அகத்தியப்பெருமான் உலகமக்கள் மீது இரக்கம் கொண்டருளிய அருள்வாக்கு
மகான் அகத்தியர் யோக சூட்சும நூல்
இவ்வுலகினில் தோன்றியதில் எண்ணற்றோர் தம்மை தோற்றியது எது? தோற்றியது யார்? எதனால் தோன்றினோம்? நமது நிலை என்ன? இனிவரும் நிலை என்ன? என்றெல்லாம் சிந்தித்து தமக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று உள்ளதென்றும் அதுவே நம்மை தோற்றி, காத்து, வளர்த்து, இயக்கி இறுதியில் அழித்தும் விடுவதை கண்டுபிடித்தார்கள். முயன்ற பல கோடி பேர்களில் ஒரு சிறு பகுதியினரே அவர்களில் கடவுள்தான் நம்மை தோற்றுவித்தார் என்றும் அந்த கடவுள்தான் நம்மை இயக்குகிறான் என்றும் நம்பினாலும் கடவுளானவரின் தன்மை என்ன? அவரின் வெளிப்பாடு எப்படி இருக்கும்? அவரது செயல்கள் எதுஎது? என்றும் அவனை காண்பது எப்படி? என்றெல்லாம் தொடர்ந்து முயன்றனர். ஒரு சிலர் அதன் முடிவாக கடவுள் நிலமாக உள்ளான்.
நிலமே கடவுள் என்றும் சிலர் கடவுள் நீராய் இருந்து உயிர்களின் ஆதாரமாக உள்ளான். நீர்தான் கடவுள் என்றும், ஒரு சிலர் நெருப்பை கடவுள் என்றும், ஒரு சிலர் கண்ணுக்கு புலனகாததும், உயிர்வாழ ஆதாரமாக உள்ள காற்றை கடவுளென்றும், ஒரு சிலர் இவற்றையெல்லாம் கடந்த வெட்ட வெளியான ஆகாயமே கடவுள் என்றும் எண்ணி அவரவர் முடிவுகளை பின்பற்றி நடந்திட ஆரம்பித்தனர்.
அதில் ஒரு சிலர் மூலிகைகள் பற்றி அறிந்தும் பயிற்சிகள் செய்தும் சிலசில விதமான முன்னேற்றங்களை கண்டனர். ஆனால் யாரொருவராலும் கடவுளின் தன்மையைப் பற்றியோ, கடவுளைப்பற்றியோ அறியவோ, நெருங்கவோ முடியவில்லை.
ஆனால் இயற்கையாகவே சிறப்பறிவு பெற்ற ஒருவன் ஜீவதயவின் பிரதிநிதியாக இவ்வுலகினில் தோன்றிய ஒருவனது சிந்தனை மட்டுமே மிக வித்தியாசமாக கடவுள் யார்? அவர் எங்கே இருக்கிறார்? அவர் என்ன செய்கின்றார்? அவர்க்கும் நமக்கும் என்ன தொடர்பு? ஏன் பிறக்கின்றோம்? ஏன் இறக்கின்றோம்? ஏன் வாழ்கின்றோம்? இவற்றிற்கெல்லாம் காரணம் என்ன?
இவற்றை நம்மால் புரிந்து கொள்ள முடியுமா? இதிலிருந்து நாம் விடுபடமுடியுமா? என்றெல்லாம் ஆராய்ந்து ஆராய்ந்து பல கோடி வருடங்களாக பாடுபட்டு பாடுபட்டு வந்தனன். ஒவ்வொரு ஜென்மத்திலும் அவன் ஒரு சில கேள்விகளுக்கு விடை கண்டுபிடித்தான். ஒரு கேள்வியின் விடை கிடைக்க ஒரு ஒரு ஜென்மமே தேவைப்பட்டது. இப்படி பல்லாயிரம் கேள்விகளுக்கு விடை கிடைத்தது, பல்லாயிரம் ஜென்மங்கள் கடந்தது. ஒரு ஜென்மத்திலே இந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்டங்களை தோற்றுவித்த இயற்கைதான் நம்மை தோற்றுவித்தது என்றும், அந்த இயற்கையே மாபெரும் சக்தியென்றும், அந்த இயற்கையே நமது தேகமாகவும் உருமாறி நிற்கின்றதையும் அறிந்து அந்த இயற்கையின் அதி சூட்சா சூட்சுமங்களும் நுட்பாதி நுட்ப இரகசிய இயக்கங்களும் உள்ளதையும் யாருக்கும் புரியாத நுட்பமான இந்த இயற்கையின் இயக்கமே கடவுளாகவும் கடவுள் சக்தியாகவும் உள்ளதை பலகோடி வருட ஆராய்ச்சியின் முடிவாக உணர்ந்தனர்.
