றே செய்க இன்றே செய்க" - என்ற தமிழ் மரபில் வந்த வள்ளலாரின் செயல் வீரத்தை என்னே என்பது....

★தர்மச்சாலையின் தொடக்க விழா நடைபெற்ற பொழுதே , அவ்விடத்தின் அருகில் கிணறு - குளம் முதலிய நீர் நிலைகளும் தோண்டப்பட்டன.

★சத்திய தர்மச்சாலையின் முதல் நாள் அன்னதானத்திற்கு , மாட்டு வண்டிகள் மூன்றில் அரிசி மூட்டைகளும் , ஒரு வண்டியில் காய்கனிகளும் வந்திருந்ததாக மு.அப்பாசாமி என்பவர் எழுதிய கடிதத்தால் அறிய முடிகின்றது... முதல் நாளில் மட்டும் சுமார் மூவாயிரம் பேர் சாப்பிட்டதாக மற்றொரு கடிதத்தால் அறியமுடிகின்றது.

★அத்தர்மச்சாலையின் நோக்கம் குறித்தும் பெருமனார் வெளியிட்டார்கள். அதில்..

"ஜீவ தயையுடைய புண்ணியர்கள் தங்கள் தங்களால் கூடியவரையில் பொருள் முதலிய உதவி செய்து , அதனால் வரும்லாபத்தை பாகஞ் செய்து கொள்ள வேண்டும்.. " என்று கோரிக்கை விடுத்தார்கள் பெருமனார்.

★வடலூரில் தர்மச்சாலையை ஒட்டி அப்பொழுது நிலம் வைத்திருந்த சுமார் நாற்பது பேர் ஒன்றுகூடி எண்பது காணி நிலத்தை இனமாகத் தர்மச்சாலைக்கு எழுதி பத்திரம் செய்து கொடுத்தார்கள்.

★தர்மச்சாலையின் தொடக்க விழாவில் பெருமனார் எழுதிய "ஜீவகாருண்ய ஒழுக்கம்" எனும் உரைநடை நூலின் சில பகுதிகள் வாசிக்கப்பட்டு விளக்கப்பட்டன.

"ஜீவகாருணியத்தின் முக்கிய லட்சியமாவது எது எனில் ; எந்த வகையாலும் ஆதாரமில்லாத ஏழைகளுக்கு உண்டாகின்ற பசி என்கின்ற பெரிய ஆபத்தை நிவர்த்தி செய்கின்றதே முக்கிய லட்சியம் என்று அறிய வேண்டும்..."

" பசி என்கின்ற நெருப்பானது ஏழைகள் தேகத்தினுள் பற்றி எரிகின்ற போது ஆகாராத்தால் அவிக்கின்றதுதான் சீவகாருணியம்..."

என்பன போன்ற பகுதிகள் தர்மச்சாலையின் தொடக்க விழாவில் விவரிக்கப்பட்டன..

★1867- வைகாசி 11- இல் தொடங்கிய சத்திய தர்மச்சாலை இன்று வரை 150-ஆண்டுகளாய் தொய்வின்றி , தடைபடாது - இடைவிடாது ஏழைகளுக்கு உணவு வழங்கி வருகின்றது.

★இப்பதிவின் தொடக்கத்தில் கூறிய ; வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்..." என்ற பாடலின் இரண்டாம் வரியின் செயல் வடிவமே தர்மச்சாலையாய் விளங்குகின்றது.

>>>அப் பாடலின் மூன்றாம் வரி என்னவென்று தெரியுமா....?

★ " ...நீடிய பிணியால் வருந்துகின்றோர் ; என் நேர் உறக் கண்டு உளம் துடித்தேன்..."

என்பதே அப்பாடலின் மூன்றாம் அடி...

★ஆம்>>>> அன்றைய தமிழர்கள் நோய்களால் - பிணிகளால் வருத்தப்படுவதைக் கண்டு வள்ளலாரின் மனம் துடிதுடித்ததாம்.......அதன்விளைவு...

★வள்ளல் பெருமனார் தம் மரபு வழி வந்த தமிழ்ச் சித்தர்களின் வழியில் , நோயாளிகளுக்கு சித்த வைத்தியத்தை தர்மச்சாலையில் வழங்கினார்கள்.

★ஆம்.....தர்மச்சாலை பசிப்பணியோடு ; நாள்பட்ட நோயிகளை நீக்கும் சித்த மருத்துவமனையாகவும் திகழ்தது.

.★ வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்... எனும் அவ் அருட்பாவின் நான்காம் அடி என்னவென்று தெரியுமா....

★" ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன் "

●இவ்வரிகளால் நாம் புரிந்துகொள்வது என்ன...?

தமிழகத்தில் மக்கள் ஏழைகளாய் வாழ்வதைக் கண்டு வள்ளலாரின் மனம் வருந்தியதை நாம் புரிந்துகொள்ள முடிகின்றது

★மக்களின் வறுமை ஒழிய என்ன செய்வதென்று அவ் அருள் உள்ளம் சிந்திக்க தொடங்கியது..

★மக்களின் பசிப்பிணிக்கும்... வறுமைக்கும்... நோய்க்கும்... மக்களின் அறியாமையே காரணம் என எண்ணினார்கள்.

★அதன் விளைவு..

தர்மச்சாலை வயிற்றுப் பசியை நீக்கிவதோடு.... மக்களின் அறிவு /ஞானப் பசியையும் நீக்கும் பணியில் ஈடுபட்டது

◆ தினசரி திருக்குறள் சொல்லிக் கொடுக்கப்பட்டது.

◆ மேலும் ; சன்மார்க்கப் போதினி - எனும் பாடசாலையின் மூலம் சிறுவர் முதல் முதியோர் வரை அனைத்து வயதினர்க்கும் கல்வி கற்பிக்கப்பட்டது

◆தர்மச்சாலையிலிருந்து சன்மார்க்க விவேக விருத்தி ' எனும் பத்திரிக்கை இதழும் வெளிவந்தது

★இவ்வாறாக 1867- வைகாசி 11-இல் வள்ளல் பெருமனாரால் தொடங்கப்பட்ட தர்மச்சாலை அன்றைய தமிழர்களின் வாழ்வில் புதிய வெளிச்சத்தை வழங்கியது.

★ தினசரி உணவு வழங்கியது

★ தினசரி நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கியது

★ தினசரி திருக்குறள் கற்பிக்கப்பட்டு தனிமனித ஒழுக்கத்தை வளர்த்தது

★ சிறுவர் முதல் முதியோர் வரை அனைவருக்கும் பல்வேறு அறிவு தகவல்களை சொல்லிக்கொடுத்தது

ஆம்>>> தர்மச்சாலை வள்ளலார் காலத்தில் சோறு வழங்குவதோடு மட்டுமில்லாமல் அறிவுசால் பல்கலைக் கழகம் போல் விளங்கியது.....

(ஆனால்...இன்றோ....? சன்மார்க்க சங்கத்தீர் சிந்திப்பீர்...!)

(கருத்துப் பதிவும் பகிர்வும் அருள்பாவலர் சக்திவேல் .வே. )


   

Related Articles


2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html






Posted By Nathan Surya

 Aum Muruga ஓம் முருகா 

No comments:

Post a Comment