ஆயினும் தன்னலமற்ற தியாகங்களும், கடுகளவு துவேஷம் இல்லாத மனமும், அகங்காரமில்லாத மனமும், சிந்தனையில் சாத்வீகமும், அந்த சாத்வீகத்தில் உறுதியும், செயலிலும், வாக்கிலும், எண்ணத்திலும் நேர்மையும், பிறர் செய்கின்ற அபவாதங்களையும், துன்பங்களையும் பொறுத்துக்கொண்டு அப்படி துன்பங்கள் எப்பொழுதெல்லாம் யார் கொடுக்கிறார்களோ அவர்களை நிந்திக்காமல், அவர்களை தரக்குறைவாக பேசாமல், ‘ இந்த மனிதன் துன்பத்தைத் தருவதுபோல் தோன்றினாலும் நாம் செய்த பாவங்கள்தான் இவன் மூலம் துன்பங்களாக வருகிறது ‘ என்று எடுத்துக்கொண்டு சமாதானம் அடைவதும், ஒரு காலத்தில் தன்னை மதிக்காமலும், ஏளனமாகவும், அவமானப்படுத்தியும் பல்வேறு கெடுதல்களையும் செய்த மனிதன் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் உதவிக்காக வரும்பொழுது முன்னர் நடந்ததையெல்லாம் எண்ணி பழிவாங்கும் உணர்வோடு செயல்படாமல் அவனை மன்னித்து பெருந்தன்மையாக நடத்துவதே ‘சித்தர்கள் வழி, சித்தர்கள் வழி‘ என்றெல்லாம் பலர் கூறுகிறார்களே ? அந்த வழியில் பிரதான வழியாகும். ‘சித்தர்களை வணங்குவேன், தலயாத்திரைகளும் செய்வேன், மந்திரங்களை உருவேற்றுவேன்.
ஆனால் பெருந்தன்மையோ, பொறுமையோ இல்லாது நடந்துகொள்வேன் ‘ என்றால் பலனேதுமில்லை. எனவே தளராத பக்தி, தடைபடாத தர்மம், உறுதியான சத்தியம், பெருந்தன்மை – இதுபோன்ற குணங்களை வளர்த்துக்கொண்டால் பெரும்பாலும் பாவங்கள் மனிதனை அதிகளவு தாக்காமலும், தாக்கினாலும் அதனைத் தாங்கிக்கொள்ளக்கூடிய ஒரு மனோபாவமும் ஏற்படும்.
இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரும் இறைவனின், மாற்று வடிவங்கள் என்பதை உணர்வதும் தனக்குள் உள்ள அண்ட சராசர பேராற்றலை உணர முயல்வதும்தான், துன்பமின்றி வாழ்வதற்கு ஒரு வழியாகும். அதற்கு, ஆன்மாவை படிப்படியாக எடுத்துச் செல்வதற்குத்தான், யாம் காட்டுகின்ற வழிமுறைகள், நெறி முறைகள், பக்தி வழிகாட்டுதல், ஆகமங்கள், தர்ம காரியங்கள்.
ஆனால் துன்பமில்லாத நிலையென்றால், இங்கு அவன் மனநிலை அகுதோப்ப மாறிவிடும் தவிர, வாழ்வு நிலை மாறாது, என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மனிதனுக்கு நோக்கமானது மாறிக்கொண்டே இருக்கும். இவன் நிம்மதியை ஒத்திப்போட்டுக்கொண்டே செல்வான். சந்தோஷத்தை ஒத்தி வைப்பதுதானே விதியின் வேலை, மாயையின் வேலை.
எனவே, இவற்றில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதுதான், மனிதனின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். அகுதொப்ப ஒரே தினத்திலோ, ஒரு சில ஆண்டுகளிலோ இதை செய்ய இயலாது என்பது எமக்கும் தெரியும். அந்த ஞானத்தை நோக்கி பயணத்தை துவங்க வைப்பதுதான், எமது பணியாக உள்ளது.
ஒரு மனிதனின் முன் ஜென்ம பாவத்தை குறைத்தால்தான், இகுதொப்ப விஷயமே அவன் சிந்தனைக்கு எட்டும், என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். தர்மம் செய்யாமல் ஒருவன் பாவங்களை குறைக்கவே இயலாது. படைப்பெல்லாம் இறைவனுக்கே சொந்தம். இந்த கருத்தை மீண்டும், மீண்டும், மீண்டும், மீண்டும் அசைபோட, துன்பங்களிலிருந்து வெளிவருவதற்கான வாய்ப்பு, ஒவ்வொரு மனிதனுக்கும், கிட்டும்!
ஆசிகள்! சுபம்!
ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி போற்றி
சித்தர் அறிவியல்
நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil
Posted by Nathan Surya
|| |More videos || || Contact தொடர்பு ||
No comments:
Post a Comment