உணர்ந்த அவன் இயற்கையின் விநோதங்களை விரிவாக ஆராய்ந்தனன். இயற்கையே எல்லா உயிர்களாகவும் எங்கும் நீக்கமற உரு மாறிமாறி பலவித தோற்றமும் பல்வித தேகமும் பலபல விதமான செயல்களையும் கற்பனைக்கும் எட்டாத வகையினிலே ஒரு சீரான கதியிலே இயங்குவதை கண்டான்.
இப்படி இயங்கும் இயற்கை எல்லா உயிர்களையும் தோற்றுவிக்கிறது, இயக்குகிறது, வளர்க்கிறது பின் ஒரு கால பரியந்தத்தில் அழிக்கின்றது. இவ்வாறு தோன்றி அழிந்து தோன்றும் இந்த சக்கர சுழற்சி கதி இயக்கத்திலிருந்து விடுபட்டால் இயற்கையை வென்று இயற்கைக்கு அப்பாற்பட்ட பரிணாம வளர்ச்சியினின்று விடுபட்ட என்றும் அழிவில்லாத நிலையையும் அடையலாம் என்பதையும் உணர்ந்தான்.
மூச்சுக்காற்று இயக்கம்தான் எல்லா உயிர்களின் இயக்கத்திற்கும் காரணமாக இருக்கின்றது என்ற மாபெரும் இரகசியத்தை கண்டுபிடித்தான். அந்த மூச்சுக்காற்று இயக்கமே உயிர்களின் வளர்ச்சிக்கு அவசியமான உணவை உட்கொள்ள ஆதாரமான பசிக்கு காரணமாக அமைகின்றது என்பதை அறிந்தும் அந்த பசியே நம்மை காக்கும் தாயாகவும், பசியின் மூலம் உணவை உண்ண செய்து உணவின் வழி சத்துகளை உடம்பினுள் சாரச்செய்து உடல் வளர்ச்சிக்கும், மலர்ச்சிக்கும் காரணமாகி அதுவே அந்த உடலின் தளர்ச்சிக்கும் காரணமாய் அமைந்து இறுதியில் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்துள்ளதையும் கண்டுபிடித்தான். இவற்றிற்கெல்லாம் காரணமான உயிர் இயக்கமும் உடல் இயக்கமும் அறிந்தான். உயிர் இயக்கமானது அந்தந்த உயிர்களின் உடல்சார்ந்த மூச்சுக்காற்று இயக்கத்தோடு பின்னி பிணைந்திருப்பதையும் கண்டுபிடித்தான். உயிர் என்றும் அழியாததையும் உடல் அழிந்து அழிந்து தோன்றுவதையும் கண்டுபிடித்தான்.
மூச்சுக்காற்றின் இயக்கமே உயிர் இயக்கமாகவும், அந்த மூச்சுக்காற்று இயக்கமே உடல் இயக்கமாகவும் இருக்கும் வரை அது இயற்கைக்கு கட்டுப்படுகிறது என்பதையும் உயிர் இயக்க மூச்சுக்காற்றின் இயக்கத்தையும், உடல் இயக்க மூச்சுக்காற்றின் இயக்கத்தையும் ஒருவிதமான வேதியியல் செய்து இணைத்துவிட்டால் என்றும் அழியாத உயிரின் தன்மையை அழியும் உடம்பும் பெறுவதையும் கண்டுபிடித்தான்.
