Wednesday, June 7, 2017

அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு


எத்தனையோ தர்ம வழிகளை காட்டி அருளுகிறோம். எத்தனையோ, நீதி வழிகளைக் காட்டி அருளுகிறோம். எத்தனையோ சத்திய வழிகளைக் காட்டி அருளுகிறோம். எத்தனையோ இறை வழிகளைக் காட்டி அருளுகிறோம். எனவே, இறையே "காட்டானை" மீது அமர்ந்து வந்தாலும், தன்னைக் "காட்டானை, காட்டானை" என்றுதான் இறையே இருக்கிறார். அகுதொப்ப "காட்டானை" யை நீ பிடித்து, நன்றாக வழிபடு. "காட்டானை" உன் அருகில் இருக்க அதைத் தவிர வேறு "காட்டானை" எதற்கு? எனவே, "காட்டானை", "காட்டானை"யாக இருக்க, நாங்கள் மட்டும் காட்டி அருளும் தன்மைக்கு ஏன் வரவேண்டும்? இருந்தாலும், காட்டிக் காட்டி, காட்டி அருளுகிறோம். "காட்டானை" திருவடி வணங்கி, நாங்கள் காட்டி அருளுகிறோம். "காட்டானை" தன்னைக் காட்டாத, நாங்கள் காட்டி அருளுகிறோம். அந்தக் "காட்டானை" யின் திருவருளாலே, எங்களைக் காட்டி அருளுகிறோம். எங்களைக் காட்டி அருளுமாறு, அந்தக் "காட்டானை" அருள் புரிந்தால், நாங்கள், எங்களையும் காட்டி அருளுகிறோம். "காட்டானை" அருளவேண்டும் என்று தன்னைக் "காட்டானை" திருவடி வணங்கி வேண்டிக்கொள்.


மனம் ஒரு நிலைப்பட்டு செய்யக்கூடிய விஷயமே பூஜைதான். புற சடங்குகள் எதற்காக என்றால், உடலும், உள்ளமும் ஒரு புத்துணர்வு பெற்று அதை நோக்கி எண்ணங்கள் செல்ல வேண்டும் என்பதற்காக. ஆனால் புற சடங்குகள் நன்றாக செய்யப்பட்டு, மனம் மட்டும் அங்கே கவனம் குவிக்கப்படாமல், மனசிதைவோடு இருந்தால் அது உண்மையான பூஜை ஆகாது. அதற்காக மனம் சிதைகிறதே என்று, பூஜை செய்யாமலும் இருக்கக்கூடாது. செய்ய, செய்ய நாளடைவில் மனம் பக்குவம் பெற்று, பண்பட்டு ஒரு நேர் கோட்டில் செல்லத் துவங்கும்.

கலிகாலத்திலே, பூசைகள் கடினம் என்றுதான், தர்மத்தை உபதேசம் செய்கிறோம். இயன்றவர்கள், இயன்றவருக்கு, தக்கதொரு தர்மத்தை இயன்ற அளவுக்கு செய்து கொண்டே வரவேண்டும். ஒருநாள் போய்விட்டால், வாழ்க்கையில் அது நாள் அல்ல. வெட்டும் வாள். எனவே, ஒவ்வொரு தினமும் கழியும் போதும், அன்றைய தினத்தில், நாம், எத்தனை பேருக்கு உதவி செய்தோம்? எத்தனை மனிதனுக்கு நம்மால் பயன் ஏற்பட்டது? எத்தனை மனிதனுக்கு நாம் ஆறுதலாயிருந்தோம்? எத்தனை மனிதனுக்கு நாம், உடலால் உபகாரம் செய்தோம்? எத்தனை பேருக்கு வார்த்தைகளால், எண்ணங்களால், பொருட்களால், மருத்துவ உதவி செய்தோம்? எத்தனை பேருக்கு பசி தீர்த்து உதவினோம்? கல்வி கற்க உதவினோம்? என்றெல்லாம் சிந்தித்து, சிந்தித்து, அந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த, அதிகப்படுத்த, கூடவே, இறையருளும், எமது ஆசியும் தொடரும்.

விண்மீன்களாக மாறும்பல உன்னதமான ஆன்மாக்கள் , சதா சர்வ காலம் இறை தியானத்தில் இருப்பார்கள். தன் ஆக்க பூர்வமான கதிர்களை பூமிக்கும், மற்ற லோகங்களுக்கும் அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். எவையெல்லாம் (ஆத்மாக்கள்) இறைவனை நோக்கி வரவேண்டும் என்று துடிக்கிறதோ, அவற்றை மேலும் நல்ல பாதையில் தூண்டி விடுவதற்குமான முயற்சியில் அது போன்ற ஆத்மாக்கள் இறங்கி செயலாற்றிக் கொண்டேயிருக்கும்.


