Tuesday, June 27, 2017

மகான் அகத்தீசர் (அகத்தியர்) பெருமை..!


சித்தர்கள் The Ascended Masters

உலத்தில் தன்னை அறிந்து தம்முள் இருக்கும் அரும்பொருளாகிய பரம்பொருளை தவமுயற்சியால் தட்டி எழுப்பியவர்கள்தான் ஞானிகள்/ சித்தர்கள் ஆவர். அந்த வரிசையில் காகபுசண்டர் என்று சொல்லப்பட்ட ஞானியே மிக உயர்ந்தவர் ஆவார். அவர் பலகோடி யுகங்கள் வாழ்கின்றவர். யுகம் முடியும் காலத்தில் காக்கை வடிவாக உருமாறி, மீண்டும் உலகத்தில் உயிரினங்கள் தோன்றும்போது மக்களுக்கு மனமிரங்கி உபதேசிப்பார். சதாரணமான மனிதர்ளுக்கு இதை நம்புவது கடினமாகவே இருக்கும். ஆசான் காகபுசண்டரும் ஆசான் அகத்தீசருடைய சீடராவார். ஆசான் அகத்தீசருக்கு எண்ணிலடங்கா ஞானிகள் சீடர்கள் ஆவர்.

அகத்தீசன் பெருமையை கணக்கிட்டு சொல்வதற்கு யாராலும் முடியாது. ஆசான் புசண்ட மகான் அவர்கள் காகபுஜண்டர் காவியம் ஆயிரத்தில் "அகத்தியரே பெரும்பேற்றை அடைந்தோர் ஆவார்" என்று முதல் வரியில் சொல்லியுள்ளார்.

அகத்தீசர் அவர்கள் அரும்பெரும் தவம் செய்தவர். அவரை காலையில் பத்து நிமிடம், "ஓம் அகத்தீசர் திருவடிகள் போற்றி" என்றும், மாலையில் அதேபோல் பத்து நிமிடம் நாமசெபம் செய்து வந்தால் அவர் பெற்ற பெரும் அருளை நமக்கு வழங்குவார். அவருடைய பாடல்கள் அத்தனையும் சாதாரண கல்வி கற்றவரும், எளிதில் படிக்கக்கூடிய முறையில் மிக ஆழமான கருத்துக்களை எளிய முறையில் பாடியுள்ளார். ஞானம் என்பதை உணரமுடியுமேயன்றி இன்னதென்று சொல்லமுடியாதது ஆகும். அது சாகாக்கல்வி ஆதலால் உடனேயே எடுத்தவெடுப்பில் அறியமுடியாதவொரு இரகசியம் ஆகும்.

அந்த இரகசியங்களை எவ்வாறு சொன்னால் வருங்கால தொண்டர்கள் உணர முடியுமோ? அதற்கேற்றாற்போல் வெளியாக பாடியுள்ளார். மேலும், அவர் பாடல் கேட்பதற்கு இனிமை உடையதாகவும் இருக்கும். அவர் தவம் செய்து தங்கிய இடம் பொதிகை மலை என்ற மேருவாகும். பொதிகை மலைக்கு அரசனும் அவரே ஆவார். அவருடைய கருணையே மேருமலைக்கு ஒப்பாகும். அவர் கருணையால்தான் இதற்குமுன் பலகோடி ஞானிகளும் கடவுள்தன்மை அடைந்துள்ளார்கள். மேலும், வருங்காலத்திலும் பலகோடி மானுடர்கள் பாவத்திலிருந்து விடுபட்டு கடவுள்தன்மை அடைய இருக்கிறார்கள். எனவே, அகத்தீசன் நாமத்தை சொன்னால் நவகோடி சித்தர்களும் நமக்கு உற்ற துணையாக இருந்து மலமாயையும், மனமாயையும், பந்த பாசத்தையும் நீக்கி என்றும் அழியாத பேரின்ப வாழ்வு தருவார்கள்.

நாம் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான வேதங்களையும் மற்றும் நூல்களையும் படித்தபோதிலும் அதிலுள்ள நுட்பங்கள் நமக்கு புரியாது. ஆனால் "ஓம் அகத்தீசர் திருவடிகள் போற்றி" என்று நாம ஜெபம் செய்தால் எல்லா நூல்களையும் படித்து அறிய முடியாத ஞான இரகசியங்களை நாமே அறிந்து உய்ய முடியும்.

ஒருசிலர் பல சாத்திரங்களை படித்துப்படித்து முதுமை வந்து இறந்து போனாரே தவிர ஒரு கடுகளவும் உண்மை தெரிந்துகொள்ளவில்லை. காரணம், ஆசான் திருவடியை பூசைசெய்து ஆசி பெறவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றுவதில்லை. ஞானவாழ்வு என்பது குரு அருளால்தான் கைகூடும் என்று புண்ணியவான்களுக்கு மட்டுமே புலப்படுவதாகும். நல்வினை இருந்தால்தான் குருவருள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். புண்ணிய பலம் இல்லாத கசடர்கள் தம்தம் திறமை கொண்டு முன்னேற முயற்சிப்பார்கள். இவர்களெல்லாம் களம் சார்ந்த பதராகும். அவர்களிடம் உண்மையை உணர்ந்தவர்கள் சொன்னாலும் யார் உபதேசமும் எனக்கு தேவையில்லை, எனக்கு கல்வி உள்ளது நானே படித்து தெரிந்து கொள்வேன் என்பார்கள். இவர்கள்தான் நடமாடும் சவமாகும்.

"அகத்தியரே பெரும்பேற்றை அடைந்தோர் ஆவார்
அம்மம்மா வெகுதெளிவு அவர் வாக்குத்தான்
அகத்தில் உறைபொருள் எல்லாம் வெளியாய்ச் சொல்வார்
அவர்வாக்கு செவி கேட்க அருமையாகும்
அகத்தியரின் பொதிகையே மேருவாகும்
அம்மலையும் அகத்தியரின் மலையுமாகும்
அகத்தியரின் அடையாளம் பொதிகைமேரு
அவர்மனது அவரைப்போல் பெரியார் உண்டோ."

- மகான் காகபுஜண்டர்

மகான் காகபுசண்டர் உலகமக்கள்பால் கருணை கொண்டு மேற்கண்ட பாடலை அருளியுள்ளார். வருங்கால ஆன்மீக தொண்டர்களுக்கு இந்த பாடலே உபதேசமாகும். எனவே அகத்தீசனை பூஜித்து ஆசிபெற்று கொள்வோம்! பெரும்பேற்றை பெற்று பேரின்பம் பெறுவோம்.

- ஓங்காரக்குடிலாசான்

ஓங்காரக்குடில் Ongarakudil




நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 
bbb3


No comments:

Post a Comment