இதை செயல்படுத்திட எல்லாம்வல்ல இயற்கை மனிததேகத்தில்தான் அந்த வேதியியல் செய்து வெற்றி பெறும் உடல் அமைப்பை வைத்துள்ளதையும் கண்டுபிடித்தான். உடலில் உடல்காற்று இடகலையாகவும், உயிர்காற்று வலகலையாகவும் மூச்சுக்காற்று இயங்குவதையும் இதற்கு இரண்டையும் சாராமல் வேறெந்த உயிர்களின் உடலிலும் காணப்படாத மனிததேகத்தில் மட்டுமே காணப்படுகின்ற ஒரு தனி நாடியான பிரம்மநாடி என்றும் சுழிமுனை என்றும் சொல்லப்பட்ட புருவமத்தியாகிய ஒரு தனி அமைப்பின் முன் செலுத்தினால் இடதுகலையும் வலதுகலையும் ஒன்று சேர்ந்து சுழிமுனையாகிய பிரம்ம நாடியில் ஒடுங்கி மரணமிலாப் பெருவாழ்வை அளித்து நம்மை பிறப்பு இறப்பற்ற நிலைக்கு கொண்டு சென்று அழியாத உயிரும், அழியும் உடல் வினைகாரணமாக ஏற்பட்ட மாசு நீங்கநீங்க அந்த உடல் தூய்மையான ஒளிபொருந்திய தேகமாக மாறி உடலும் உயிரும் இரண்டறக் கலந்து விடுவதையும் கண்டான் ஆதி ஞானத்தலைவன். அவனே சொல்லொண்ணா பேராற்றல் கொண்ட முதுபெரும் ஞானத்தலைவன் முருகப்பெருமான்.
இப்படி உடலையும் உயிரையும் சேர்க்கின்றதான மிகப்பெரும் நுட்பமான வேதியியல் செயல்முறைகளும், பயிற்சிகளும், உணவுக்கட்டுப்பாடும், உணவுமுறைகளும், மூலிகைகளும், உடல் தத்துவமும், உயிர் தத்துவங்களும் சேர்ந்து பின்னிப் பிணைந்துள்ள ஒரு அற்புதமான கலையே யோகக்கலையாகும். இந்த யோகக்கலையின் தலைவன் முருகப்பெருமானே. முருகப்பெருமான் தயவு இல்லையேல் யோகத்தின் ஒரு சிறு துளிகூட நமக்கு புரியாது. ஆனால் ஏதோ நாம் கற்றுக் கொண்டதாக எண்ணி தவறான பயிற்சிகளை செய்து இறுதியில் மாண்டுபோய்விடுவோம்.
ஆதலினால் யோகத்தை அறிய முற்படும் முன்னர் முதலில் ஆதிஞான யோகத்தலைவன் முருகப்பெருமானார் ஆசியினை முழுமையாக பெற வேண்டும் என்று உணர்ந்து முருகனது திருவருளைப் பெற உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சைவநெறியில் நின்று தூய சைவ உணவை மேற்கொண்டு முடிந்த அளவிற்கு மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்து ஜீவதயவை பெருக்கி ஜீவதயவின் கடவுளாம் முருகனது திருமந்திரமான “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்ற மூலமந்திரத்தை காலை 10 நிமிடமும் மாலை 10 நிமிடமும் முடிந்தால் இரவு 10 நிமிடமும் பூஜை செய்து மந்திர உருஜெபித்து வரவர ஜீவதயவு பெருகி முருகன் அருள்கூடி யோகத்தை அறிந்து கடைத்தேறலாம்.
இப்படிப்பட்ட யோகமெனும் ஞானத்தின் பகுதியாக ஞானமடைவதற்கு உறுதுணையாக உள்ளதான யோகப்பயிற்சிகளை எம்பெருமான் முருகப்பெருமானது அருளாசிகளை முழுமையாக பெற்று சித்துக்களையும் பலவிதமாய் பெற்று ஜீவ முக்திகளாக ஆகினார்கள் பலகோடி ஞானிகள்.