இயல்பாகவே ஒருவனிடம் ஏராளமான ஆஸ்தி இருப்பதாக்க கொள்வோம். அஃது அன்னவனுக்கு பெரிதாகத் தோன்றாது. இருக்கின்ற ஆஸ்தியெல்லாம் சிக்கலில் மாட்டி, தன் கையை விட்டுப் போய்விடுமோ என்கிற சூழல் வந்து அந்த அபாயத்தை அவன் தாண்டி, மீண்டும் அவன் எண்ணுகின்ற அந்த பெருஞ்செல்வம் அவன் கையிலே கிட்டினால், அது அவனுக்கு பெரிதாகவே தோன்றுகிறது அல்லது இயல்பாகவே தேகம் நன்றாக இருக்கும்பொழுது யாதொன்றும் தோன்றுவதில்லை மாந்தனுக்கு. ஒரு சிறு குறை ஏற்பட்டு அந்தக் குறை என்று அகலும் என்று எண்ணி, எண்ணி, ஏங்கி குறை அகன்றவுடன் சற்றே நிம்மதி கொள்கிறான். இறைவன் அருளாலே கூறுங்கால் அவன் கையில் இருக்கும் தனம் கையிலே இருந்தால் பெரிதாகத் தோன்றுவதில்லை. கையிலே இருக்கும் தனம் தொலைந்து கிட்டினால், பெரிதாகத் தோன்றுகிறது. இந்த மனித இயல்பும் மாயைக்கு உட்பட்டதே. எனவேதான் மாயை குறித்து எம்போன்ற மகான்களும், ஞானிகளும் அவ்வப்பொழுது மாந்தர் குலத்தை எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கிறோம்.

இறைவன் அருளாலே எம்மைப் பார்த்து "ஒரு தர்ம காரியம் செய்ய வேண்டும். செய்யலாமா?" என்று கேட்டால் "வேண்டாம்" என்று சொன்னால் எல்லோரும் என்ன கூறுவீர்கள்?  "சித்தர்கள் திருவாக்காலேயே வேண்டாம்"  என்று வந்துவிட்டது. "சித்தர்களே தர்மத்தை செய்ய வேண்டாம் என்று கூறும்பொழுது நாமும் அதை அனுசரித்தே நடக்க வேண்டும்" என்று அனைவருமே எண்ணுவார்கள். "சரி, செய்து கொள்ளலாம்" என்று கூறிவிட்டால் நடைமுறையில் சிக்கல் வரும்பொழுது, "இப்படியெல்லாம் சிக்கல்கள் வருகிறதே, எதற்காக சித்தர்கள் அருளாசி தந்தார்கள்?" என்று எம்மை நோக்கி வினா எழுப்புவார்கள். எனவே தர்மத்தை செய்ய வேண்டாம் என்று நாங்கள் ஒருபொழுதும் கூறவில்லை. ஆனால் அதே சமயம் "இப்படியொரு தர்ம காரியம் நடந்துகொண்டிருக்கிறது அல்லது நடக்க இருக்கிறது. எனவே பொருள் தாருங்கள், பொருள் தாருங்கள்" என்று பலரிடம் சென்று யாரும் வினவ வேண்டாம். இயல்பாக இங்கு நடப்பதையெல்லாம் புரிந்துகொண்டு தன்னை இணைத்துக்கொள்ளக்கூடிய மனிதன் வந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையென்றால் வேண்டாம். ஏனென்றால் மனிதர்களைப் பொருத்தவரை அவனாக விதிவழியாக சென்று எத்தனை லகரம் தனத்தையும் ஏமாற சித்தமாக இருப்பான். ஆனால் தானாக முன்வந்து ஒரு அறச்செயலுக்கு தனம் தருவது என்பது மிக, மிகக் கடினம். அதற்கும் விதியில் இடம் வேண்டும். தருபவன் உயர்ந்த ஆத்மா, தராதவன் தாழ்ந்த ஆத்மா என்ற ரீதியில் நாங்கள் கூறவில்லை.  தராத நிலையில் அவன் பாவக்கணக்கு இன்னும் இருக்கிறது. அவனுடைய பாவங்களும் தீரவேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொள்வதைத் தவிர, வேறு வழியேதுமில்லை.

தொண்டுகள் தொடர்ந்து செய்கின்ற எல்லோரையும் இறைவன் அருள் பெற்ற சேய்கள் என்று நாங்கள் கூறுவோம். எனவே நல்லதொரு வழிகாட்டக்கூடிய (இந்த பரந்த பாரத பூமியிலே பிறந்தது போல்) நூற்றுக்கணக்கான ஞானிகள் இல்லாத தேசத்திலிருந்தும் கூட ஒரு சில மகான்கள் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டு இருக்கக்கூடிய அந்த தேசத்திலிருந்து கூட இப்படி உன்னதமான தொண்டை செய்யக்கூடிய ஒரு நங்கை (அன்னை தெரசா) வந்திருக்கிறாள் என்றால் அது பாராட்டப்படக்கூடிய விஷயம். இந்த சேவை இல்லாததால்தான் இந்து மதம் என்று அழைக்கப்படுகின்ற இந்த மார்க்கம் களங்கப்பட்டு இருக்கிறது. எப்பொழுது சேவையும், பிரார்த்தனை எனப்படும் பக்தியும் பிரிந்து நிற்கிறதோ, அந்த மார்க்கம் வளராது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த (இந்து மதம் என்று நாங்கள் கூறவில்லை. புரிவதற்காக கூறுகிறோம்) இந்து மார்க்கமானது வளர வேண்டும் என்று ஆசைப்படக்கூடிய மனிதர்கள் ஜாதி, மத வேறுபாடுகளைக் களைந்து சேவைகளை அதிகப்படுத்தினால் கட்டாயம் இந்த மார்க்கம் உயர்ந்த மார்க்கமாக மாறும். உயர்ந்த கருத்துக்களைக் கொண்ட, ஆனால் அந்த கருத்துக்களைப் பின்பற்றாத மனித கூட்டம் கொண்ட ஒரு மார்க்கம் இது.

via சித்தனருள்

Related Articles


2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html





Posted By Nathan Surya

No comments:

Post a Comment