அவ்விதமே பொல்லா மாமாயை சூழ் கலியுகத்திலும் யோகத்தினை உறுதியுடன் கடைப்பிடித்து பல கடினமான யோக சாதனங்களை செய்து வெற்றி பெற்று மேன்மையான ஞானமதனை பெற்ற உயர் ஞானி எம்பெருமானின் அவதாரமே! முருகனே! அவதாரமாக வந்து உதித்திட்ட வள்ளல் ஞானி ஆறுமுக அவதார அரங்கமகா தேசிக ஞானியே தாம் யோகநிலையினில் அமர்ந்துமே உயர்வான தர்மத்தை செய்து உலகோரையெல்லாம் காத்து இரட்சிக்கின்றாய்.
ஆதலினாலே உமது அளவிலா தர்மத்தினைக் கண்டுமே வியந்து யோகபலம் பெற்றுயர்ந்த ஞானிகள் நவகோடி சித்தர்களாகிய நாங்களெல்லாம் உம்பால் கருணை மிகக் கொண்டுமே உம்மை சார்ந்து அருளி நிற்கின்றோம். எங்கள் அனைவருக்கும் மூலகுருநாதனான ஆசானே! முருகனின் அவதாரமே! அருள்மிகு ஆறுமுக அரங்கமகாதேசிக ஞானயோகியே! உமது புகழ் சிறக்கவே சொல்லற்கரிய உமது புகழை உலகெலாம் அறிந்திடவே ஞானிகள் நாங்களெல்லாம் யோக சூட்சும நூல்தனையே உரைத்து நிற்க இருக்கின்றோம். அதன் வழியே உமது புகழை உலகம் அறிந்திடவே அகத்தியர் யானும் யோக சூட்சும நூல்தனையே உரைத்து நிற்கின்றேன் என்கிறார் மகான் அகத்தியர்.
உலகோரெல்லாம் பயனடையவும், கடமைகள் சூழ்ந்திட்ட இல்லறத்தார்களும் கடைத்தேறிடவே அவர்களும் கடைப்பிடித்திடவே எளிமையான முறையினிலே நெறி அமைத்து அவர்களெல்லாம் யாகங்களும், யோகங்களும், ஞான பயிற்சிகள் என்றும் கடினமான பயிற்சிகளும், சடங்குகளும் செய்யாமலேயே நல்வழிதனை அடைந்திடவே அருளுகின்றேன் யோக சூட்சும நூல்தனிலே.
பிரபஞ்சத்தின் சக்தி மிக்க ஆற்றலாம், பிரபஞ்ச பேராற்றலை தன்னுள் அடக்கிய யோக சக்திதனை பலபிறவிகளில் பலவாறாய் செய்து அருளையும், ஆசிகளையும் எல்லா சக்திகளிடத்தும் பெற்று அருளாற்றலாய் மாபெரும் ஆற்றல் கொண்டு இப்பிறப்பினிலே முருகப்பெருமானின் அவதாரமாகவே தோன்றிட்டார் அருள்மிகு ஆறுமுக அரங்கமகாதேசிக ஞானயோகி. முருகனின் அவதாரமான அரங்கன் இன்று இக்கலியுகத்தினிலே முருகனின் சக்தி வடிவமாக இயங்கி மக்களுக்கெல்லாம் அருள் செய்து வருகின்றார். ஆதலின் உலகமக்களே நீங்களெல்லாம் நலம் பெற்று உயர்ஞான வாழ்வினை வாழ்ந்திடவே ஞானயோகி அரங்கமகா தேசிகனார் வாழும் இடமான துறையூரிலே அமைந்திட்ட ஏழாம் படைவீடாம் ஓங்காரக்குடிலினை நாடிச்சென்று பயபக்தியுடன் வணங்கிட்டாலே போதும், வணங்கி வழிபட்டோர் தமக்கு வல்லமைகள் கூடுமப்பா.
இன்றைய காலத்திலே கலியுகத்திலே கலியுக யுகமாற்ற தலைவனாக பொறுப்பேற்றுமே இன்றைய நாளிலே இவ்வுலகினிலே வாழும் ஒரே ஒரு ஞானயோகியாக மக்கள் பொருட்டு தன்னலம் பாராது மக்கள் நலனே தனது நலனாகக் கொண்டு தன்னிகரற்று விளங்கி நிற்கின்ற தயாநிதி தனிப்பெருங் கருணைக் கடவுளாக விளங்கி நிற்கின்ற மாட்சிமை பொருந்திய ஆறுமுக அரங்கமகா தேசிகர் தம்மை கண்டு வணங்கி அவர்தம் திருவடி பணிந்து பயபக்தி விசுவாசத்துடன் நடந்து பணிந்து வேண்டி தீட்சை உபதேசம் பெற்றிட வேண்டும்.
அரங்க தீட்சை பெற்றும் அரங்கர் உபதேசித்த வழிதனிலே மீறாது நடந்து தினம்தினம் மறவாமல் அரங்கன் அருளிய ஞானியர் பூசை முறைகளிலே பற்று கொண்டு ஞானியர்களை தவறாது தொடர்ந்து வழிபட்டு வருவதுடன், அவரவர் இல்லத்தினிலே தினம்தினம் தவறாமல் சரவண ஜோதிதனை ஏற்றி “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்று மூலக்கடவுளின் மூலமந்திரத்தை மந்திர ஜெபமாக ஜெபித்து உருஏற்றியும் வருவதோடு அவரவரால் முடிந்த அளவிற்கு பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும் வாழ்விலே ஒருபோதும் உயிர்க்கொலை செய்து புலால் உண்ணாதிருப்பேன் என்ற வைராக்கியம் மேற்கொண்டு சுத்த சைவ உணவை மேற்கொண்டு தவறாது கடைப்பிடித்து வருகையுற்றும், வருகின்றவர்களுக்கு உலகமகா ஞானயோகி அருள்மிகு ஆறுமுக அரங்கமகாதேசிக ஞானயோகியின் ஆற்றல் கிடைக்கப்பெற்று அரங்கனின் ஆற்றல் தூயநெறி நின்றோர் தம்மை தொடர்ந்து வலம் வரும்.
அவர்களுக்கு உண்டான தக்க அருள்பலத்தையும், ஞான பலத்தையும், யோக பலத்தையும், மன பலத்தையும், புண்ணிய பலத்தையும் தந்து குருவாம் அரங்கனருள் ஆற்றல் கூடி நின்று யோகம் கற்றதினால் வருகின்ற யோகசக்திகளுக்கு மேலான குறைவற்ற சக்தி நிலைதனை தரும்.
உலக மக்களே நீடித்த வாழ்வு பெறவும், நிலையாமையாகிய பிறந்து இறந்து மறுபடியும் பிறக்கின்ற நிலையற்ற வாழ்வை நீக்கி பிழையற்ற வகையிலே அருள் பெற்று என்றும் மாறா இளமையும், மரணமற்றதும், நிலையான வாழ்வாகிய மரணமிலாப் பெருவாழ்வு எனும் பெறுதற்கரிய பெரும்பேற்றை காண வேண்டுமாயின் இவ்வுலகின் மிகப்பெரும் யோக ஞானி அருள்மிகு ஆறுமுக அரங்கமகாதேசிக ஞானயோகியின் வழிதனை கடைப்பிடித்து கடைத்தேற்றம் பெற்று உயருங்கள் என தமது யோக சூட்சும நூல் மூலம் கூறுகிறார் மகான் அகத்தியர் பெருமான்.
- சுபம் -
சித்தர் அறிவியல்
நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil
Posted by Nathan Surya
|| |More videos || || Contact தொடர்பு ||
No comments:
Post a Comment